கட்டுரைகள்

தனித்துவ அங்கீகாரம் டைம் சஞ்சிகை!….. எஸ்.ஜெகதீசன்.

வருடந்தோறும் பல்வேறு நிறுவனங்களால், வெவ்வேறு மனிதர்களுக்கு, வெவ்வேறு காரணங்களுக்காக பாரெங்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நோபல், ஒஸ்கார், எம்மி, ராமன் மகசேசே, புக்கர், புலிட்சர், கிராமி என பல வகை விருதுகள் உலகில் பிரபலம் பெற்றவை.

அமெரிக்காவின் டைம் சஞ்சிகை ஆண்டு தோறும் வழங்கும் வருடத்தின் சிறந்த மனிதர் என்ற அங்கீகாரமும் இந்தவகையில் சுமார் நூறு வருடங்களாக ஆங்கிலேயரிடம் கௌரவம் மிக்கதாக பேணப்படுகின்றது. போற்றப்படுகின்றது.

உலக வரலாற்றை உடனே தருவது என புகழ் பூத்த டைம் சஞ்சிகையால் 2023 ம் ஆண்டின் சிறந்த நபராக அமெரிக்க பாடலாசிரியரும், பாடகருமான டெயிலர் சுவிட் தெரிவானார் என்ற அறிவிப்பு வந்த பொழுது தமிழர் எவருமே அதனை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அதற்கு சற்று முன், சர்வதேச சூழல் வளம் பேணல் என்ற பிரபலம் மிக்க பசுமைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சஞ்சயன் முத்துலிங்கமும் உலக மேம்பாட்டிற்காக சாதனை புரிந்த மிகவும் செல்வாக்கு பெற்ற நூறு ஆளுமைகளுள் ஒருவராக டைம் 100 என்ற பிரிவில் தெரிவானார் என்ற பதிவினை கண்டதில் உலகெங்கும் வாழ் தமிழர் அகமகிழ்ந்து பூரித்தனர்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக சக்தி வாய்ந்த கூட்டாண்மைகளை எளிதாக்க உதவும் திறமையுள்ள சஞ்சயன் முத்துலிங்கத்தின் தலைமைத்துவத்தில் உள்ள சர்வதேச சுற்றுச் சூழல் வளம் பேணல் என்ற அமைப்பு, இயற்கை அடிப்படையிலான கார்பன் அகற்றும் தொழில் நுட்பங்களை அதிகரிக்க 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கவுள்ளது குறிக்க வேண்டியதொன்றாகும்.

சுற்றுச் சூழல் இயக்கத்தின் முதுகெலும்பான பல்லுயிர் பெருக்கத்துக்காக பெரும் பணி புரியும் சஞ்சயன், உலக புகழ் பெற்ற எழுத்தாளர் பண்பாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் மகன் ஆவர்.

நீண்ட நெடுங்காலமாக பத்திரிகை உலகில் முன்னணியில் உள்ள டைம் சஞ்சிகை மீதும் அது வருடந்தோறும் வழங்கி வரும் விருதுகள் மீதும் தமிழ் மக்களின் பார்வை அதிக அளவில் பரந்திட வழிவகுத்தது சஞ்சயன் முத்துலிங்கம் பெற்ற டைம் 100 விருது என்றால் ஆச்சரியமில்லை.

இம் முறை 2023 க்கான டைம்100 பேருக்குள் சஞ்சயன் முத்துலிங்கத்துடன் மன்னர் சார்ள்ஸ், ஜோ பைடன், சால்மன் ரூஷ்டி, ஷாருக்கான், எஸ்.எஸ். ராஜமௌலி போன்ற “தெரிந்தவர்கள் சிலரும்” செல்வாக்கு பெற்றிருந்தனர்!

இதற்கு முன்னரும் கூட செல்வாக்கு மிக்கவர்களில் தமிழர் சிலரும் டைம் 100 அங்கீகரம் பெற்றுள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான், மாதங்கி (மாயா) அருள்பிரகாசம் ஆகியோர் 2009 லிலும் பழனியப்பன் சிதம்பரம், கமலா ஹரிஸ், மிண்டி கலிங் ஆகியோர் 2013 லிலும் சுந்தர் பிச்சை, ரகுராம் ராஜன், அஸிஸ் அன்ஸாரி ஆகியோர் 2016 லிலும் மைத்ரேயி ராமகிருஷ்ணன் 2021 லிலும் பத்மா லக்ஸ்மி 2023 லிலும் கடவுளுக்கு நன்றி எனக் கூறியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

2020 ஆண்டிற்கான சிறந்த மனிதர்கள் என ஜோ பைடனையும் கமலா ஹரிஸையும் தேர்ந்தது டைம் சஞ்சிகை. கமலாவின் பூர்வீகம் தமிழென உலகம் ஆரவாரம் செய்ய, தமிழ் நாடு ஆர்ப்பரித்து வெடி கொளுத்தியது.

1927 ம் ஆண்டு முதல் ஆண்டின் சிறந்தவர் எனவும் மேலதிகமாக 2000 ம் ஆண்டிலிருந்து டைம் 100 எனும் பிரிவில் ஆண்டின் செல்வாக்கு மிக்கவர் எனவும் டைம் சஞ்சிகை இரு வேறு அங்கீகாரங்களை வருடந்தோறும் வழங்குகின்றது.

ஆனால் இதுவரையில் ஆண்டின் சிறந்த மனிதரென தமிழர் ஒருவரேனும் தனித்து அங்கீகாரம் பெறவில்லை என்பது கசக்கும் உண்மை

The International Magazine of Events என்ற ஆங்கில பதத்தின் முதல் எழுத்துகள் சேர்ந்ததே TIME ஆகும்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து வெளி வரும் டைம் சஞ்சிகை. 1923 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அமெரிக்காவின் முதலாவது வாராந்தரி என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

எடுக்கும் நேரம் குறுகியது என்ற சுலோகத்தை சுறுசுறுப்பான வாசகர்களுக்காக தனதாக்கியுள்ள டைம் சஞ்சிகை 2020 ம் ஆண்டு வரை வாராந்தரியாகவும் அதன் பின்னர் மாதமிருமுறையாகவும் 120 மில்லியன் ஆங்கில வாசகர்களை நேசிப்புடன் வாசிக்க வைக்கின்றது.

அச்சுப் பதிப்பாகவும் மின் இதழாகவும் தற்பொழுது அதன் வாசகர்கள் விரும்பியவாறு பெற்றுக் கொள்ளலாம்.

தீவிர செய்திகளுக்கு முக்கியத்துவம், அரசியல் பிரமுகளுக்கும் துறைசார் பிரபலங்களுக்கும் முன்னுரிமை, கலை கலாசார நிகழ்வுகளை முன்னெடுப்பு, நாட்டு நடப்புகள் மற்றும் சுவாரஸியமான பொழுதுபோக்கு அம்சங்கள், அலசல்கள் நிறைந்திருப்பது அதன் நிலைத்த காத்திரமான வெற்றிக்கான காரணங்கள் என்பார்கள் திறனாய்வாளர்கள்.

இதன் ஐரோப்பியப் பதிப்பு லண்டனிலிருந்து வெளியாகி், தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, மற்றும் ஆபிரிக்கா நாடுகளைச் சென்றடைகின்றது.

ஆசியாப் பதிப்பு தலைமையகத்தை ஹொங்கொங்கில் கொண்டுள்ளது.

சிட்னியை தலைமையகமாக்கி வெளிவரும் தென் பசுபிக் இதழ், அவுஸ்திரேலியா, நியூ ஸிலாந்து, பசுபிக் தீவுகள் மக்களுக்குரியது.

1942 முதல் 1979 வரை வெளிவந்த கனடிய பதிப்பில், மேலதிகமாக ஐந்து பக்கங்களில் கனடா பற்றிய கட்டுரைகள், செய்திகள் இடம் பிடித்தன.

1923ல் டைம் சஞ்சிகையை ஆரம்பித்தது மட்டுமல்லாது அதன் பிரதம ஆசிரியர்களாகவும் பிரிட்டன் ஹெடனும், ஹென்றி லூஸும் செயற்பட்டனர்.

2023 ஆண்டு முதல் சாம் ஜேக்கப் பிரதம ஆசிரியராகவுள்ளார்.

நூற்றாண்டு காணும் பிரதான சஞ்சிகையின் நூற்றுக் கணக்கான பிரதம விருதுகள் மதிப்புமிக்கவை!

உலகின் கவனத்தை கவர்ந்த அல்லது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியோருக்கான ஓர் அங்கீகாரம் மட்டுமே இதுவாகும்.

பணமோ, பத்திரமோ, பட்டயமோ, பதக்கமோ டைம் சஞ்சிகை வழங்குவதில்லை. எனினும் வசதி கருதி இதனை விருது என்றே பரவலாக சகலரும் குறிப்பிடுகின்றனர்.

“ஆண்டின் சிறந்தவர்களாக கௌரவிக்கப்படுபவர்கள் வசதி மிக்கவர்கள். நாம் பணமாக எத்தொகையை வழங்கினாலும் அதனை எமக்கே இரட்டிப்பாக திருப்பித்தரக்கூடிய வல்லமை உள்ளவர்கள். பட்டயமும் பத்திரமும் தமது வரவேற்புக் கூடத்தை மட்டும் அலங்கரிக்கும். தம்மை காண வருபவர்கள் மட்டுமே அதனை காண்பர். ஆனால் சஞ்சிகையில் வெளிவரும் குறிப்புகள் அவ்வாறல்ல. உலகம் முழுவதும் சஞ்சிகை செல்லும் இடமெல்லாம் தம்மையும் எடுத்துச் செல்லும் என்ற அபிப்பிராயமும் அவர்களிடம் உண்டு” என ஆரம்ப கால பிரதம ஆசிரியர் ஒருவரின் கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

1927 ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவிலிருந்து 3600 மைல் தூரத்திலுள்ள பிரான்ஸை மூன்றரை மணித்தியாலங்களில் முதன்முதலில் விமானத்தில் பறந்து சாதனை புரிந்தவர் சார்ல்ஸ் லிண்ட்பெர்க் என்ற அமெரிக்கர்.

1927 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை முகப்பில் அவரது படத்தை பிரசுரிக்காது விட்டமை பெரிய வரலாற்றுப் பிசகு எனக் கருதிய டைம் சஞ்சிகையின் ஆசிரிய குழு, அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அவ் வருடத்திற்குரிய சிறந்த மனிதன் என்ற கௌரவத்தை வழங்கி முகப்பில் அவரது படத்தை வெளியிட்டதுடன் வருடந்தோறும் இதே போன்ற கௌரவம் தொடரும் எனவும் பிரகடனப்படுத்தியது.

15 சதங்களுக்கு அன்று விற்பனையான அந்த இதழின் இன்றைய மதிப்பு 500 டொலர்களாகும்.

ஆண்டின் சிறந்த மனிதராக வருடாவருடம் ஆளுமை மிக்க ஒருவரை கிரமமாக தெரிவு செய்யும் டைம் சஞ்சிகை, இடைக்கிடை கூட்டாகவும்

பலரைத் தெரிவு செய்து அட்டைப் படமாக்கி கௌரவிப்பதை 1927 ம் ஆண்டு முதல் தனது தனித்துவமான வழமையாகக் கொண்டுள்ளது.

2023ம் ஆண்டு தனது 100 ஆவது ஆண்டை பூர்த்தி செய்த டைம் சஞ்சிகை வருடத்தின் சிறந்த மனிதர் என இதுவரை 111 சிறந்த ஆளுமைகளை தனது முகப்பில் சிறப்பாகச் சிறப்பித்துள்ளது.

இதனைப் போலவே அளப்பரிய சேவை செய்த 100 பேரை உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற ஆளுமைகள் என 2000 ம் ஆண்டு முதல் பிறிம்பாக பட்டியலிடும் டைம் சஞ்சிகையின் சிறப்பிதழான டைம்100, அவர்கள் பற்றிய விபரங்களை தவறாமல் உள்ளேயும், அனைவரதும் படங்களை சில வேளை முகப்பிலும் கொண்டிருக்கும் மரபையும் கடைப்பிடிக்கின்றது.

கடந்த நூற்றாண்டில் செல்வாக்கு பெற்றிருந்த 100 ‘மைல் கல்’ ஆளுமையாளர்களை கௌரவிக்கும் நோக்குடன் ஆரம்பமான டைம்100 என்ற இத் திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதால் வருடாவருடம் வியாபகம் பெற்று இன்று வரை நீடிக்கின்றது.

நடப்பு வருடத்தில் உன்னதமாகவோ அல்லது அதற்கு முரணாகவோ அதிக அளவில் பத்திரிகைகளில் இடம் பெற்ற தனிநபரோ அல்லது குழுவோ அல்லது திட்டமோ அல்லது செயற்பாடோதான் டைம் சஞ்சிகையின் இத்தகைய விருதுகளுக்குரிய தகுதியும் அடிப்படை ஆதாரமும் ஆகும்.

சஞ்சிகையின் ஆசிரிய குழு சிபார்சு செய்ய, பிரதம ஆசிரியர் தீர்மானிக்க, உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் வரை விருதுக்குரியவரை பகிரங்கப்படுத்தாத சம்பிரதாயம் அங்கு கடைப்பிடிக்கப்படுவதை அறிந்தவர் அறிவர்.

வாசகர்கள் முன்பு கடித மூலமும் தற்பொழுது இயங்கலை ஊடாகவும் தமது தேர்வை தெரிவிப்பதும் சில வேளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

விருதுனர் பற்றிய விபரங்களை முன் கூட்டியே தெரிந்தவர்கள் கூட தெரியாதவர்கள் மாதிரி நடிப்பதில் கில்லாடிகள் என்ற கருத்தும் பொதுவெளியில் உண்டு.

உத்தியோகபூர்வமாக தாம் அங்கீகரிக்கப்பட்ட அறிவிப்பு கிடைத்ததும் 90 வீதமானவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு டைம் சஞ்சிகையின் இந்த கௌரவத்தை எனக்கான நேரம் வந்தது This is my TIME என ஆங்கிலத்தில் அழகாக இரட்டை அர்த்தத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சொல்வார்களாம்.

இதில் உள்ள நேரம் என்பது வேளையையும் சஞ்சிகையையும் ஒருமித்தே குறிப்பது தெளிவு.

நேரம் இலவசமானது. ஆனால் விலை மதிப்பு மிக்கது என்ற சொலவடை இதற்கும் நன்கு பொருந்தும்.

அண்ணளவாக டைம் சஞ்சிகையின் 4000 இதழ்கள் இது வரை வெளிவந்துள்ளன.

அவற்றுள் வழமையான வருட இதழ்களுடன் ஒரு சில டைம்100 இதழ்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 120 இதழ்கள் சிறந்த ஆளுமைகளை முகப்பில் அடையாளமிட்டுள்ளன.

ஆண்டின் சிறந்த மனிதராக ஆகக் கூடுதலான தடவை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் ருஸ்வோல்ட. 1932 , 1934, 1941 ஆகிய மூன்று வருடங்களிலும் பெருமை பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிகளில் கால்வின் கூலிட்ஜ், ஹெர்பாட் ஹுவர், ஜெரால்ட் போட் ஆகிய மூவரைத் தவிர ஏனைய அனைவரும் டைம் சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த மனிதராக அலங்கரித்துள்ளனர்.

1930 ம் ஆண்டின் சிறந்த மனிதராக டைம் சஞ்சிகை பெருமைப் படுத்தியது மகாத்மா காந்தியை.

பாப்பரசர்களான 23 வது ஜோன் 1962 ஆண்டிலிலும், 2வது ஜோன் போல் 1994 ஆண்டிலிலும், பிரான்ஸிஸ் 2013 ஆண்டிலிலும் சிறப்புப் பெற்றனர்.

1937 ல் தைவானிலிருந்து சியாங்கே ஷேக்கும் அவரது மனைவி சூன் கெய் லிங்கும், 1951 ல் ஈரானிலிருந்து மொகமட் மொசேடேக்கும், 1974 ல் சவுதி அரேபிய மன்னர் பைசலும், 1978 மற்றும் 1985 வருடங்களில் சீனாவிலிருந்து டென் ஷியா பின்னும், 1986 ல் பிலிப்பைன்ஸின் குரோசன் அக்கியுனோவும், 1979 ல் ஈரானின் அயத்துல்லா கோமானியும், 1993 ல் பாலஸ்தீனத்தின் யாஸீர் அரபாத்தும், இஸ்ரேலின் யிட்சாக் ராபினும் ஆசியா கண்டத்திலிருந்து சிறந்தவர்களாக தெரிவு பெற்றனர்.

வழமையான வார இதழ்களின் அட்டைப்படங்களில் ‘எக்கச்சக்கமான’ ஆசியர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது வேறு கதை!

டைம் சஞ்சிகையின் வழமையான வார வெளியீட்டு முகப்புகளில் ஆகக் கூடுதலாக 55 தடவைகள் இடம் பெற்றவர் அமெரிக்க முன்னாள் அதிபர் றிச்சாட் நிக்ஸன் ஆவர்.

மக்கள் மத்தியில் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்த அந்நாள் சபாநாயகர் ஜோசப் ஜி.கனன் 1923 ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி வெளியான டைம் சஞ்சிகையின் முதலாவது வார இதழின் முகப்பை அலங்கரித்தார்.

டைம் சஞ்சிகையால் முதற் தடவையாக வழங்கப்பட்ட ஆண்டின் சிறந்த மனுஷி விருதை 1937 ல் வாலிஸ் ஸிம்ஸன் தனதாக்கினார்.

பிரித்தானிய மன்னர் எட்டாவது எட்வேட் முடி துறக்கக் காரணமாயிருந்த காதல் மனைவி வாலிஸ் ஸிம்ஸன் என்பது தெரிந்ததே.

ஏழு தடவைகள் பெண்கள் ஆண்டின் சிறந்த ஆளுமைகளாகி உள்ளனர்.

மைல்கல் கௌரவங்களாக 1949 ல் அரை நூற்றாண்டின் சிறந்த மனிதராக வின்ஸ்டன் சேர்ச்சிலும், 1989 ம் ஆண்டு தசாப்தத்தின் சிறந்த மனிதராக மிஷைல் கோபர்சேவும் தெரிவாகினர். 1999 டிசம்பர் மாதம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக அல்பேட் ஐயன்ஸ்டீனும் அவருக்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் மகாத்மா காந்தியும் பிராங்ளின் ருஸ்வோல்ட்டும் டைம் சஞ்சிகையின் தெரிவில் மிளிர்ந்தனர்.

ஆண் பாலை குறிக்கும் சிறந்த மனிதனுக்குரிய அல்லது பெண் பாலை குறிக்கும் சிறந்த மனுஷிக்குரிய விருதுகள் என்றிருந்ததை 1999 ம் ஆண்டு முதல் பொதுப் பாலைக் குறிக்கும் வகையில் சிறந்த மனிதருக்குரிய விருது என மாற்றியது டைம் நிர்வாகம்.

1983 ம் ஆண்டுக்குரிய சிறந்த தெரிவு கணனி. அதற்கு டைம் சஞ்சிகை இட்ட பெயர் ஆண்டின் இயந்திரம் என்பதாகும்.

ஈவ்லின் வா என்ற பிரபல ஆண் எழுத்தாளரை 100 பிரபல பெண் எழுத்தாளர்களுள் ஒருவர் எனக் குறிப்பிட்டு பின் மனம் வருந்திய கைங்கரியமும் டைம் சஞ்சிகைக்கு உண்டு.

அவமதிப்பை குறிக்கும் நோக்கில் சிவப்பு புள்ளடி அடையாளத்துடன் ஐந்து தடவைகள் டைம் சஞ்சிகையின் முகப்பு வெளி வந்துள்ளது. அதில் அடெல்ப் ஹிட்லர் மறைவு (1945) , ஈராக் முற்றுகைக்காக சதாம் ஹுசைன்(2003) , அபு முசாப் அல் சர்காவி மறைவு (2006) , ஒஸாமா பின் லைட்டன் மறைவு (2011) , படு மோசமான ஆண்டு (2020) இவற்றுடன் இதுவரை கறுப்பு புள்ளடியுடன் வெளிவந்த ஒரே ஒரு இதழ் ஜப்பான் தேசீய கொடி (1945) இரண்டாவது உலக மகா யுத்தத்தில் சரணை பிரதிபலித்தது.

இந்த அவமதிப்பு அனைத்தும் அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவோ அல்லது அமெரிக்க அரசுக்கு எதிராக செயல்பட்டதற்காகவோ என்ற கருத்தும் நிலவியது.

1979 ம் ஆண்டு முரண்பட்ட செயல்களால் பிரசித்தி பெற்றிருந்த அயத்துல்லா கோமானியை ஆண்டின் மனிதராக்கியதால் விற்பனையிலும் விளம்பரத்திலும் பாரிய சரிவு தோன்றிட அதன் பின்னர் முரண்படுவோருக்கு முன்னுரிமை வழங்குவதற்கு டைம் சஞ்சிகை முற்படவில்லை.

உலகின் மோசமான ஜனாதிபதி, போர்க் குற்றவாளி, இனவாதி, மோசடிப் பேர்வளி, மகா திருடன் கோத்தபாயா ராஜபக்ச என முகப்பில் குறிப்புகளுடன் முக நூல் மற்றும் பகிரி மூலம் சித்தரிக்கப்பட்டிருந்த 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 திகதி வெளியான டைம் சஞ்சிகை போலியானது எனவும் தம்மால் வெளியிடப்படவில்லை என்றும் நிராகரித்தது டைம் சஞ்சிகை.

என்றும் புதுமை எதிலும் புதுமை என்பதே டைம் சஞ்சிகையின் கோட்பாடு!

புதிய சிந்தனைகள் புதிய எண்ணங்கள் புதிய வெளிப்பாடுகள் என்பதே டைம் சஞ்சிகையின் நம்பிக்கை!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.