கட்டுரைகள்

தமிழ்நாட்டின் வளர்ச்சியை வேளாண்மை உந்தித்தள்ளுகிறதா?…. நியூசிலாந்து சிற்சபேசன்.

 அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டின் வேளாண்துறை பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. பருவமழை சரிவரப் பெய்யவில்லை. மறுவளத்தில், காலம்தவறிய கனதியான மழை பெய்திருக்கின்றது. அதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. அண்டை மாநிலங்களிலிருந்து கிடைக்கக் கூடிய ஆற்றுநீர் போதிய அளவில் கிடைக்கவில்லை. கிடைக்கின்றபோதுகூட, உரிய காலத்திலே கிடைக்கவில்லை. இத்தகைய சவால்களுக்கு மத்தியிலேயும் கூட, நெல்விளைச்சலில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்திருக்கின்றது.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்னும் செந்நாப்போதரின் வாக்கிற்கிணங்க, தமிழ்நாட்டின் வாழ்வுமுறை வேளாண்மையைக் கொண்டாடுகின்றது. மாநிலத்தின் மொத்த சனத்தொகையில், எழுபது விழுக்காடு மக்கள் வேளாண்மையுடன் தொடர்புடைய தொழிலில் ஈடுபடுகின்றனர். மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் வேளாண்துறையின் பங்களிப்பு இருபது விழுக்காடுவரையிலாகும்.

வேளாண்துறையில் நெற்பயிர்ச்செய்கை முக்கியமானதாகும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வெளியேயுள்ள, பெரும்பாலான மாவட்டங்களிலே நெற்பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது. காவிரி டெல்டா பிரதேசம் அதிலே முக்கியமானதாகும்.

மலையில் உற்பத்தியாகும் நீர் ஆறாகின்றது. அஃது மலையிலிருந்து சரிவான மலைப்பகுதிகளில் வேகமாகப் பாய்ந்து வருகின்றது. சமதரையில் அதனுடைய வேகம் ஒப்பீட்டளவில் குறைகின்றது. ஆறாகப் பெருக்கெடுத்து ஒடுகின்றது. பலகிளைகளாகப் பிரிந்தோடிக் கடலைச் சென்றடைகின்றது. பலகிளைகளாகப் பிரிந்துசென்று கடலில் கலக்கின்ற ஆற்றின் தோற்றமானது, மேலிருந்து பார்க்கும்போது, கணிதத்தில் பயன்படுத்தப்படுகின்ற டெல்டாவின் அமைப்பை ஒத்ததாகக் காணப்படுகின்றது. அதனாலேயே ஆறொன்று கடலில் கலக்கும் பிரதேசம் டெல்டா என அழைக்கப்படுகின்றது. அதுவே, கழிமுகம் எனத் தமிழில் சொல்லப்படுகின்றது.

டெல்டா பிரதேசத்தில் நெல்விளைச்சல் அமோகமானதாகும். அந்தவகையிலேயே தமிழ்நாட்டின் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்டவை அதிக நெல்விளைச்சல் கொண்ட மாவட்டங்களாகக் காணப்படுகின்றன. அங்கே அண்ணளவாக எட்டு இலட்சம் வரையான நிலப்பரப்பில் நெற்பயிர்ச்செய்கை நடைபெறுவதாகத் தரவுகள் சொல்கின்றன. காவிரி டெல்டாவுக்கு வெளியே, விழுப்புரம், இராமநாதபுரம் போன்றவை கணிசமான நெற்பயிர்ச்செய்கை மாவட்டங்களாக அடையாளமாகின்றன. பாசனவசதிகொண்ட பொள்ளாச்சி,

உடுமலைபேட்டை போன்றவையும் நெற்பயிர்ச்செய்கை தொடர்பில் கவனத்தைப் பெறுகின்றன.

தமிழ்நாட்டின் நெற்பயிர்ச்செய்கை, நான்கு பருவங்களாக பெருவெட்டில் அடையாளமாகின்றன. மழைக்காலத்தில் சம்பா பருவம் (மானாவாரி சாகுபடி), குளிர்காலத்தில் அறுவடையாகின்ற தாளடிப் பருவம், குளிர்காலத்தில் விதைப்பு அல்லது நடவு ஆரம்பமாகின்ற நவரைப் பருவம் என்பவற்றோடு இலையுதிர்காலத்தில் குறுவைப் பருவம் என்பவையே நான்கு பருவங்களாகும்.

தமிழ்நாட்டு நெற்பயிர்ச்செய்கையில் இயந்திரங்களின் பாவனை தொடர்ச்சியாக அதிகரித்தே வருகின்றன. குறிப்பாக, அறுவடையில் இயந்திரப் பாவனை பரவலாகக் காணப்படுகின்றது. அதிலே வேளாண் பொறியியல்துறையின் பங்களிப்பு காத்திரமானதாகும். உழவு இயந்திரம், தானியங்கி நடவு இயந்திரம், விசைசார் களை எடுப்புக் கருவி, வைக்கோல் கட்டும் கருவி என வேளாண்மைச் செயற்பாடுகளை நவீனமயமாக்கும் முயற்சிகள் கணிசமாக நடைபெறுகின்றன.

ஒரு ஏக்கரில் 2,000 முதல் 2,500 கிலோ வரையான விளைச்சல் கிடைக்கின்றது. விளைச்சலை பெருமளவில் அரசே கொள்முதல் செய்கின்றது. அதனால் விவசாயிகள் பயனடைகின்றனர். காரணம்: அரசின் நேரடியான நெல் கொள்முதல் விலை சகாயமானது. சந்தை விலையைவிட அதிகமாகக் காணப்படுகின்றது. அதனாலே அரசிடமே நெல்லை விற்க விவசாயிகள் ஆர்வப்படுகின்றனர்.

அரச நிறுவனமான, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை மேற்கொள்கின்றது. ஒவ்வொரு பருவத்தின்போதும், அரசினுடைய நெல் கொள்முதல் நிலையங்கள், மாநிலமெங்கும் பரந்துபட்ட அளவில், அமைக்கப்படுகின்றன. அண்ணளவாக இரண்டாயிரம் நெல் கொள்முதல் நிலையங்கள், ஒவ்வொரு பருவகாலத்திலும், செயல்படுகின்றன. அதனால், கொள்முதல் நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுகின்றன. இத்தகைய செயற்பாடு மூலமாக, உழைப்பின்பலன் விவசாயிகளுக்கு நேரடியாகவே கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரிக்கப்படுகின்றன. மேலதிகமாக, உழவர்சந்தை என்னும் அமைப்புமுறையும் பிரசித்தமடைகின்றது.

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளிலே அரசு கவனத்தைக் கொண்டிருக்கின்றது. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகின்றது. நெல்உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன. பயிர் காப்புறுதி திட்டம் காணப்படுகின்றது. நெல்விதைகள், உரங்கள் போன்றவை தேவை அடிப்படையில் இலவசமாகவோ அல்லது மானிய அடிப்படையிலோ கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவ்வாறாக விவசாயிகளுக்குக் கணிசமான ஆதரவு கிடைக்கின்றது.

தொழில்துறையின் அதீதமான வளர்ச்சி, குடிமனைப் பெருக்கம் மற்றும் நகரங்களின் விரிவாக்கம் காரணமாக வேளாண்மை நிலங்கள் குறைந்து வருவதான குற்றச்சாட்டு அண்மைக்காலமாக அதிகமாகவே முன்வைக்கப்படுகின்றது. அதனைத் தரவுகள் ஓரளவேனும் மறுதலிக்கின்றன.

2020-21ம் ஆண்டில், தமிழகத்தின் நெல் உற்பத்தி 1.04 கோடி மெட்ரிக்தொன் ஆகும். அதுவே, 2021-22ம் ஆண்டில் 1.22 கோடி மெட்ரிக்தொன்னாக அதிகரித்துள்ளது.

2020-21ம் ஆண்டில் நெல் உற்பத்தி நிலங்கள் இருபது லட்சம் ஹெக்டர் வரையானதாகக் காணப்பட்டது. அதுவே, 2021-22ம் ஆண்டில் இருபத்தியிரண்டு லட்சம் ஹெக்டர் வரையில் அதிகரித்துள்ளது.

அந்தவகையிலே, தமிழ்நாட்டின் நெல்உற்பத்தி அளவு மட்டுமன்றி, நெல்உற்பத்தி செய்கின்ற நிலங்களின் அளவுகளும் அதிகரித்துள்ளமை கவனிக்கத்தக்க மாற்றமாகவே கருதமுடிகின்றது.

பஞ்சாப், மேற்குவங்கம், உத்திரப்பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்றவை நெல் உற்பத்தியில் முன்னிலையில் காணப்படுகின்றன.

தமிழ்நாடு நெல்உற்பத்தி அளவில் வேகமாக முன்னேறுகின்றது. அதனால் அகில இந்திய அளவில் கவனிப்பைப் பெறுகின்றது.

அந்தவகையிலே, தமிழ்நாட்டின் வளர்ச்சியை வேளாண்மை உந்தித்தள்ளுகின்றமையைக் கவனிக்கமுடிகின்றது.

Loading

3 Comments

  1. Thanks for sharing this
    People should be honest sincere to their land and other natural resources including rain
    Preserve rain water while using natural firtilisers
    With Best regards
    Subra

  2. Could be an eye opener for the policy makers of Srilanka if they really wants to develop agriculture without any discrimination on regional/district basis .

  3. எவ்வளவோ இடர்பாடுகளுக்கிடையேயும் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை படைத்திருப்பதை தங்கள் கட்டுரை சுட்டிக்காட்டிருயிருப்பது போற்றுதற்குரியது.

    சங்கர சுப்பிரமணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.