முச்சந்தி

இறுதிவரையில் தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த ஈழவேந்தன் கனடாவில் விடைபெற்றார்! … முருகபூபதி.

தனது வாழ்நாள் முழுவதும் தமிழுணர்ச்சிப் பிழம்பாக வாழ்ந்தவர் மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் என்ற இயற்பெயரைக்கொண்டிருந்த ஈழவேந்தன்.

கனடாவில் தமது 91 ஆவது வயதில், உடல் நலக்குறைவினால் அண்மையில் மறைந்துவிட்டார்.

முதல் முதலில் அவரை, கொழும்பு மத்திய வங்கியில் 1973 ஆம் ஆண்டு ஒருநாள் மதிய உணவுவேளையில் சந்தித்தேன். என்னை அவரிடம் அழைத்துச்சென்றவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்.

அக்காலப்பகுதியில் எமது சங்கம், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினை உருவாக்கியிருந்தது. அதில் ஈழவேந்தனையும் உறுப்பினராக இணைத்துக்கொள்வதற்காகத்தான் அவர் பணியாற்றிய மத்திய வங்கிக்குச்சென்றோம்.

1970 இல் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – லங்கா சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து கூட்டரசாங்கம் அமைத்திருந்தது. 1972 இல் உருவான புதிய அரசியலமைப்பினால், தமிழ்த் தேசியப்பற்றாளர்கள் வெகுண்டிருந்த காலம்.

அன்றைய சந்திப்பின்போதும், அவர் தூய வெள்ளை நிற வேட்டி நெஷனல் அணிந்திருந்தார். அவர் எம்முடன் இலக்கியம் பேசாமல், தமிழ் உணர்ச்சிப்பெருக்கோடு, உரையாற்றினார். அதன்பின்னரும் அவரை நான் பல தடவைகள் சந்தித்து பேசியிருக்கின்றேன்.

அக்காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூர் இந்து இளைஞர் மன்றத்தில் பொதுச்செயலாளராகவிருந்தவர் பேரின்பநாயகம். இவர் தமிழ் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்திலும் செயலாளராகவிருந்தார். ( பின்னாளில் அமிர்தலிங்கம், மற்றும் அநுரா பண்டாரநாயக்கா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்தபோது, இவர்தான் அவர்களின் செயலாளர் )

1974 ஆம் ஆண்டு எமது இந்து இளைஞர் மன்றத்தில் நடந்த கலைமகள் விழாவில் திருக்குறள் சமய நூலா ? சமூக நூலா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தபோது, அதற்கு தலைமை தாங்குவதற்கு செயலாளர் பேரின்பநாயகம், ஈழவேந்தனை அழைத்து வந்தார்.

நான் திருக்குறள் சமூக நூல் என்று வாதிட்ட அணிக்குத்தலைமை தாங்கினேன். நண்பர் நவரட்ணராஜா , சமய நூல் என்ற அணிக்கு தலைமை தாங்கினார்.

ஈழவேந்தன், திருக்குறள் சமூகத்திற்காகப்பேசிய அறநூல் என்று தீர்ப்பு வழங்கினார். அன்று இரவு மன்றத்தின் துணைத்தலைவர் மருத்துவர் சோ. பாலசுப்பிரமணியம் அவர்களின் இல்லத்தில், ஈழவேந்தனுக்கு இராப்போசன விருந்து வழங்கிய பின்னர், மருத்துவரின் காரிலேயே அவரை கொழும்புக்கு அழைத்துச்சென்று அவரது வீட்டில் விட்டு வந்தோம்.

நுகேகொடையிலிருந்த அவரது இல்லத்தின் பெயர் தமிழகம்.

அந்த ஒரு மணிநேர இரவுப்பயணத்திலும் ஈழவேந்தன் உணர்ச்சிப்பெருக்குடன் எம்முடன் உரையாடிக்கொண்டு வந்தார்.

அக்காலப்பகுதியில் ஆறுமுகநாவலரின் 150 ஆவது பிறந்த தினம் வந்தது. எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெள்ளவத்தை இராமகிருஷ்ண ( சிறிய ) மண்டபத்தில் அதனை முன்னிட்டு ஒரு கருத்தரங்கை நடத்தியது.

பேராசிரியர் கைலாசபதியும் கல்விப்பணிப்பாளர் முகம்மது சமீமும் அந்தக்கருத்தரங்கில் உரையாற்றினர். கைலாசபதி, தனது மார்க்சீயப்பார்வையில் நாவலரை ஆய்வுசெய்து பேசினார்.

வடபுலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய காலப்பகுதியில், நாவலர், அங்கு கஞ்சித்தொட்டி இயக்கம் நடத்தியதை சுட்டிக்காட்டி கைலாஸ் பேசியபோது, “ நாவலர் அதற்கும் அப்பால் சென்று தமிழ் உணர்வை வளர்த்தவர். “ என்று ஈழவேந்தன் குறுக்கிட்டுப் பேசினார்.

இந்தக்குறுக்கீடு, சபையில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. செய்தி வேட்டையில் கவனம் செலுத்தும் எனக்கு துரும்பு கிடைத்தது. இராமகிருஷ்ண மிஷன் தொலைபேசியூடாகவே வீரகேசரிக்கு செய்தியை சொன்னேன். ஆசிரிய பீடத்தில் இருந்த ஒருவர் என்னிடம் செய்திகேட்டு எழுதி அச்சுக்கு கொடுத்துவிட்டார்.

இவ்வாறு எனது இலக்கிய – ஊடகப்பயணத்தில் நான் பார்த்துப்பேசி உறவாடிவந்திருக்கும், ஈழவேந்தன், பின்னாளில் தனது வங்கி உத்தியோகத்தையும் விட்டுவிட்டு, தீவிர

தமிழ்த்தேசியப்பற்றாளரானார். தமிழரசுக்கட்சியிலும் இணைந்திருந்த அவரது தீவிர தமிழ் உணர்ச்சி அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லாதிருந்தாலும், அவரது தமிழ் உணர்வு ஈடுபாடு போலித்தனமற்றதுதான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

ஈழவேந்தன் எப்பொழுதும் தான் நம்பிய கொள்கையில் பிடிவாதத்துடன் இருந்தவர். அதனால், அவர் இழந்ததும் அதிகம்.

“ ஈழம் வெல்லும், அதனைக் காலம் சொல்லும் . “ என்று சொல்லிக்கொண்டிருப்பார். தமிழரசுக்கட்சியின் மிதவாத போக்கு பிடிக்காமல், காவலூர் நவரட்ணம் உருவாக்கிய தமிழர் சுயாட்சிக்கழத்திலும் இணைந்தார். பின்னர், தமிழர் விடுதலைக்கூட்டணியில் சேர்ந்தார். அதன் கொழும்புக்கிளையின் தலைவரானார். அங்கும் அவருக்கு ஏமாற்றம் வந்ததும், யாழ். எம்.பி. யோகேஸ்வரனின் தந்தையார் வெற்றிவேல், கோவை மகேசன், தந்தை செல்வாவின் புதல்வன் சந்திரகாசன் ஆகியோருடன் சேர்ந்து உருவாக்கிய தமிழீழ விடுதலை முன்னணியின் செயலாளரானார்.

அதுவரையில் தமிழரசுக்கட்சியின் ஏடாக விளங்கிய சுதந்திரன், அமிர்தலிங்கம் முதலான மிதவாதிகளை தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கியது. அதனால், தமிழர் விடுதலைக்கூட்டணி உதயசூரியன் என்ற வாரப்பத்திரிகையை ஆரம்பிக்க நேர்ந்தது.

1977 இல் ஐக்கியதேசியக்கட்சி பதவிக்கு வந்தபோது, அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.

ஈழவேந்தன் எப்போதும் உணர்ச்சிவசப்படும் இயல்பினைக்கொண்டிருந்தமையினால், மிதவாத தமிழ்த்தலைவர்கள் அவரை ஓரம்கட்டத்தொடங்கினர். பின்னர் 1980 களில் தமிழகம் சென்றார்.

அதன்பின்னர் ஈழவேந்தனுடனான தொடர்புகள் எனக்கு அற்றுப்போயிருந்தது. அவர் எங்கிருந்தாலும், சோர்ந்திருப்பவர் அல்ல. ஈழத்தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் ஏதாவது செய்யவேண்டும் என்று துடித்துக்கொண்டே வாழ்ந்தவர்.

அவரது துடிப்பான குரலை வானொலி ஊடகங்களிலும் கேட்டிருக்கின்றேன். இந்திராகாந்தி முதல் பல தமிழக அரசியல் தலைவர்களையெல்லாம் சந்தித்து பேசியிருப்பவர். அச்சந்திப்புகளில் தாமாகவே ஒரு மனு எழுதித் தயாரித்து அவர்களிடம் கொடுப்பதும் அவரது இயல்பு.

அவர் தமிழகத்திலிருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்காக மருந்துகள் சேகரித்தார் என்ற குற்றச்சாட்டிலும் கைதாகியிருந்தவர். பின்னர். 2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் அவருக்கு இலங்கை நாடாளுமன்றில் தேசியப்பட்டியல் ஆசனமும் தரப்பட்டது.

அந்தப்பதவியும் நீண்டகாலம் நீடிக்கவில்லை. அவருக்குத் தரப்பட்ட வாகனமும் அவர் நம்பியவர்களினாலேயே பறிக்கப்பட்டது.

இவ்வாறு தனது அரசியல் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்திருக்கும் அவரை இறுதியாக 2003 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கொழும்பில் சந்தித்தேன்.

சட்டத்தரணி ஜெயந்திவினோதன், இல்லத்தில், இலக்கிய அன்பர்கள் எனக்கு வரவேற்பு விருந்துபசாரத்தை தினகரன் முன்னாள் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் தலைமையில் நடத்தியபோது, அந்த நிகழ்வுக்கு வந்தும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் வாழ்த்தினார்.

ஆசிரியையாகவிருந்த எனது மனைவி மாலதியையும் இவரது தங்கையான ஊடகவியலாளர் சூரியகுமாரியையும் நன்கு தெரிந்தவர். அவர்களின் வீட்டில் விருந்தினராகவும் தங்கியிருந்தவர்.

அச்சந்தர்ப்பத்தில், அவர் சூரியகுமாரியை அழைத்துக்கொண்டு, சின்னரோமாபுரி என வர்ணிக்கப்படும், எமது நீர்கொழும்பூர் கத்தோலிக்கத் தேவாலயங்கள் சென்று, அங்கிருந்த பாதிரிமாரிடம், அவ்வாலயங்களின் தொன்மை, வரலாறு பற்றிக்கேட்டறித்து குறிப்புகள் எடுத்தார்.

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி , கலாயோகி ஆனந்தகுமாரசாமி பற்றியெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே நூல்கள் எழுதியவர் ஈழவேந்தன்.

சட்டத்தரணி ஜெயந்தி விநோதன் இல்லத்தில் எனக்காக நடந்த வரவேற்புக் கூட்டத்தில், மாலதி – சூரியகுமாரி சகோதரிகளை தனது பெறாமகள்மார் என்று விளித்துப்பேசிய ஈழவேந்தன், என்னை அவரது மருமகன் என்று உரிமையோடு வாழ்த்தியபோது, நான் நாணத்தால் தலைகுனிந்தேன்.

அவுஸ்திரேலியாவுக்கும் ஒரு தடவை வருகை தந்திருக்கும் ஈழவேந்தன், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெருக்கமாகவிருந்த மெல்பன் 3 C R தமிழ்க்குரல் சமூகவானொலி ஊடகர் ( அமரர் ) சண்முகம் சபேசனின் இல்லத்திலும் விருந்தினராக தங்கியிருந்தவர்.

அவ்வேளையில், இங்கு வார விடுமுறை நாட்களில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளுக்குச்சென்று மாணவர்களுடன் கலந்துரையாடியவர்.

புகலிடத்தில் பிறந்து தமிழ் கற்கும் மாணவர்களின் பெயர்கள் சுத்தமான தமிழில் இருக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு எப்போதும் உணர்ச்சிப்பெருக்குடன் வாழ்ந்த ஈழவேந்தன், கனடாவுக்குச் சென்ற பின்னர், விசுவநாதன் உருத்திரகுமாரனின் நாடு கடந்த தமிழ் ஈழம் இயக்கத்திலும் இணைந்தார். அவரது 90 ஆவது பிறந்த தின விழா கனடாவில் நடந்தது. ஈழக்கனவு அவரது வாழ்நாளில் நனவாகவில்லை.

ஆனால், அவரது நாடாளுமன்ற தேசியப்பட்டியல் ஆசனத்தை திட்டமிட்டுப் பறித்தவர்கள், ஈழத்தின்பேரில் இன்னமும் ஆசனங்களுக்காக கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.