கட்டுரைகள்
டெல்லி – கன்பரா அரசியலில் முரண்படாத முறுகல் ! ஆஸியில் நாடு கடத்தப்பட்ட இந்திய உளவாளிகள்!! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களைத் திருட முயன்ற இந்திய உளவாளிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ஏபிசி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா எப்போதும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவுடன் நல்லுறவு – பாதுகாப்பை பேணி வருகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் இராணுவக் கட்டமைப்பின் வளர்ச்சி அதிகரித்து வரும் முக்கிய பாதுகாப்பு பங்காளியாக இந்தியா கருதப்படுகிறது.
“ஒற்றர்களின் கூடு” வளையமைப்பு:
அவுஸ்திரேலியாவின் உளவு அமைப்பான ASIO டைரக்டர் ஜெனரல் மைக் பர்கெஸ், 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தனது வருடாந்த மதிப்பீட்டில் இந்த உளவு வளையத்தை முதன் முதலில் குறிப்பிட்டார். ஆனால், எந்த நாடு நடவடிக்கைக்குப் பின்னால் இருந்தது என்பதை அவர் வெளியிடவில்லை.
இந்திய உளவுகாரர்கள் தற்போதைய மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதரகம் மற்றும் மாநில போலீஸ் சேவை ஆகியவற்றுடன் நல்ல உறவுகளை வளர்த்துக் கொண்டனர், என ASIO டைரக்டர் ஜெனரல் மைக் பர்கெஸ் கான்பெராவில் கூறினார்.
அத்துடன் அவர்கள் தங்கள் நாட்டின் புலம்பெயர் சமூகத்தை இங்கே கண்காணித்தனர். அத்துடன் அவுஸ்திரேலியாவின் வர்த்தக உறவுகள் பற்றிய இரகசிய தகவல்களைப் பெற முயன்றனர். பாதுகாப்பு தொழில் நுட்பத்தின் முக்கிய விவரங்களை அணுகக்கூடிய அவுஸ்திரேலிய அரசாங்க பாதுகாப்பு அனுமதி வைத்திருப்பவரை “ஒற்றர்களின் கூடு” எவ்வாறு வெற்றிகரமாக பணியமர்த்தியது என்பதையும் திரு பர்கெஸ் விவரித்தார்.
“ஒற்றர்களின் கூட்டிற்கு” இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறை பொறுப்பு என்பதை தேசிய பாதுகாப்பு மற்றும் அரசாங்க புள்ளிவிவரங்கள் ஏபிசிக்கு உறுதிப்படுத்தியுள்ளன. ASIOவின் எதிர்-உளவுத்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் இருந்து “ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு” (RAW) எனப்படும் இந்திய உளவுத்துறை அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மழுப்பும் மனப்பான்மை ?
ஆயினும் இத்திடுக்கிடும் தகவல் வந்த போதும் மழுப்பும் மனப்பான்மையில் அவுஸ்திரேலியா அரசின் உயர் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். நாங்கள் இந்தியாவுடனும், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுடனும் நல்ல உறவை பேணுகிறோம். முக்கியமாக பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துகிறோம் என்று மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் ஏபிசி டிவிக்கு தெரிவித்தார்.
இந்திய உளவுத்துறையின் வெளிப்பாடுகள் இரு நாட்டு உறவுகளை மீறி இருந்தபோதிலும், அவுஸ்திரேலியா-இந்தியா உறவுகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என கன்பரா உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 இல் கனடா, இந்திய அரசாங்கத்திற்கும், இந்தியாவில் தனி மாநிலத்தை ஆதரித்த கனேடிய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து பகிரங்கமாக கண்டனங்கள் எழுந்தன.
கனடாவில் சீக்கிய தலைவரை இந்திய உளவு அமைப்பு கொன்றதாக இருநாட்டு உறவுகளில் பாரிய முறுகல் நிலமை ஏற்பட்டது. இதனைப் போல இந்திய -அவுஸ்திரேலியா உறவுகளில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க இரு நாடுகளும் தீவிரமாக முயல்கின்றன.
புது டெல்லியுடன் “நல்ல உறவ
இந்திய உளவு நடவடிக்கையின் அறிக்கைகள் வெளிவந்த பின்னரும் கான்பெராவில் அவுஸ்திரேலியா அரசு புது டெல்லியுடன் “நல்ல உறவை” வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய உளவாளிகளின் கூடு (Nest of Spies) என கூறப்படும் இந்த விவகாரத்தால் இரு அரசினதும் புலனாய்வு அமைப்புகளின் பரஸ்பர உறவை சீர்குலைக்கப்பட்டது என்பது உண்மையே.
இதனை பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்திய போதிலும், தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இந்தியாவுடனான அவுஸ்திரேலியாவின் உறவுகளை மேம்படுத்த உடனடியாக ஆதரித்துள்ளனர்.
ஆனாலும் முன்னைய அரசில், அந்த நேரத்தில் உள்துறை அமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், உளவுத்துறை அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் “வெளிநாட்டு தலையீட்டால் நாங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம்” என்பது தெளிவாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
ஏன் எனில் இந்த உளவுப் பிரச்சனை அவர்களின் ஆட்சியிலேயே ஆரம்பமானதாக தகவல்களும் உண்டு.
அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய குவாட் அமைப்பில் இந்தியா ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இப்பிராந்தியத்தில் முக்கியமான பங்காளியாக உள்ளனர். ஏனெனில் அவுஸ்திரேலியாவில் உள்ள அதே ஜனநாயக விழுமியங்களை இந்தியாவும் பகிர்ந்து கொள்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் கூறினார்.
இவர்கள் அனைவரும் நாங்கள் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கு முக்கியமான கூட்டாளிகள், மேலும் உறவில் சிக்கல்கள் இருந்தால், அவர்கள் சரியான முறையில் சமாளிக்க வேண்டும். புலனாய்வு விவகாரங்கள் குறித்து தற்போதய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா பொதுவான கொள்கைகளின் அடிப்படையில், அவுஸ்திரேலியாவின் நலன்களுக்கும், அனைத்து ஈடுபாடுகளிலும் நமது மதிப்புகளுக்கும் நிலையானதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ‘உளவாளிகளின் கூடு’ 2020 இல் ASIOவை குறிவைத்து செயல்பட்டது. அத்துடன் உள்ளூர் அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதரகம் மற்றும் மாநில காவல்துறை சேவையுடன் உறவுகளை குறிவைக்க முயன்றது.
அத்துடன் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் ரகசிய விவரங்களை அணுகக்கூடிய அவுஸ்திரேலிய அரசாங்க பாதுகாப்பு அனுமதி வைத்திருப்பவரை வெற்றிகரமாக இந்தியா ஆட்சேர்ப்பு செய்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய விமான நிலையத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றிய தகவலை ஒரு பொது ஊழியரிடம் இந்திய உளவு அமைப்பு கேட்டறிந்தது.
மோடிதான் ‘பாஸ்’ மாறுமா ?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து, புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் சிட்னியில் பல பெரிய நிகழ்வுகளை நடத்தினார்.
சிட்னியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்தும் ‘மோடி ஏர்வேஸ்’, ‘மோடி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்டப்பட்ட சிறப்பு விமானங்கள், ரயில்களில் இந்திய வம்சாவளியினர் சிட்னி நகருக்கு வந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அப்போது, ‘‘சிட்னியில் இந்திய பிரதமர் மோடிக்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்திருக்கிறது. உண்மையில் மோடிதான் ‘பாஸ்’ (Boss). அவுஸ்திரேலியாவின் வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது’’ என்றும் அவர் குறிப்பிட்டமை பலருக்கும் நினைவிருக்கும்.
ஆயினும் தற்போது எழுந்துள்ள முரண்பாடு எதுவரை நீடிக்கும் என எவருக்கும் புலப்படவில்லை.
அவுஸ்திரேலிய -இந்திய பொருளாதரம்:
அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 17 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ள நிலையில் ஏற்றுமதி 10.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இருப்பினும், அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதியில் பெரும்பான்மையானவை (96%) மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்கள் ஆகும்.
அதிலும் குறிப்பாக நிலக்கரி அதிக அளவில் (அவுஸ்திரேலியாவின் இந்தியாவுக்கான ஏற்றுமதியில் 74%) இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 71.4% கோக்கிங் நிலக்கரி ஆகும். மறுபுறம், அவுஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகளான நுகர்வோர் பொருட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
அவுஸ்திரேலியாவில் பயிலும் மாணவர்களின் கல்விக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 பில்லியன் டாலரை இந்தியாவும் செலவழிக்கிறது.