கதைகள்

“ஈரநிலம்” … சிறுகதை…. 65 …. அண்டனூர் சுரா.

 நான், என்ர மனிசி, பிள்ளை, சீனு நாலு பேரும் ஒரு தோணியில ஊர விட்டு கிளம்பிப்போனம். ஒரு கிழமையாகும் எண்டு சொன்ன பயணம் ரெண்டு கிழமை போனாப் புறகும் கரைய கண்டபாடில்ல. பெரிய மீன் சின்ன மீனைத் தின்னுமாம். சிங்களமண் தமிழ் மண்ண திண்றதைப் போல. ஆனால் பெருங்குடல சிறுகுடல் தின்னப் பாக்குது. பிள்ளைகள் பசியால் துடிக்கினம். நா வறண்டுத் தவிக்கினம். சொந்த மண்ண விட்டுப்போட்டு அந்நிய மண்ணில அடைக்கலம் புக, யாருக்குத்தான் மனசு வரும்? என்ர மனிசி இந்த யுத்த மண்ணை விட்டு போகவேணும் எண்டு சொல்லுறாள். கண்ணீர் சாரை சாரையாக ஒழுகக் கேட்கிறாள். பாப்பம், பாப்பம் எண்டு நான் காலம் கடத்தி வந்தன். இதுக்கு மேலையும் என்னால இங்கே காலம் தள்ள ஏலாது எண்டு கேவத்தோட சொல்ல தொடங்கிற்றாள்.

“கொஞ்ச நாட்கள் பொறு புள்ள. என்னெண்டாலும் கெதியா நான் செய்கிறன்” என்றன்.

“போர் உச்சம்தொட்ட நாளில இருந்து சொல்லிக் கொண்டு வாறென். இந்தப் போர் பூமி வேணாம் எண்டு.” அவள் தன் இரண்டு கைகளையும் அகல விரித்துக் கத்தினாள். அதைக் கேட்கக்கேட்க எதோ ஒரு உருவமில்லாத பிசாசு என்ர நெஞ்சாங்கூட்டை கசக்கிறது மாதிரி இருந்தது. எந்நேரமும் ஒண்டையும் மறைக்கம சிரிச்ச முகத்தோட இருந்தவள். யாழ்ப்பாணத்தில இருந்து வாற எல்லாப் பேப்பர்களையும் ஒவ்வொருநாளும் வாசிச்சிப் போடுவாள். இப்ப அவளால எதையும் செய்ய இயலவில்லை. கையும் ஓடல காலும் ஓடல. எந்நேரமும் குளறின படிதான். அவளை நான் வெறிக்கப் பாத்துக்கொண்டு இருந்தென்.

“இஞ்ச பாருங்க, எங்கண்டாலும் போய்விடுவமே?” என்றாள்.

“புள்ள, இஞ்ச விட்டுட்டு எங்க போக ஏலும்?” என்றன்.

“என்ர கதிர்காம கந்தா… என்ர பிள்ளைகள் பிழைச்சுப்போக ஒரு வழி சொல்லப்பா” அவளது உதடுகள் உதிர்ந்த சிறகாகத் துடிக்கிறத கண்டன்.

“இந்த கிளிநொச்சிய விட்டு எங்க போவ ஏலும்?”

“இந்த கடல் சூழ் உலகில தமிழன் எங்கதான் இல்ல? தமிழ்நாடு போவமே ?.”

“அங்க போறதவிட இஞ்சயேயிருந்து செத்து தொலையலாம்.”

“அப்படியெண்டால் மலேயா போவம். அங்கண்டபோய் ஒரு பிழைப்பத் தேடிக்கொள்ளலாம்தானே. கனடா போவொம். ஆஸ்திரிலியா போவொம். ஓடிப்போறதுக்கு ஊரா இல்ல?”

“ஆசையோட கட்டின புதுவீடு, கொச்சிக்காய் தோட்டம், நம நாட்டின பனமரக் கண்டுகள் , ஆடு, சீனு,.. இது எல்லாத்தையும் விட்டுட்டு எப்படிப் போவ ஏலும்?” என்றன்.

அவள் பெருமூச்சொரிந்து என்னை கோபத்தோடு பார்த்தாள்.

“நம ஒரு மகன இழந்து நிற்கிறம் எண்றது தெரியும் தானே? ஞாபகம் இருக்கோ…?.போன வருசம் இந்த மாசம்தான் நாலு ஆமிக்காரன்கள் வந்தான்கள். மகனைப் போராளி என்றான்கள். அவன் என்ன போராளியா? அவன் புலி கொடியைக்கூட தீண்டியவன் இல்லை. நானும் நீயும் என்னவெல்லாம் சொல்லி போராடினம். கேட்டான்களா?…. விசாரிக்கோணும் எண்டு கூட்டிக்கொண்டு போனவங்கதான். புள்ள திரும்பி வரவேயில்ல.

நம்மட மூத்த புள்ள யாழினி. யாழ்ப்பாண பள்ளியில முதுகலை அரசியல் படிச்சாள். அவள் என்ன போராளியா? அவள் குழந்தப்பிள்ள. அவளுக்கு நம்மள நேசிக்கிறத தவிர வேறனென்ன தெரியும்? நம்மளோட என்ன பச்சமா பாசமா இருப்பாள்? சத்தம் போட்டுக்கூட பேசத் தெரியாத புள்ள. அவளையும் விசாரிக்க வேணும் எண்டு கூட்டிக்கொண்டு போனவனுகள்தான். எத்தின நாள்தான் அவள தேடித்திரிஞ்சம்? அவ அநியாயமா செத்த செய்திகூட ஊரார் சொல்லித்தான் தெரியும். அண்டு தொடக்கம்

நான் குளறாத நாள் இல்ல. பசிக்கிறதும் இல்ல. உங்கள நான் கதிர்காமக்கந்தனா நினைச்சு கையெடுத்துக் கும்பிடுறன். எங்கெண்டாலும்.போய் தொலைவம்”

அவளின்ர விருப்பத்திலதான் இந்தக் தோணியில் போய் கொண்டு இருக்கம். தோணி எண்டு சொன்னாலும் உண்மையில பெரிய மோட்டர் போட். மோட்டோர் சத்தத்தில போட்டு அதிருது. கதிர்காமத்திக்குப் பஸ்ஸில பயணம் போகேய்க்க உடம்பு இப்படித்தான் உதறும். ஆசையாக கட்டின புதுவீடு. அதையும் இப்ப வித்திற்றம்.. கொச்சிக்காய் தோட்டமும் அதோட போச்சி. அங்கையும் இஞ்சயும் ஓடி ஒருபாடா காசு புரட்டிற்றம். கொஞ்ச காச டோலராக மாற்றி மடியில் கட்டி வச்சுக்கொண்டு கடலே விதியெண்டு கிடக்கிறம். கண்ணுக்கு எட்டின மட்டும் சமுத்திரம். எந்தத் திசையில போறம் எண்டு ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

பகல்ல சூரியன் உதிக்கக் கொள்ளதான் உலகம் தெரியும். ராவுல ஒரே இருட்டு…மரண பயம். பிள்ளை அழுகிறாள். பொல, பொலவெண்டு கண்ணில இருந்து கண்ணீர் ஊத்துது. “வேணாம் அப்பா. நாம வீட்டுக்குப் போவம். என்னால ஏலாது…” என்கிறாள்.

“ நீ என்ர தங்கம்… ராசாத்தி…. அங்க பாரு, நட்சத்திரம் சிரிக்கிது” வானத்த காட்டுறென். நட்சத்திரம் சிங்களவன் எறியிற ஏவுகணைப் போல தெரிகிறது போல. பிள்ள பயத்தால் தலைய உள்ளே இழுத்துக்கொண்டாள். முகத்தை லேஞ்சியால மூடிக்கொண்டாள்.

“‘அப்பா, அக்கா எங்கப்பா?” அவள் கேள்வியில நான் துடிச்சுப்போறன். ஓலமிடும் மனிசியின்ர வாயை பொத்துறன்.

“அப்பா, அண்ணா எங்கப்பா?”

“அண்ணாவையும், அக்காவையும் கூட்டிவரத்தான் போறம் குஞ்சு”

“அய்! அவங்கட இடத்துக்குத்தான் போறமா?” துள்ளிக் குதித்தாள்.

“ஓம் பிள்ள, ஓம்..” என்றன் நான்.

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் எத்தனை தூரம். நாலாயிரத்து இருநூற்று முப்பத்து ஒன்பது மைல். எங்கட போட் எவ்வளவு தூரம் போய் இருக்கும் எண்டு தெரியாது. இன்னும் எத்தனை தூரம் போகவேணும்? போக ஏலுமா? நாலு நாட்களை கடந்து போச்சு. மனதுக்கு இதமில்லை. துணிவில்லை. மரணம் சூழ்ந்த பயம்! ஒரு நம்பிக்கைக்குரிய ஓர் அந்நியன், “நான் நிச்சயம் அடைக்கலம் தேடித் தருவென்” என்கிற ஒற்றை வார்த்தையை நம்பித்தான் பிரயாணம் செய்கிறோம்.

டிப்போசிற் ஆயிரம் டோலர் வாங்கிக்கொண்டான். மிச்சம் நடுக்கடலில் கொடுக்க வேணுமாம். நாட்டிற்குள்ள நுழைந்ததும் ஆறு, ஏழு இடத்தில லஞ்சம் கொடுக்கவேணும். உண்ணவேணும். உடுக்கவேணும். முகாம் கிடைக்கும் மட்டும் வசிக்க எண்டு இடம் பிடிக்கவேணும். மடியில் இருக்கும் டோலர் போதுமா? தெரியவில்லை. தோணி கரைப்போய் சேருமா? பயணம் தொடங்கிய முதல்நாள், அமாவாசை. மூட்டை முடிச்சுடன் கிளிநொச்சியில் இருந்து மன்னாருக்கு மினிவானில பயணம். பிறகு அந்த ராவு மன்னாரில இருந்து நீர்கொழும்புக்கு சின்ன தோணியில போனம் – அங்கதான் இந்த பெரிய மோட்டோர் போட்டில ஏறினம். “இப்ப அம்பது கல்தூரம் கடந்து வந்துட்டம்” எண்டு போட்காரன் சொன்னான்.

வெளிச்சவீட்டு ஒளி மட்டும் மின்மினிப் பூச்சியைப் போல தூரத்தில தெரியுது. என்ர ஏழு வயது பிள்ளை கேட்டாள்: “அப்பா.., அப்பா, அங்க பாருங்க. அங்க தெரியிறது திருகோணமலையில போடுற குண்டுதானே?”

“ இல்லை அம்மா, இல்லை. அது வெளிச்ச வீடு” என்றன். அவள் நம்பேயில்ல.

“இல்ல அப்பா. அது சிங்களன் போடுற குண்டுதான்..” இதை அவள் சொல்வதற்கும் வெளிச்சம் புலனிலிருந்து மறைவதற்கும் சரியென்று இருந்தது. பிரயாணம் நான்கு நாட்களைத் தொட்டிருந்தது. என்ர மனிசி கலங்கிய முகத்தோட உட்கார்ந்திருந்தாள். அவளின்ர மடியில பிள்ள இசையாழ் இருந்தாள்.

அவளது மடியில் எங்கட நாய் சீனு. சீனு பாவம். ஐஞ்சு அறிவு பிராணியாக இருந்தாலும் என்னவோ ஒரு துக்கம் அதன்ர கண்ணில தெரிந்ததைக் கண்டன். நான்கு நாட்களாக எதையும் சாப்பிடவில்லை. குரைக்கவும் இல்ல. வாலாட்டவும் இல்ல. ஒரு மூட்டையில் எள் உருண்டை இருந்தது. அதையெடுத்து மனிசிக்கும் பிள்ளைக்கும் கொடுத்து நான் ஒன்று எடுத்துகொண்டன். பிள்ள சொன்னாள். “அப்பா, சீனுவுக்கு ஒண்டு கொடுங்களன்”.

நான் கிளிநொச்சியில் எப்படியேனும் இந்த சீனுவை விட்டுப்போட்டு வந்துவிடலாமென்று பார்த்தென். சீனு எங்கள விட்டுப்போறதாக தெரியல்ல. வேறென்னதான் செய்ய ஏலும்? சீனுவையும் அழைத்துகொண்டு புலம்பெயர்வது விதி என்றாகிவிட்டது.

எள் உருண்டையை எடுத்து சீனு வாய் அருகினில் கொண்டுபோனென். சீனு எழுந்திருக்க இல்லை. வாலைப் பிடித்து ஆட்டினென். அதற்கு உணர்வு இல்லை. “ அட கதிர்காமக் கந்தா….” நான் அழுகிறன். என் அழுகையைக் கண்டு பிள்ளை அழுகிறாள். பாவம், அவள் என்ன செய்வாள்? அவளுக்குத் தோழி சீனு. பெட்டை நாய். அவளுக்கு அது செல்லம். அது செத்துப்போனத அவளால எப்படி பொறுக்க ஏலும்? நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தன். அவள் கேட்கவில்லை. குலுங்கிக் குலுங்கி அழுதாள். தோணியோட்டி அண்ணா எழுந்து வந்தான்.

“உங்களுக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கா? .நான் சொன்ன ‘றூள்ஸ்’ ஒண்டையும் நீங்க மதிக்கல்ல. ஆரும் அவ்வளவு லேசா நுழையமுடியாத தேசத்தில் இந்த நாயை கொண்டு செல்லாவிட்டால் என்னவாம்…”

“அண்ணா, என்ன மன்னிச்சுக் கொள்ளுங்க. என்ர பேச்சை என்ர சின்ன பிள்ள கேக்கேயில்ல. நான் என்ன அண்ணா செய்ய ஏலும்..”

“சரி, அடுத்து என்ன சொன்னநான். யாரும் யாருக்காகவும் குளறக்கூடாது… சொன்னன்தானே. பாரும். உன்ர பிள்ள குலுங்கி குலுங்கி குளறிக்கொண்டு இருக்காள்…” நான் என்ர பிள்ளைய தேற்றினன்.

“ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் புலம்பெயரும் ஈழத்தமிழர்களின்ர எண்ணிக்கை கூடிக்கொண்டு வருகுதாம். அங்க இருக்கிற பூர்வீகக் குடிகள் ஈழத்தமிழன் எண்டு தெரிந்தால் இரக்கப்பட மாட்டேன்கிறான்கள். உங்களில் யாருக்கும் அது தெரியவில்லை. திரும்பவும் நான் சொல்றன். மனதில வைச்சுக்கொள்ளுங்க. உங்களில ஆருக்கும் என்ன வேணுமானாலும் நடக்கக்கூடும். செத்துக்கூட தொலையலாம். அடி விழலாம். ஆரும் ஆருக்காகவும் குளறக்கூடாது. விளங்குகிறதுதானே?”

“ ஓம் அண்ணா…”

“ உங்களைக் காப்பாதிக் கொண்டு போக ஆஸ்திரேலியத் தேசத்து படகு ஒண்டு வரும். நீங்கள் அதில மாறி மீன் தொட்டிக்குள்ள ஒழிஞ்சிகொள்ள வேணும். விளங்குதோ? அதை ஒரு பெரிய பலகையால மூடி விடுவினம். ஆஸ்திரேலியா பொலீஸ் கண்ணில் அகப்படக் கூடாது. அவன்கள் ஈவிரக்கமற்றவன்கள். தங்கட துவக்கால மீன் தொட்டியைச் சுடுவான்கள். அதற்குள்ள யாரெனும் மறைந்து இருக்கான்களா எண்டு கூராயுதம் கொண்டு பார்ப்பான்கள். தோட்டா, கூராயுதம், யார் மேலெயும் பாயலாம். என்ன நடந்தாலும் பொறுத்துக்கொள்ளத்தான் வேணும். தெரிஞ்சிதோ? சத்தம் கித்தம் போடக் கூடாது. ஒருவேளை சத்தம் போட்டா கதை அவ்வளவுதான்! இலங்கைக்குத் திருப்பிவிடுவான்கள். இத்தனை நாள் நாம பட்ட கஸ்டம் எல்லா வீண் எண்டாயிடும். இது விளங்கும் எண்டு நினைக்கிறன்.”

“ஓம், விளங்குறது அண்ணா”

“இஞ்சபாரும், இந்த நாய் செத்துப்போயிற்று. இத தூக்கி கடலுக்குள்ள போடப்போகிறன். எல்லாரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்” என்றவன் நாங்கள் குந்தியிருந்த இடத்தை நோக்கி வந்தான். நாயைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்தான்.

அதுக்குப்பிறகும் இரண்டு நாட்கள் கடலுக்குள்ள போட் மிதந்தபடி போகுது. நாங்க எல்லாம் மிரண்டு போய் கிடக்கிறம். எந்தத் திசையில் நாங்க போய்கொண்டு இருக்கம் எண்டும் தெரியாது.

ஒரு நாள் ஏறுபொழுது இருக்கும். தோணியோட்டி அண்ணா தோணியை நிறுத்திவிட்டு எங்கட பக்கம் திரும்பினான்.

“இந்து சமுத்திர பெருங்கடலில் இந்தியாவோட எல்லையை நாம் கடந்துவிட்டொம். இனி ஆஸ்திரேலியா. இன்னும் ரெண்டு நாட்களில உங்களை கூட்டிப்போக படகு ஒண்டு வரும். அதோடு என்ர வேல முடிந்தது. நான் ஊருக்கு திரும்பி விடுவென். நீங்கள் நான் சொன்னாப் போல நடந்துகொள்ளவேணும்…, தெரிஞ்சுதோ ?.”

“ ஓம் அண்ணா…”

அவன் சொன்ன மூன்று நாட்கள் கடந்துதான் படகு வந்தது. அதற்குள் மூவரும் தாவிக்கொண்டம். படகோட்டி அண்ணா கைக்காட்டி எம்மை அனுப்பி வைத்தான். ஆஸ்திரேலியா படகு அது. நல்ல சௌரியத்துடன் இருந்தது. சுத்தமாகவும் இருந்தது. அப்படகில் அந்நாட்டு கொடிப் பறந்தது. அவன் ஒரு மீன்காரன். இங்கிலீஸிலதான் கதைத்தான். தமிழிலும் கொஞ்சம் கதைத்தான். என்ர மடியில இருந்த டோலரை வாங்கிக்கொண்டான்.

நல்ல வேகத்தில் அந்த படகு செல்வதை உணர்ந்தொம். உடம்பில் புது ரத்தம் பாய்வதைக் கண்டொம். மூன்று இரவுகள் முடிந்து விடிந்திருந்தது. ஆஸ்திரேலியாவை நெருங்கியிருந்தோம். பப்புவா நிபூசிக் எல்லை தெரிந்தது. அதையொட்டிய மானுஸ் தீவின் வெளிச்சவீடு ஒளிர்ந்தது.

ஒரு நாள் இரவு, “மறைந்துகொள்ளுங்க! மறைந்துகொள்ளுங்க!…” எண்டு பரிதவித்தான் படகோட்டி. “என்னை மட்டும் காட்டிகொடுத்து விடாதீங்க” என்று கெஞ்சினான். நாங்கள் கிளிநொச்சி பங்கருக்குள் மறைந்துகொள்வதைப்போன்று ஒரு மீன் தொட்டிக்குள் மறைந்துகொண்டொம். ஆழிசூழுடன் பயமும் எங்கள சூழ்ந்துகொண்டது. அத்துடன் ஆஸ்திரேலியா பொலீஸ்காரன்களும் சூழ்ந்துகொண்டான்கள்.

படகு ஓரிடத்தில் நிற்பதை உணர்ந்தோம். வானத்தில் குண்டு முழங்கும் சத்தம் கேட்டோம். பிள்ளை திடுக்கிட்டாள்.

“அய்யோ…! அப்பா…! சிங்களவன் குண்டு போடுறான் அப்பா…” என்று ஓலமிட்டாள். “உஷ்.!” நான் அவளது வாயை என் கைகளால் பொத்தினேன். மீன் தொட்டியை ஒரு லத்திக்கொண்டு தட்டினான் ஒரு பொலிஸ்.

“படகில் என்ன?” ஆங்கிலக் குரலில் மிரட்டினான்.

“மீன், மீன்..” படகோட்டிச் சொன்னான்.

எனக்குப் பயம் சில்லிட்டது. குளிர்வேறு பிய்த்துத் தின்றது. நான் என்ர மனிசியையும் பிள்ளையையும் கோழி தன் சிறகால் குஞ்சுகளை மூடி அரவணைப்பதைப் போல அணைத்துக்கொண்டன். ஒரு கூர்ஆயுதம் ஒன்று மூடி இருந்த பலகையைத் துளைத்தது. மறுஆயுதம் என் தொடையில் பாய்ந்தது. இன்னொன்று என் நெற்றிக்கு நேராக குத்தி நின்றது. “அப்….” பிள்ளை ஒலி எழுப்பினாள். அவளது வாயை இறுக அடைத்தென். மறுகையால் ஆயுதத்தைப் பிடுங்கி முனையில் இருந்த ரத்தத்தைத் துடைத்தென். மனிசியையும் பிள்ளையையும் இறுக அணைத்துகொண்டென். கூராயுதம் ஒன்று பிள்ளையின்ர கையைத் தைத்தது.

“அய்யோ….!” என்ர உயிர் அறுவதைப் போலிருந்தது.

“அப்…” அவள் சத்தம்போடுவதற்கு முன் அவளது வாயை இறுக அடைத்தென். பாவம், அவள் விசும்பினாள். இன்னும் இறுக அடைத்தென்.

வெளியில பொலீஸ்காரன்களின் பேச்சுக் குரல் கேட்டது. கடல் போர்த்திய இரவு ஒளிவெள்ளமாக தெரிந்தது. உடம்பில் ரத்தம் சொற்றி வலி உடம்பைத் தின்றது. பிள்ளையின்ர வாயிலிருந்து கையை மெல்ல எடுத்தன்.

“ அம்…” நாசிகள் வழியே விசும்பல் வந்தது. கையை எடுத்தால் போதும். அவ்வளவேதான்! இத்தனை நாட்கள் எடுத்த முயற்சிகள் வீண் என்றாகி விடும். என் கையில் கைக்குட்டை இருந்தது.

அதனால் அவளது வாயையும் நாசியையும் இறுக அடைத்தன். “என்ர செல்லம்…,என்ர குஞ்சு, என்ர தங்கம்.. சத்தம் போடவேணாம் மகள்..” அவளது காதிற்குள்ள முணங்கினென். அவள் கண்களை முளிச்சி என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் கிளிநொச்சி தெரிந்தது. வவுனியா மண்ணும் யாழ்பாணத்து புழுதியும் தெரிந்தது. கதிர்காமத்து ஏக்கம் தெரிந்தது. அவளை இறுக அணைத்து முத்தம் கொடுத்தென். அவள் என்ர தங்கம். என்ர செல்லம். என்ர குஞ்சு. அவளை நெஞ்சோடு சேர்த்து கட்டிப்பிடிக்கிறேன்.

அவள் அழவே இல்லை! சிணுங்கவில்லை! படகு நகருவது தெரிந்தது. என்ர மனிசி, என் மடியில கிடந்த பிள்ளைய ‘வெடுக்’கெனப் பறித்தாள். தோளில் கிடத்திக்கொண்டு முதுகைத் தட்டினாள். பாதங்களை வருடினாள்.

குஞ்சைப் பறிகொடுத்த கோழியின் பரிதவிப்பு அவளுக்கு. பிள்ளையை மடியில் கிடத்திக்கொண்டு தலைக் கோதினாள். கன்னங்களைப் பிடித்து குலுக்கினாள். கண் காது, மூக்கு, செவியென எங்கும் கொஞ்சினாள். நெஞ்சோடு அணைத்தாள். எனக்கான உலகம் நழுவி மெல்ல கடலுக்குள் மூழ்குவதைப் போலிருந்தது. இதயத்தை முள்வேலி அறுத்தது. என்னவோ ஒன்று நிச்சயம் நடந்து விட்டது, நினைக்கவே பயமாக இருந்தது. உயிர் நழுவி தீக்கனலில் விழுவதைப் போல் திடுக்கிட்டென். ஒரு பெருந்தவறை செய்துவிட்ட பிழையில் துடித்தென். கண்களை இறுகமூடி கத்த வேண்டும் போலிருந்தது. கீழுதட்டைப் பற்களால் கடித்து கண்ணீர்ச் சொரிந்தென். விசும்பினென். குலுங்கினென். என்ர மனிசி பிள்ளையின்ர மார்பில் செவியைச் சாய்த்தாள். தலையில் அடித்துக்கொண்டாள். தலை விரிக்கோலமாய் பிள்ளை மீது சரிந்தாள். “வீ……ல்” என்று கத்தினாள். என் வாயை இறுகப் பொத்தியிருந்த என் கைகளை எடுத்து அவளது வாயை அடைத்தென்!

Loading

3 Comments

  1. ஈழத்தமிழின் சொற்கோர்வை தனிச்சுவை!, அதனைப் பருகுதல் அதனினும் அலாதியானது…

    இனியும் எத்தனைக் கல் தொலைவுகூட போங்கோ!, ஊராரின் நாசி துளைக்க எழுதுங்கோ! என்னவாகுமுன்னு பாத்துருவோம்…

    வடித்த எழுத்தாணிக்கு வணக்கங்கள்…

  2. இலங்கை மொழிநடையும் உங்களுக்குக் கைவரப்பெற்றது மிக அருமை . ஆழ்கடலில் மட்டுமல்ல , அண்டம் முழுதும் பாய்ந்து செல்லவல்லது சுறா(சுரா) , என்பதை நிரூபித்துவிட்டீர்கள் . தமிழ் மண்ணைச் சிங்களக் கறையான் அரித்துத் தின்றுவிட்டது என்ற உண்மை நிகழ்வை , மிகநேர்த்தியாக எழுதிவிட்டீர்கள் . இலங்கைத் தமிழரை நாம் பாதுகாக்கத் தப்பிவிட்டமை , வரலாற்றில் பதிவான வடுவாகும் . அதனால்தான் அவர்கள் மற்ற நாடுகளை நாடினர் . ஈர நெஞ்சமுடையோர் வாழும் நிலம்தான் ஈர நிலமாகும் , வறண்ட நெஞ்சுடைய சிங்களவர் வாழ்கின்ற நிலம் வறண்ட நிலமேயாகும் . இந்தியப் பெருங்கடலை , கோத்தபயராஜபக்க்ஷேயுடன் சில வல்லூறுகளும் சேர்ந்து செங்கடலாக்கிவிட்டனர் . சிங்களவர் கையால் சாகாமல் தப்பிக்க முயன்றபோது , தனது தந்தையின் அச்ச உணர்வால் , மகளின் குரலை நிறுத்த எத்தனித்து , குரல்வளையை நெறித்து மூச்சுக்காற்றையே நிறுத்தியமை அவலத்தின் உச்சம் . தங்களின் கதையோ எழுத்தின் உச்சம்
    .

    தோழர் சிவா . இராஜை .

  3. The writings of yourself are very nice with support of the pictures. The drawings are well impressed by me. May GOD bless you for success in great manner.🌹🎊🌹

    PUNNIYA MOORTHI
    THANJAVUR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.