காசாவில் தொடரும் பேரழிவு.. இஸ்ரேலுடன் வர்த்தகத்தை நிறுத்தியது துருக்கி
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், காசாவின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. தனது கடைசி இலக்கான ரபா நகரிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியிருக்கிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தினால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்பதால் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக இஸ்ரேலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றன.
இந்நிலையில், காசாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதாலும், இஸ்ரேலால் ஏற்படும் பாதிப்புகள் நீடிப்பதாலும் இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது. இஸ்ரேலுக்கான ஏற்றுமதியில் கடந்த மாதம் துருக்கி பல கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக துருக்கி வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஏப்ரல் மாதம் இஸ்ரேலுக்கான 54 தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதியை அரசு தடை செய்தது. ஏனெனில் படுகொலை, மனிதாபிமான பேரழிவு, இஸ்ரேலால் ஏற்படும் அழிவுகள் தொடர்ந்தன. மேலும் இஸ்ரேலிய அரசாங்கம் சர்வதேச போர்நிறுத்த முயற்சிகளை புறக்கணித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவியையும் தடுத்தது.
இப்போது இரண்டாம் கட்ட நடவடிக்கையாக, இஸ்ரேலுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலிய அரசாங்கம் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை தடையின்றி போதுமான அளவில் வழங்க அனுமதிக்கும் வரை இந்த புதிய நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தும்.
இவ்வாறு வர்த்தக அமைச்ககம் கூறி உள்ளது.