லண்டன் சென்ற விமானத்தில் குழப்பம் – மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் விமான சேவை
லண்டனுக்கான UL 503 விமானம் ஒஸ்ரியாவில் உள்ள வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை மன்னிப்பு கோரியுள்ளது.
மருத்துவ அவசரம் காரணமாக இந்த விமானம் இவ்வாறு தரையிறங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை வெளியிட்ட அறிக்கையில், மே மாதம் முதலாம் திகதி 272 பயணிகளுடன் லண்டனுக்குப் புறப்பட்ட UL 503 விமானம், மருத்துவ அவசரநிலை காரணமாக வியன்னாவில் தரையிறங்கியதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
அதைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. லண்டன் நேரப்படி இரவு 10 மணி அளவில் ஹீத்ரோ விமான நிலையத்தை அடைய முடியாமல் போய்விடும் என்பதால் பயணம் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக UL 503 விமானம் மறுநாள் புறப்படுவதற்கு மாற்றப்பட்டது. ஐரோப்பாவிற்கு விசா பெற்ற அனைத்து பயணிகளுக்கும் வியன்னாவில் தங்குமிடம் வழங்கப்பட்டது. விமானம் அடுத்த நாள் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது.