தித்திக்கும் முத்தொள்ளாயிரம்! …. பாகம் 3 …. செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.
கொடுங்கோலனா, கோதை?
மற்றும் ஒருபாடல் சேர மன்னனை நினைத்து இளம் பெண்களின் இதயத்தில் எழுகின்ற காதல் அவர்களைப் படுத்தும் பாட்டை வேறொரு கோணத்தில் புலப்படுத்துகின்றது.
நிரைபொரு வேல்மாந்தைக் கோ என்ற சேர மன்னன் அழகானவன். மக்களில் அன்பானவன். வலிமை மிக்கவன். செங்கோல் தவறாது ஆட்சி செய்பவன். அவன்மீது மங்கையர்கள் காதல் கொள்வதில் வியப்பில்லை. மன்னவன் தவறேதும் செய்யாதிருந்தும்கூடத் தங்கள் பெண்களுக்குக் காதல்நோய் வருவதற்குக் காரணமாக இருந்த காரணத்தால் அவனின் செங்கோலையே பழிப்பதாக அமைந்துள்ள இந்தப்பாடல் உண்மையில் மன்னனையும் போற்றுகின்றது. காதலையும் போற்றுகின்றது.
வரைபொரு நீள்மார்ப வட்கார் வணக்கும்
நிரைபொரு வேல்மாந்தைக் கோவே, நிரைவளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ, அவர்தாய்மார்
செங்கோலன் அல்லன் என (பாடல் இல: 11)
இதன் கருத்து என்னவென்றால் –
“மலைபோன்ற விரிந்த மார்பைக் கொண்டவனே! பகைவரைத் தோற்கடிக்கும் வீரம் நிறைந்தவனே! ஆநிரைகளைக் கவரும் ஆற்றல் மிக்கவனே! மாந்தை நகரின் மன்னவனே! உனது அழகிலே மயங்கி, உன்மேல் காதல்கொண்டு, அந்தக்காதல் நோயால் உடல் மெலிந்து, கை வளையல்கள் கழன்று, இளம்பெண்கள் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அந்தப் பெண்களின் தாய்மார்கள் உன்னைக் கொடுங்கோலன் என்று பழிக்கிறார்கள். மிகவும் வல்லமை கொண்ட நீ இப்படி அழகிய பெண்களைக் கவர்வது சரிதானா?” என்று அந்தச் சேர மன்னனைப் பார்த்துக் கேட்பது போல இந்தப்பாடல் அமைந்துள்ளது.
காணும்வரை கோபம், கண்டவுடன் போகும்
காதலர்களுக்கிடையே அடிக்கடி ஊடல் வருவது இயற்கையானது. ஊடல் என்பது சிறு மனத்தாங்கல். அந்த மனத்தாங்கல் உண்மையான காரணத்தாலும் வரலாம். பொய்யாகவும் எழலாம். ஆனால் ஊடல் அன்பை மேலும் அதிகமாக்கும். அதனால் ஊடலைப் பொய்க்கோபம் என்றும் சொல்லலாம்.
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்” என்று திருக்குறளின் இறுதிக் குறள் எடுத்துரைக்கின்றது. ஊடலின் பின்னர் ஏற்படும் கூடல் மிகவும் இன்பமானது. இரம்மியமானது என்றெல்லாம் திருக்குறள் மட்டுமன்றிப் பல்வேறு இலக்கியங்களும் சொல்கின்றன.
இங்கே முத்தொள்ளாயிரத்திலே ஒரு பாடல் சற்று வித்தியாசமாக ஊடல் உணர்வினைக் காட்டுகின்றது. தலைவி தன் உள்ளம் கவர்ந்த சேரமன்னனைக் காண்பதற்கு விரும்பினாள். ஆனால் அவன் சொன்னபடி குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லை. அதனால் அவன்மீது கோபம் கொண்டாள். “வரட்டும், வரட்டும், எப்படியும் வருவார்தானே அப்போது என்ன செய்கிறேன் பார்” என்று மன்னனுக்கு ஏசினாள். மற்றவர்களுக்கெல்லாம் கேட்கும்படியாக வார்த்தைகளை வீசினாள். ஆத்திரத்தோடு காத்திருந்தாள். அப்போது அவன் வந்தான். அவள் கண்டாள். கண்டதுமே அவன்மீது கொண்டிருந்த கோபம் மறைந்துவிட்டது. (அவன் மீது அன்பு மேலிட்டது. நாணம் கொண்டாள்.)
வருக குடநாடன் வஞ்சிக்கோ மான்என்று
அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம்
உண்டாய் இருக்கஅவ் வொண்தொடியாள் மற்றவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம் (பாடல்இல: 18)
இது இப்போதும் கூட கணவன்-மனைவி. காதலன்-காதலியர்களுக்கு இடையே சாதாரணமாக நடைபெறுகிறது என்பது நாம் அறிந்ததுதான். சந்திக்க வருவதாகச் சொன்ன நேரத்திற்குச் சற்றுத் தாமதித்து விட்டாலும் கோபத்தோடு காத்திருப்பதும், வந்து விட்டால், நேரிலே கண்டுவிட்டால் கோபம் மறைந்து கொஞ்சிக் குலாவுவதும் காதலர்களிடம் இயற்கையாக எழுகின்ற உணர்வுகள்தான். இந்தக் காதல் உணர்வுகள் எல்லாக்காலத்திற்கும் பொதுவானவைதான்.
தேரையும் தேங்காயும் – சேரனும் நானும்!
தேங்காய்க்குத் தேரைநோய் என்று ஒரு நோய் வருவதை நாம் அறிவோம். தேங்காயினுள் உள்ள இளநீர் அழுகி வரண்டுவிடும். தேங்காயிலுள்ள, தேங்காய்க் கட்டி எனப்படும் சாப்பிடும் பகுதி கெட்டுச் சிறுத்துவிடும். இதைத் தேரைத்தேங்காய் என்று அழைப்பார்கள். தேரை பிடித்துவிட்டது என்று சொல்வார்கள். ஆனால் தேங்காயில் ஏற்படும் அந்த நோய்க்கும் தவளை இனத்தைச் சேர்ந்த, தவளையைப் போன்ற உருவமுள்ள பிராணியான தேரைக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லை. “தேங்காயின் நோய்க்குத் தேரை காரணம் அல்ல. அதேபோல, சோழ மன்னனான கிள்ளிவளவனைப் பார்க்கக்கூடாது என்று அன்னை தடுக்கிறாள். தடியால் அடிக்கின்றாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் என்னைப் பழித்து ஏழனம் செய்கிறார்கள். இத்தனைக்கும் நான் கிள்ளிவளவனோடு கூடிக் களிக்கவுமில்லை. குலாவி இருக்கவுமில்லை. தேங்காயைத் தின்னாத தேரை பழிக்கப்படுவதைப்போல, எக்குற்றமும் செய்யாத நானும் வலிமை பொருந்திய தேர்ப்படையைக் கொண்டுள்ள கிள்ளிவளவன் (மீதுகொண்ட காதல்) காரணமாக பழிச்சொல்லுக்கு ஆளாக்கப்பட்டுத் துன்புறுகின்றேன்” என்று ஒரு பெண் கூறுவதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது
அன்னையும் கோல்கொண்டு அலைக்கும், அயலாரும்
என்னை அழியுஞ்சொல் சொல்லுவர், நுண்ணிலைய
தெங்கு உண்ட தேரை படுவழிப் பட்டேன்யான்
திண்தேர் வளவன் திறத்து (பாடல்இல: 42)
குழந்தைகளிடம், “ அவனைத்தான் உனக்குத் திருமணம் செய்வது”, “நீ இவளைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும்”, “நீ பெரியவளானதும் அவனுக்குத்தான் உன்னைக் கட்டிக்கொடுப்போம்” என்றெல்லாம் பெரியவர்கள் விளையாட்டாகச் சொல்வது வழக்கம். அந்த வேடிக்கைப் பேச்சு அந்தச் சின்னஞ் சிறுசுகளின் மனதில் சிலவேளை நன்றாகப் பதிந்துவிடுவதும் உண்டு. அதேபோல ஒரு விடயத்தை அடுத்த பாடல் எடுத்துரைக்கின்றது.
குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை பெறுகென்றாள் அன்னை அதுபோய்
விளைந்தவா இன்று வியன்கானல் வெண்தேர்த்
துலங்கு நீர் மாமருட்டி அற்று (பாடல்இல: 45)
“நான் சிறுமியாக இருந்தபோது, உறையூரை ஆளுகின்ற சோழ மன்னனைத் திருமணம் செய்துகொள்ளும்படி என்னிடம் எனது தாய் சொல்வாள். இப்பொழுது, நான் அவனைக் காதலிக்கிறேன் என்பதற்காக எனக்கு ஏசுகின்றாள். எனது காதலை எதிர்க்கின்றாள். (அவள் விளையாட்டாகப் பொய்யாகச் சொல்லியிருந்தாலும் அவ்வாறு அவள் அடிக்கடி சொன்னதால் அவன் மீது எனக்கு விருப்பம் ஏற்பட்டது. அது காதலாக மாறிவிட்டது) பாலைவனத்தில் தெரியும் கானல் நீர், விலங்குகளுக்கு உண்மையான நீர் போலத் தோன்றி ஏமாற்றும். எனது காதலும் அந்தக் கானல் நீர்போல ஆகிவிட்டது.” என்று ஒரு பெண் மனம்வருந்திச் சொல்வது இந்தப் பாடலின் கருத்தாகும்.
(தொடரும்)