“உரி பொருளும் அதன் உரை பொருளும்” ….. பகுதி.3 …. சங்கர சுப்பிரமணியன்.
கலியுகம் முடிய இன்னும் 4, 26,896 ஆண்டுகள் இருக்கின்றதாம். ஆதலால் நீங்களோ நானோ அல்லது நம் கொள்ளுப் பேரன்களோ பேத்திகளோ அவர்களது கொள்ளுப்பிள்ளைகளோ கூட கல்கி வரப்போவதைப் பார்க்க முடியாது. அதற்குள்ளாகவே கலி முற்றிப் போய்விட்டது என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த புலம்பலில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? இன்னும் கிட்டத்தட்ட நான்கு லட்சத்து 27 ஆண்டுகளில்தான் கலி முடியும். அப்படியிருக்க இன்னும் நூறு ஆண்டுகளில் கலிகாலம் முடிவதுபோல் கலிமுத்திப் போச்சுன்னு சிலர் பினாத்த ஆரம்பித்து விட்டார்கள்.
எட்டி மரம் காய்த்தாலென்ன, காயது போனாலென்ன என்பதுபோல் எப்போதோ முடியப்போகும் கலிகாலம் முடிந்தாலென்ன முடிந்து பயனென்ன? எப்போதோ தோன்றப்போகும் அந்த நல்லவர் தோன்றினால் என்ன? தோன்றாவிட்டால்தான் நமக்கென்ன? இன்று பார்த்த வேலைக்கு இன்று சம்பளம் கொடுக்காமல் இரண்டாயிரம் ஆண்டு கழித்தே சம்பளம் என்றால் அந்த சம்பளம் கிடைத்தாலென்ன கிடைக்காமல் போனால்தான் என்ன?
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் நிலைமை
மாறியது. மொழிவாரி ராஜ்யங்களாக பிரிந்தன. அப்போது திராவிடர்கள் என்ற போர்வையில் தமிழரல்லாதோர் தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக தமிழர்களுக்கு நல்லது செய்வது போல் தமிழ்மொழியை கையில் எடுத்து அரசியல் பண்ணி ஆட்சியையும் பிடித்தனர்.
இதில் எல்லா திராவிடர்களையும் சொல்லிவிட முடியாது. அவர்கள் முன்னோர்கள் எப்படி வந்தார்கள் என்பதை உணர்ந்து தங்களின் நிலை என்பது என்ன என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அப்படியே இருக்கிறார்கள்.
வெளி மாநிலத்தில் அல்லது வெளிநாட்டில் வாழ்பவர்கள் போல்தான் இருக்கிறார்கள். அதிலொன்றும் தவறில்லை. யாரும் எங்கும் வாழலாம். அந்நாட்டவர்களை மதித்து வாழலாம். அப்படி வாழமுடியாதென்றால் நான் இங்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டு இந்த கட்டுரையை எழுதுவது அபத்தமாகும்.
குதிரை முன் காரட்டை ஒரு குச்சியில் கட்டி தொங்கவிட்டு குதிரையை நடத்திச்செல்வதுபோல் தமிழைக் காட்டியே
தமிழர்களுக்கு நல்லது செய்வது போல் இந்தியை எதிர்த்து அதை வைத்து தமிழரை வட இந்தியருக்கு எதிராக திருப்பினர். ஆனால் அவர்களின் பூர்வீக நாடுகளில் இந்திக்கு எதிர்ப்பில்லை.
இந்த திராவிடர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தி கற்க வைத்தனர். கர்னாடகா மற்றும் ஆந்திராவை காங்கிரஸ் கட்சி ஆண்டது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டாலும் தமிழ் நாட்டின் நீர் வளத்தைப் பெருக்க சிறிதும் கவனம் எடுக்கவில்லை.
பாலாற்றிலிருந்து வரவேண்டிய தண்ணீரைத் தடுத்து கர்னாடகாவும் ஆந்திராவும் அணைகள் கட்டின. காவிரியில் தமிழ் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரைக் கிடைக்கவிடாமல் காவிரியில் கர்னாடகா அணைகள் கட்டியது.
இதை எதிர்த்து திராவிட கட்சிகள் போராடினாலும் தங்கள் அரசியல் வாழ்விற்காக நீங்கள் அடிப்பது போல் அடியுங்கள் நாங்கள் அழுவதுபோல் அழுகிறோம் என்ற நாடகத்தை நடத்தி
தமது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு தமிழரை தண்ணீருக்காக பறிதவிக்க விட்டனர்.
திராவிடக்கட்சிகள் தெரிந்தோ தெரியாமலோ திராவிட நாடுகளுக்கு நல்லதையே செய்தனர். பாதிக்கப்பட்டது தன்னை திராவிடன் என்று எண்ணி ஏமாளியான தமிழன்தான். திராவிடர்களுக்கு ஆட்சிசெய்ய தமிழ்நாடென்றாலும் ஆசையும் பாசமும் தங்களின் பூர்வீகமான திராவிட நாடுகள் மீதுதான். இதை தமிழர் உணர்வதற்குள் நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டு நிலைமை கைமீறிப் போய்விட்டது.
தமிழர்களே அரசாங்கத்தைவிட தண்ணீருக்காக ஆந்திராவிடமும் கர்னாடகாவிடமும் போராட வேண்டியிருந்தது. நீருக்காக தொடர்ந்த போராட்டங்கள். ஆதலால் தெலுங்கரும் கன்னடரும் தமிழரை வெறுத்து இழிவு படுத்தினர்.
மலையாளிகளுக்கோ ஆதித்த கரிகாலன் இறப்பின் மர்மத்திலிருந்து தமிழரோடு பகை. இப்போது முல்லைப் பெரியாறும் சேர்ந்து கொண்டது.
இதுதவிர அன்றைய பர்மாவில் வாழ்ந்த செல்வந்தர்களான தமிழர் சொத்து சுகங்கள் அபகரிக்கப்பட்டு விரட்டியடிக்கப் பட்டதால் இழிவாகப் பார்க்கப் பட்டனர். இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் வேலைக்கு சென்ற தமிழரை கள்ளத்தோணி என்று சிங்களவர்கள் இழிவு படுத்தவில்லை. இன்றும் அகதிகளாக வரும் தமிழரை Boat
People என்று வேறினத்தவர் இழிவு படுத்தவில்லை.
இவ்வாறு நம்மினத்தவர்களே நம்மவர்களை அவமானப் படுத்தும்போது மற்றவர்களை குறைகூறுவதில் நியாயமில்லை. இன்னும் சொல்லப்போனால் நம்மவர்களே கேரளா, மலையாளி என்றால் புளகாங்கிதம்
அடைகிறார்களே? அது ஏன்? சேர நாடு என்பதாலா? அப்படியானால் சோழநாடும் பாண்டிய நாடும் மூவேந்தர்கள் ஆண்ட நாடுகளின் கணக்கில் வராதா?
சிலர் (பெரும்பாலானோர் அல்ல)
அன்றைய சேரநாட்டின் மேல் வைத்திருக்கும் பாசத்தின் அளவுக்கு பாண்டிய நாட்டின் மீதும் சோழநாட்டின் மீதும் பாசம் வைக்கவில்லையே ஏன்? பாசம் வைக்க முடியாது போனாலும் பரவாயில்லை வெறுப்பையாவது காட்டாமல் இருக்கலாம் அல்லவா? அரசியல்வாதிகளின் சதுரங்க ஆட்டத்தில் அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள்?
-சங்கர சுப்பிரமணியன்.