கட்டுரைகள்
உக்ரைனுக்கு அள்ளிக் கொடுக்கும் அமெரிக்கா! வியட்நாம் – ஆப்கான் – ஈராக் நிலமை ஏற்படுமா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
இதுவரை காலமும் அமெரிக்க செனட் சபையில், இழு பறி நிலையில் இருந்த பிரச்சனை சில தினங்களுக்கு முன்னர் சுமூகமாக முடிவடைந்துள்ளது. அதுவே உக்ரைனுக்கு ஆயுதங்களை
அள்ளிக் கொடுக்கும் அமெரிக்காவின் முடிவாகும்.
நீண்டு செல்லும் இப்போரும் வியட்நாம் – ஆப்கான் – ஈராக் போல ஆயுதங்களை போட்டு விட்டு ஓட வேண்டிய நிலமை அமெரிக்காவிற்கோ அல்லது ரஷ்யாவிற்கோ ஏற்படலாம்.
வியட்நாமில் அமெரிக்க தோல்வி:
ஏன் எனில் முன்னைய வரலாற்று நிகழ்வுகளை உற்று நோக்கினால் இந்த உண்மை புலப்படும். வியட்நாமில்
எதிரியிடம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு நகரத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை வெளியேற்றும் நிகழ்வு, அப்போதய செய்தித் தாள்களின் முதல்பக்கத்தில் வெளிவந்து அதிர்ச்சியூட்டின.
அன்று வியட்நாமில் நடந்தது, பின்னர் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவிற்கும் – அமெரிக்காவிற்கும் ஏற்பட்டது. ஆயினும் இதில் மேலோட்டமான ஒற்றுமை இருந்தாலும் சில முக்கியமான வேறுபாடுகளும் உள்ளன.
வியட்நாம் 1954 க்குப் பிறகு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு வியட்நாமில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருந்தனர், தெற்கு வியட்நாமின் அரசியல் சக்திகள் அமெரிக்காவை நோக்கிச் சென்றன. ஒவ்வொரு தரப்பினரும் வியட்நாமை ஒன்றிணைக்க முயன்றனர்.
1965 முதல், தென் வியட்நாமிய ஆட்சிக்கு அமெரிக்கா வெளிப்படையான இராணுவ உதவியை வழங்கியது. வழக்கமான அமெரிக்க துருப்புக்கள், தெற்கு வியட்நாமின் இராணுவத்துடன் சேர்ந்து, வட வியட்நாம் துருப்புக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றன.
ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் இராணுவ நிபுணர்களுடன் வடக்கு வியட்நாமுக்கு மறைக்கப்பட்ட உதவி சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவால் வழங்கப்பட்டது. 1975 இல் வடக்கு வியட்நாம் கம்யூனிஸ்டுகளின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்தது.
ஆப்கானில் ரஷ்யாவின் தோல்வி:
முதல் ஆப்கான் போரானது
மாஸ்கோவை நோக்கிய ஒரு அரசியல் ஆட்சியை ஆதரிப்பதற்காக சோவியத் ஒன்றியம் 1979 இல் ஆப்கானிஸ்தானுக்கு துருப்புக்களை அனுப்பியது. முஜாஹிதீன்களுக்கு எதிராக சோவியத் துருப்புக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இராணுவம் போரிட்டது.
அமெரிக்கா மற்றும் நேட்டோவின் ஆதரவை அனுபவித்த ஆப்கானிஸ்தானின் முஜாஹிதீன்கள் அதற்கேற்ப அவர்களுடன் ஆயுதம் ஏந்தியிருந்தனர். சோவியத் துருப்புக்கள் 1989 இல் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர், அவர்கள் வெளியேறிய பிறகும் போர் தொடர்ந்தது.
மீண்டும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பு நடந்தது. இம்முறை அமெரிக்கா 2001 இல் தனக்கு சார்பான ஆப்கான் அரசை நிறுவியது. ஆயினும் இறுதியில் ஆப்கானில் உள்நாட்டு அரசாங்கங்களை மீண்டும் கட்டமைக்க முயன்றபோது பலத்த சிக்கலில் சிக்கியது.
ஆப்கானில் அமெரிக்காவின் தோல்வி:
ஆப்கானில் அமெரிக்காவின் தோல்வியை சான்று பகரும் வண்ணம், காபூல் விமான நிலையத்தில் இருந்து வந்த இதயத்தை நொறுங்கச் செய்யும் புகைப்படங்கள், இந்த விமர்சனங்களுக்கு வலுச் சேர்க்கின்றன. மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானில் நிறைய ரத்தத்தைச் சிந்தியிருக்கின்றன.
அத்துடன் பல்லாண்டுக்கணக்கில் பெரும் பணத்தை செலவிட்டிருக்கின்றன. இவற்றை விட ஆப்கானியர்கள் கொடுத்திருக்கும் விலை இன்னும் அதிகம் என்பதே உண்மையாகும்.
இறுதியில் வியட்நாம், ஈராக் போல கனரக ஆயுதங்களை போட்டு விட்டு காபூலில் அமெரிக்க ஓடிய காட்சிகள் வெளிவந்தன. தற்போது உக்ரைனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் அமெரிக்காவின் ஆயுதங்களுக்கும் இதே நிலமை ஏற்படுமா என்பதும் எதிர்காலத்தில் தெரியவரும்.
உக்ரைனுக்கு அமெரிக்க ஆயுதங்கள்:
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் இரண்டரை வருடங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட கால அடிப்படையில், சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான அதி நவீன ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க உள்ளது.
சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் ராணுவ உதவியுடனும் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.
இந்த சூழலில், உக்ரைனுக்கு ஆதரவாக புதிய ராணுவ உதவிப் பொதியை அறிவிக்கும் என வெள்ளை மாளிகை ஏற்கெனவே தெரிவித்து இருந்தது. 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
குறித்த ஆயுதங்கள் அமெரிக்காவில் இருந்து போலந்தில் உள்ள நேட்டோ கட்டளைத் தளம் சென்று , அங்கே இருந்து படிப்படியாக உக்ரைன் கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவுடன் நேரடி மோதல்:
இந்த ஆயுதங்கள் உக்ரைன் நாட்டை அடைந்தால், அது ரஷ்யாவுடன் நேரடியா மோதுவதற்கு சமன் என்று ரஷ்யா அதிபர் புட்டின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு. மூன்றாம் உலகப் போர் ஒன்றை ஆரம்பிக்க அமெரிக்க விரும்பியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதில் பல வான் பாதுகாப்பு கட்டமைப்பு, டாங்கி எதிர்ப்பு பீரங்கிகள், கவச வாகனங்கள், குறும் தூர ஏவுகணைகள், என்று பல ஆயுதங்கள் அடங்குகிறது.
இதனூடாக உக்ரைன், மிகப் பலம் பொருந்திய இராணுவத்தை உருவாக்க உள்ளது. அதி நவீன ராடர்கள், மின் காந்த அலைகளை உருவாக்க கூடிய ஏவுகணைகள் என்று பல தரப்பட்ட ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு அள்ளிக் கொடுக்க உள்ளது. இது ரஷ்யாவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, பெரும் முட்டுகட்டையாகவும் அமைய வாய்ப்புகள் உள்ளது.
இஸ்ரேலுக்கும் அதிக உதவி:
இதேவேளை 26 பில்லியன் டாலர்கள் ஆயுதங்களை இஸ்ரேலுக்கும் வழங்க, அமெரிக்க சென்ட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய கிழக்கில்
இஸ்ரேலியர்களுக்கு இதே போன்ற பிரச்சனை உள்ளது என்று அமெரிக்க இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
உக்ரைனுக்கு ஆயுதங்களை
அள்ளிக் கொடுக்கும் அமெரிக்காவின் நிலையானது, வியட்நாம் – ஆப்கான் – ஈராக் போல ஆயுதங்களை போட்டு விட்டு ஓடும் நிலைமை ஏற்படலாம்.
அதேவேளை நீண்டு செல்லும் இப்போரும் ஆப்கானில் சோவியத் துருப்புக்கள் பின்வாங்கிய நிலமை போல, உக்ரேனிய களத்தில் ரஷ்யாவிற்கு ஏற்பட சாத்தியங்கள் உண்டு.