வேலைநிறுத்தத்தை அறிவித்த பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஒன்றியம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஒன்றியம் (UEOA), தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஒன்றியத்தின் செயலாளர் க.ஞானபாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகள் மற்றும் அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில்,
கல்வி அமைச்சர், திறைசேரி அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
ஜனவரி முதல் மார்ச் வரை நடத்தப்பட்ட அடையாள வேலைநிறுத்தங்களும் அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பரிசீலனையைப் பெறுவதில் தோல்வியடைந்தன.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள், மாணவர்கள், கல்விச் சமூகங்கள், பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிற தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து எமது ஒன்றியம் ஆதரவையும் புரிதலையும் நாடுகிறது.
சுமூகமான பல்கலைக்கழக சூழலை வளர்ப்பதற்கு தொழிலாளர் உரிமைகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒற்றுமை முக்கியமானது. தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்படும் அசௌகரியங்களுக்காக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் ஒன்றியம் வருந்துகிறது – என்றுள்ளது.