அமெரிக்காவின் செயற்பாட்டுக்கு இலங்கை மாணவர் அமைப்பு கண்டனம்
அமெரிக்காவின் (America) செயற்பாட்டுக்கு இலங்கையின் முன்னணி மாணவர் அமைப்புக்களில் ஒன்றான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாகவும் இது கண்டிக்கத்தக்கது எனவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பலஸ்தீன (Palestine) மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனத்தில் இடம்பெற்று வரும் இனவழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் மாணவர்கள் கைது செய்யப்படுவதனை ஏற்க முடியாது என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சில இடங்களில் கண்ணீர்ப்புகைப் பிரயோகம், இறப்பர் குண்டுத் தாக்குதல் என மாணவர்கள் மீது பல்வேறு வழிகளில் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
அதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதனை கண்டிப்பதாகவும் அமெரிக்க அரசாங்கம் இதனை தவிர்க்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.