இலக்கியச்சோலை

“கடலும் கப்பலும் கரையாத சோகமும் வணங்கா மண்” …. நூன்முகக் குறிப்பு ….. ( அங்கம் -02 ) ….. முனைவர் செல்லத்துரை சுதர்சன்.

வணங்கா மண் – நூன்முகக் குறிப்பு ( அங்கம் -02 )

முனைவர் செல்லத்துரை சுதர்சன்

( சிரேஷ்ட விரிவுரையாளர்,

தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை. )

யாழ் குடாநாட்டிலிருந்து வெளிச்செல்ல ஆனையிறவூடான பாதை மூடப்பட்டிருந்த காலத்தில், வன்னியையும் குடாநாட்டையும் இணைக்கும் கடல்வழிப் பாதையாகக் கிளாலிப் பாதை அமைந்தது. அத்தியாவசியத் தேவைகருதி தென்னிலங்கைக்கு மக்கள் வள்ளங்களில் பயணிப்பர்.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு செல்லும் பயணம். காலனிய கால யாழ்ப்பாணக் கப்பல் அசைவியக்கத்தால் உருவான எள்ளுப் பாகு, பொரிமா, பருத்தித்துறை வடை எனப் புகழ்பெற்ற தட்டை வடை ஆகிய உலர் உணவுப் பொதிகளை மட்டும் சாப்பாடாக எடுத்துக்கொண்டு செல்லும் பயணம்.

சிறுவர்களுக்காகக் ‘குமரப்பா இனிப்பு’, ‘மிதிவெடி’ (சமோசா) பொதிகளில் இருக்கும். மழை காலமெனில், சகதி படைபடையாய் ஒட்டிக் கூடவே பயணிக்கும். பயணிகள்மீது ஆனையிறவு, பூநகரிப் படை முகாம்களிலிருந்து படையினர் ஷெல் தாக்குதல் நடத்துவர். படகுகளில் வந்து வெட்டிச் சாய்ப்பர். வள்ளங்களோடு நீருக்குள் ஆழ்ந்துபோன நெஞ்சு கனக்கும் துயர நிகழ்வுகள் எத்தனை! குமுதினிப் படகுப் படுகொலையிலிருந்து குடாநாட்டுத் தமிழரின் கடல்வழிப் பயண வரலாறு நீண்டதோர் துயர்க்கதை.

குடாநாட்டை அண்மித்த கடற் பரப்பில் தரித்து நின்ற நேவிக் கப்பல்கள் தாக்குதல் நிகழ்த்தியபோது, தமிழர் குடிமனைகள் எரிந்து சாம்பலாயின. கரையோர வைத்தியசாலைகளும் ஆலயங்களும் தரைமட்டமாயின. உயிரச்சத்தால் அயல்நாட்டுக்குச் சென்ற மக்கள் கடலிலே, படையினர் பசிக்குப் பலியாயினர். படகுகளில் பயணித்த போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். மீன்பிடிக்கச் சென்ற நீருழவர்கள் படையினரால் துண்டுதுண்டாய் வெட்டப்பட்டனர்.

மீன் அள்ளி வருவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு, உப்பு நீரிலும் காற்றிலும் ஊறிப் பெருத்த உடல் துண்டுகள் கரையொதுங்கிய

காலைகளே அவலமாக விடிந்தன. ‘கடலம்மா கடலம்மா எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா?’ என்று ‘வாய் இறுக்கி வயிறு இறுக்கி வாழும் கடல் மீனவனின் வாசல் எங்கும் வேதனையின் கோடு’ என அமைந்த காலத்தில்தான், ஈழத் தமிழர் மத்தியில் கடல் பற்றிய கரிசனை வரலாற்றில் என்றுமில்லாதவாறு எழுந்தது.

‘தமிழர் கடல்’, ‘தமிழீழக் கடல்’ என்ற தமிழர் நிலத்துக்கான நீரெல்லை குறித்த கருத்தாக்கங்கள் முதன்மைபெற்றன. கடல் மேலான உரிமையை வென்றெடுக்க, ‘கடற்புலிகள்’ என்ற படையணி உருவாகியது. கடலை அண்மித்த பகுதிகளில் கடற்புலிகள் அமைத்த முகாம்கள் சாண்டில்யனின் ‘கடல் புறா’ நாமத்தை வரித்துக்கொண்டன.

குருவிப் படகுகள், டோறாக்கள், அதிவேகப் பீரங்கிப் படகுகள், நீர்மூழ்கிப் படகுகள் எனப் பலவாறு உருவாகிய ஒரு பலம் மிக்க கடற்படை, மீனவர்கள் கடற்கல்லறை ஆகிப்போகும் நிலையை நீக்கியது. கடற் சமரில் காவிய நாயகராகிய கடற் போராளிகளின் பெயர்கள் தாங்கிய கப்பல்கள் கொடி வீசிப் பறக்க வலம்வந்தன.

‘நெய்தல்’, ‘கடலிலே காவியம் படைப்போம்’ போன்ற பல பெயர்களில், பலநூறு இசைப் பாடல்கள் தாங்கிய இறுவெட்டுக்களைக் கலைபண்பாட்டுக் கழகம் வெளிக்கொணர்ந்தது. கடலின் மீதான உரிமையும், கடலின் பண்பாட்டு வரலாறும், தமிழ்த்தேசிய அரசியலும் இணைந்த அப்பாடல்களை வாய்கள் உச்சரித்துத் திரிந்தன.

இவ்வாறாகக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான ஈழத்தமிழர் வாழ்வென்பது, கடலும்; கப்பலும் கரையாத சோகமுமாகக் கழிந்திருக்கிறது. அன்புச் சகோதரர், முனைவர் து. ரவிக்குமார் அவர்களின் இந்த நூலை வாசித்து முடித்தபோது, மனக் கடலில் ஓயாது எழுந்த நினைவலைகள் இவை. இவற்றின் நீட்சியாக, அறிவுசார் தளத்தில் அரசியல் உரையாடலை மிகுந்த கரிசனையோடும் பொறுப்புணர்வோடும் நிகழ்த்துவதாக, இந்த நூலைக் காண்கிறேன். நூலாசிரியர் சொல்லும் கப்பல் ஒன்றின் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

எம்.வி.கேப்டன் அலி என்ற கப்பல் ஈழப் போர் உச்சநிலையில் இருந்த வேளையில், போர் நிலத்தில் சிக்கிய சுமார் மூன்று இலட்சம் தமிழர்களுக்கு, உலகத் தமிழர்களின் ஆதரவுடன், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றி இங்கிலாந்திலிருந்து பயணிக்கிறது. இந்த உதவிப் பயணத்தின் பெயர், ‘மெர்ஸி மிஷன்’. ஆனால் கப்பல் இலங்கையைக் காண முன்னர், தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டு, போர் முடிந்துவிடுகிறது. கப்பல் இலங்கையைக் காண்கிறது. போரில் சிக்கியவர்களுக்கான நிவாரண

உதவி, அகதி முகாம்களில் சிக்கியவர்களுக்கானதாக முடிவு செய்யப்படுகிறது. கப்பல் இலங்கைக்குள் செல்ல இலங்கைக் கடற்படை மறுக்கிறது. ஜனாதிபதியிடம் உரிய முறையில் கடித அறிவிப்புச் செய்திருந்தும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இதுபற்றி உரையாடப்பெற்று இலங்கை அரசுக்கு உரிய முறையில் தகவல் அனுப்பியிருந்தும், இலங்கைக்குள் கப்பலைச் செலுத்த இலங்கைக் கடற்படை அனுமதி மறுக்கிறது.

அனுமதி மறுக்கப்பட்ட கப்பல் சென்னைத் துறைமுகத்தை அடைகிறது. கப்பலின் நல நோக்கத்தைத் தமிழக அரசு புரிந்துகொள்கிறது. ஆவன செய்ய முயலுகிறது. தமிழக அரசும் பிற அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்தியக் கடற்படையோ கப்பலைப் பரிசோதித்து, சந்தேகத்திற்கிடமானது என நேர்மையற்றுக் கூறுகிறது. இதனால், சென்னையை நீங்கிய கப்பல், சர்வதேசக் கடற்பரப்பில் தரிக்கிறது. இந்தவேளை, இலங்கையிலிருந்து இந்தியா செல்கிறது அரசு தரப்புக் குழு. அப்போது தமிழக முதல்வர் கப்பலைப் பற்றிப் பேசுமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார். வேறுவழியின்றி, கப்பலை அனுமதிப்பதாக இலங்கைத் தரப்பு இறங்கி வந்தது. இந்த வரலாற்று நிகழ்வுக்குரிய கப்பல், சூடி வந்த நாமந்தான், ‘வணங்கா மண்’.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்று ஆவணங்களைச் சுமந்த இந்த நூலின் பெயரும் அதுதான். ‘கண்ணீர் துடைக்குமா கருணைத் தூது’ என்ற முதலாவது கட்டுரையின் மையப் பொருளான வணங்கா மண் கப்பல்தான் இந்த நூலின் பெயராகியது. அக்கட்டுரையில் வணங்கா மண்ணுக்கு நேர்ந்த நெருக்கடியை விலாவாரியாக விவரிக்கிறார், ஆசிரியர்.

அந்த விவரிப்பு, பார்வையாள மனோநிலைப்பட்டது அல்ல. வணங்கா மண்ணுக்காகத் தமிழக அரசையும் மத்திய அரசையும் வலியுறுத்திய, ஆலோசனை சொல்லிய, ஊடக வெளியில் தார்மீகக் குரலெழுப்பிய, சட்ட மன்றத்தில் சிறப்புக் கவன ஈர்ப்புக்காக உரை நிகழ்த்தி அதனை அரசியல் அரங்கில் கவனப்படுத்திய, ‘உலகத் தமிழர்கள் அனுப்பி வைத்துள்ள இந்த நிவாரணப் பொருட்களோடு தாய்த் தமிழகத்தின் உதவியையும் சேர்த்து அனுப்புவதே நியாயமானது.

எனவே, இந்த நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பும்போது, தமிழகத்தின் சார்பிலும் இதேபோன்று உணவுப் பொருட்கள், மருந்துகள், உடைகள் முதலான அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்கத் தமிழக முதல்வர் ஏற்பாடு செய்யவேண்டும்’ என வேண்டிய ஒரு பங்கேற்பாளரின் பதிவு என்பதுதான் முக்கியமானது.

வணங்கா மண்ணின் வருகை மறுப்பின் போதெழுந்த சர்ச்சைகள் இன்றும் நினைவில் உள்ளன. முறையான திட்டமிடலின்றி அந்தக் கப்பல் பயணம் நிகழ்ந்தது என்றும் அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அப்போது குரல்கள் எழுந்தன. இவையெல்லாவற்றுக்கும் அப்பால், உரிமைப் போர் ஒன்று வீழும் நிலையிலிருந்தபோது, தமிழர்கள் பிணங்களாகக் குவிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், ‘வணங்கா மண்’ எனப் பெயர் சூடி வந்தமை காலப் பொருத்தமானதுதானா என்ற கேள்விதான் இப்போதும் எழுகிறது.

கட்டுரைகள் இருபது, சட்ட மன்ற உரைகள் மூன்று, ஈழ அகதிகள் குறித்த அறிக்கைகள் மற்றும் பதிவுகள் ஒன்பது என மூன்று பகுதிகளைக் கொண்டமைந்தது, இந்த நூல். எழுத்து அரசியல் என்பது வெறுமனே மலினமானதும் பொதுவானதுமான கட்சி அரசியல் பற்றியதல்ல. அது ஓர் இனத்தின் அனைத்துப் பண்பாட்டுக்கூறுகளையும் முதன்மைப்படுத்தியது.

நீண்டு விரிந்த அர்த்தப் பரப்பைக் கொண்டது. முக்கியமாக, காலந்தோறும் வரலாறு சுமந்த பண்பாட்டு ஆவணங்களின்மேலான உரையாடலாக அது அமைந்திருக்கும். ஆயுதப் போராட்ட அரசியல் வரலாற்றினை அதிகம் பேசியும் எழுதியும் விவாதித்தும்வரும் சூழலில், அதைவிடவும் முக்கியமான, ஆயுதப் போராட்டத்திற்கும் அடிப்படையான, ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரும் வலிமையோடு விளங்குவதும் இயங்குவதுமான, இன அழிப்புக்கு எதிராக எழுத்துவழி நிகழ்ந்த போராட்டங்களைச் சத்திய ரீதியாகப் பேசுவதும் எழுதுவதும் விவாதிப்பதும் அரிது என்றே கூறலாம்.

ஈழத்து அரசியல் தொடர்பான ரவிக்குமாரின் எழுத்துகள் பற்றிச் சிந்திக்கின்றபோது, ஈழத் தமிழர் மீதான, அவர்களது உரிமைகள் மீதான, அவர்களுக்கான சுதந்திர வெளி பற்றிய அரசியல் சமூகக் கடப்பாட்டு உணர்வோடு எழுதப்பட்டவை என்பதே முன்னிற்கிறது. இன்றைய தமிழ் அரசியல் அரங்கிலும் சரி, தனியான கற்கை மற்றும் ஆய்வுப் புலமாக அறியப்படுகின்ற ‘ஈழத் தமிழர் அரசியல்’ என்ற அறிவுப் புலத்திலும் சரி, ரவிக்குமாரின் அறிவு மற்றும் செயற்பாட்டுப் பங்களிப்பை நீக்கிப் பார்க்க முடியாது.

தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பலரும் தமிழகத்திலும் ஈழத்திலும் மேடைப்பேச்சு வீரர்களாக விளங்கிக்கொண்டிருக்கின்ற இற்றைக் காலத்தில், ஈழத்து அரசியலை மிக நுட்பமாக அவதானித்து எழுதிய எழுத்துக்கள் ரவிக்குமாருடையவை. அவர் ஓர் இடைவிடாத அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் என்பதும், நிதானமாகக் கருத்துக் கூறும் தன்மை உடையவர் என்பதும், புறநிலை நின்று விடயங்களை நோக்கி

ஆராய்பவர் என்பதும் அவரது எழுத்துகளால் ஈழத்தவர்கள் அவரைப் புரிந்துகொண்டவை.

இன்னும் கூறுவதாயின், இன்றைய தமிழ் அரசியல் அரங்கில் ஈழத்தவருக்கான ஒரு அரசியல் நிபுணர், இடைவிடாத செயற்பாட்டாளர் தமிழகத்தில் உள்ளாரெனில், அவர் ரவிக்குமார்தான் என உறுதியாகச் சொல்ல முடியும்.

ஈழத்தவர் தொடர்பாக அலைகடலுக்கப்பால், அரசியல் என்ற தளத்தில் இயங்கும் அவருடைய புலமை நேர்மையே அவரது எழுத்துக்களின் பலம். ஈழத் தமிழர் மீதான பொங்கிப் பிரவாகிக்கும் அவரது பற்று, அவரது எழுத்துக்களின் ஈரம். ஈழத் தமிழர்களின் ரத்தமும் பிண நெடியும் அவல வாழ்வும் மட்டுமன்றி அவர்களது வரலாற்று இருப்பினையும் கொண்ட ரவிக்குமாரின் எழுத்துக்கள், ஆதிக்கக்காரரின் முகத்திலும், மறுக்கும் வரலாற்று முகத்திலும் அறைந்து பேச வல்லவை.

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.