“குருவிக்காடு” ….. சிறுகதை ….. சோலச்சி.
காவேரி ஆற்றை நம்பியே கம்பீரமாய் வாழ்ந்து வருகிறது சோழமண்டலம். சோழமண்டலத்தின் நூற்றுக்கணக்கான ஊர்களுக்கும் சோறு கொடுப்பதே இந்த காவேரிதான். குடகு மலையில் பிறந்த அவள், சோழமண்டலத்தில் இருக்கும் குருவிக்காட்டையும் முத்தமிட்ட பிறகுதான் வங்க கடலுக்கே வந்து சேர்கிறாள்.
தென்னை மரங்களும் அதில் தொங்கும் தூக்கணாங்குருவி கூடுகளும் பச்சை பட்டாடை உடுத்திய வயல்வெளிகளும் ஆங்காங்கே தென்னை மரங்களின் மேனியில் வளர்ந்து படர்ந்து இருக்கும் மிளகு கொடிகளும் காண்பவரை சுண்டி இழுத்தது அந்த குருவிக்காடு கிராமம்.
அன்றொரு நாள்…
வரப்பில் மாட்டுக்குப் புல் அறுத்துக்கொண்டிருந்த கண்ணகி, சாலையில் அடுக்கடுக்காக கார்கள் செல்வதைப் பார்த்து “ஏலே….. ஊருக்காரக எல்லாம் என்ன பண்றீக…. காருக்காரனுக காருமேல காருபோட்டு திரும்பத் திரும்ப வர்றானுகளே….இந்தச் சீமைய இன்னும் என்னென்ன சீரழிவுக்கு ஆக்கப்போறானுகளோ…. வாங்களே…. நம்ம வயித்துல அடிச்சிட்டானுகளே…..” என வானைப் பிளக்கும் அளவுக்கு வயிற்றில் அடித்துக் கொண்டும் ஓ…வென கத்தியும் கூச்சலிட்டும் வயல்காட்டில் இருந்து விக்குவிக்குனு மூச்சிறைக்க ஓடி வந்தாள்.
வயல்வெளியில் அலறும் சத்தம் கேட்டு என்ன ஏதுனு தெரியாமல் ஆங்காங்கே இருந்த எல்லோரும் ஊர் நடுவில் கூடி விட்டனர்.
விர்…. விர்…. என்ற சத்தத்துடன் ஏழெட்டு கார்கள் குருவிக்காட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தன.
ஆகா….. இவனுக நம்மல நிம்மதியாவே இருக்கவிட மாட்டானுக போலவே….. நம்மலயே இந்தப்பாடு படுத்துறானுகன்னா.. நம்ம புள்ளக்குட்டி காலத்துல இந்த ஊரையே விட்டுவைக்க
மாட்டானுகளே… நாம சேத்துல எறங்குனாத்தான் எல்லாரும் சோத்துல கை வைக்கலாம்… அப்புடி இப்புடினு ஊருநாட்டையும் உசுப்பேத்துறமாறி வக்கனையா பழமொழி மட்டும் இருந்தா போதுமா..? எல்லாரும் நமக்கிட்டயே புடுங்கித்தின்னுப்புட்டு நமக்கிட்டயே எதுக்கேத் திரும்புறானுக… இத இப்புடியே விட்டோம்னா… அப்பறம்… இந்த ஊரு அந்த ஊருனு எல்லா ஊரையும் அழிச்சு உலையில போட்ருவானுக. நம்ம ஊர நாமலே மண்ண அள்ளி மூடிப்புட்டு காசி ராமேஷ்வரமுனு பிச்சை எடுக்கப் போக வேண்டியதுதான்.. ஆளாளுக்கு பேச கூட்டத்துக்குள் சலசலப்பு ஏற்பட்டது.
“சத்த இருங்கப்பா….. எல்லாரும் வந்துட்டிகளா… ஆளாளுக்கு பேசாம… ஊரு அழிச்சு உலையில போட்டுட்டு அவுங்க மட்டும் எந்த ஒலகத்துல உல்லாசமா இருக்கப் போறாங்களாம். வயிறு பசிச்சா வாயில எதையாச்சும் போட்டுத்தானே ஆகனும். பசிச்சா மண்ணையும் தவிச்சா எண்ணையவும் திங்கத்தான் முடியுமா..? இல்ல குடிக்கத்தான் முடியுமா.? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு ஆண்டாண்டுகாலமா நம்ம வழிவந்தவங்க அர்த்தம்பொருத்தம் இல்லாமலா சொல்லிருப்பாங்க. அதுனால ஆளுக்கொன்னா பேசி நம்ம பிரச்சினை திசைமாறி போயிறக்கூடாது. அத்துவிட்டு வேடிக்க பாக்க ஒலகத்துல அத்தன பயலுகளும் துடியாத் துடிக்கிறானுக. நானும் ஒரு முடிவோடத்தான் இருக்கேன். இவங்கள எத்தனை தடவை திருப்பி அனுப்பிச்சிட்டோம். அரசாங்கத்துக்கும் எதிர்ப்பு தெரிவிச்சு பல கட்ட போராட்டம் பண்ணியாச்சு. இன்னைக்கி ரெண்டுல ஒன்னு பாத்துருவோம்….” பெரியவர் முத்தையனின் பேச்சு அனைவரையும் ஒன்று சேர்த்தது.
இப்போது உள்ளது போல் செல்வச்செழிப்பாக குருவிக்காடு அப்போது இருந்ததில்லை. பத்துமைல் தூரத்துக்கு முன்னாடியே நின்றுபோன காவிரிக் கால்வாயை முத்தையனின் அப்பச்சி காலத்தில்தான் மேட்டுப்பகுதியான குருவிக்காடு வரை கொண்டு வந்து சேர்த்தார்கள். மேட்டுப்பகுதிக்கு தண்ணீர் வருவதற்கு சாத்தியமில்லை என்று அரசாங்கமே கைவிட்ட பிறகும் கூட்டுமுயற்சியால் சாத்தியப்படுத்தியவர்கள் குருவிக்காட்டு மக்கள்.
மக்களின் துணிச்சலைப் பார்த்த பிறகுதான் இயந்திரங்களைக் கொண்டு அரசாங்கம் தூர்வாரியது. அந்தக் கால்வாயை மற்ற ஊர்களுக்கும் விரிவுபடுத்தியது. காடாய் கிடந்த மண்ணை கலப்பை கொண்டு ஏர்பூட்டி செழிக்க வைத்தார்கள். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. ஆடுமாடுகளும் நிறைய பெருகியது. தற்போது வயதில் மூத்தவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தாலும் முத்தையனின் பேச்சுக்கு எல்லோருமே கட்டுப்பட்டுத்தான் வாழ்ந்தார்கள்.
பழையபடி குருவிக்காடு வறண்ட நிலமாக மாறிவிடுமோ என்ற அச்சம் முத்தையனின் மனக்கண்ணை வருத்தியது. பாரம்தாங்காமல் அச்சு முறிந்துபோன மாட்டுவண்டியைப்போல்தான் இருந்தார். இருந்தபோதும் தனது கவலையை யாரிடமும் காட்டிக்கொள்ளவே இல்லை. எல்லோருக்கும் துணிச்சலையும் தைரியத்தையும் ஊட்டிக்கொண்டு இருந்தார். எண்பது வயதிலும் கடினமாக உழைக்கும் பெரியவர் முத்தையன்தான் இப்போதும் குருவிக்காடு இளைஞர்களின் கதாநாயகன்.
வரப்பு ஓரங்களில் செழித்து வளர்ந்த தேக்கு மரங்களும் தென்னை மரங்களும் மாமரங்களும் பலாமரங்களும் காற்றில் சுழன்று வீசின. மரங்கள் சுழல்வதைப் பார்த்த நெற்கதிரும் மெல்ல தலை அசைத்தது.
“நம்ம அப்பச்சியும் அப்பத்தாக்களும் நட்டுவச்ச மரஞ்செடிகொடிக…. அதிகாரிகளப் பார்த்து ஊருக்குள்ள வராதிக… போங்கனு காத்தா வீசி விரட்டுதுக. அதுகளுக்கே இம்புட்டு வீரம்னா… அதுக நெழலுல வாழ்ற நாம என்ன முதுகு செத்தவனுகளா…. வரட்டும். என்னதான் நடக்குதுனு பாப்போம்…” முத்தையன் சொன்னதும் எல்லோரும் நெஞ்சை நிமிர்த்தி வண்டிகளை நோக்கியே தங்களது பார்வையை செலுத்தினர்.
என்னடா இது.. இம்புட்டு சனமும் வயவாய்க்காலுக்குப் போயி வேலவெட்டியப் பாக்காம கூடி இருக்குது. இந்தப் போலீஸ்காரங்க நமக்கு முன்னாடியே வந்துருப்பாங்கனு நெனச்சா.. அவுங்க வண்டி ஒன்னத்தக்கூட காணோம். ஊரில் கூடியிருந்தவர்களை கண்ணுற்ற அதிகாரிகள் சாலையிலேயே வண்டிகளை நிறுத்தினர். வண்டியிலிருந்து யாருமே இறங்கவில்லை. வண்டியின் அருகில் பொதுமக்களும் நெருங்கவில்லை. வண்டியில் இருந்த அதிகாரி ஒருவர் தன்னுடைய செல்போனை எடுத்து காவல்துறைக்கு தொடர்பு கொண்டார். சிறிது நேரத்தில் நான்கைந்து காவல் துறை
வாகனங்கள் வரிசை கட்டி வந்து நின்றன. வண்டியில் இருந்து இறங்கிய காவலர்கள் துப்பாக்கிகளுடன் கூட்டத்தை நோக்கிச் சென்றனர்.
கூட்டத்திலிருந்தவர்கள் எல்லோரும் ஒரு அடிகூட நகராமல் அப்படியே வேடிக்கை மட்டுமே பார்த்தபடி நின்றனர். இந்த ஊர்க்காரனுக இன்னக்கி என்ன முடிவோடு நிக்கிறானுகனு தெரியலயே என்று உயர் அதிகாரி தனது மன ஓட்டத்தை குருவிக்காடு முழுவதும் ஓடவிட்டிருந்தார். எவ்வளவோ முயற்சித்தும் அவரால் உண்மை நிலையை கண்டறிய முடியவில்லை. மண்ணுக்குள்ள என்ன இருக்குனு கண்டறிய மிசினு இருக்கு. இந்த மனசுக்குள்ள என்ன இருக்குனு கண்டுபிடிக்க யாராவது மிசினு கண்டுபுடுச்சிருக்காங்களா…? மாயம்மந்திரம் பண்ணுறவனுக்கிட்ட போயி நாம எப்புடி கேட்குறது…. ம்… எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளிப்போம். அரசாங்கம் நமக்கு துணையா இருக்கும்போது நாம என்னத்துக்கு மனசப்போட்டு கொழப்பிக்கிட்டு என்ற முடிவுக்கு உயர் அதிகாரி வந்திருந்தார்.
காவல்துறை கொண்டு வந்திருந்த ஒலிபெருக்கியில் உயர் அதிகாரி பேசத் தொடங்கினார்.
“இது அரசாங்கத்தோட உத்தரவு. பலமுறை பேச்சு நடத்தியும் நீங்க ஒத்துக்கல. மீத்தேன் திட்டம் நம் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம். உங்க ஒத்துழைப்பு இல்லனாலும் அரசு நிலத்தை தானாக எடுத்துக்கிட்டு திட்டத்தை ஆரம்பிச்சிடும். ஒத்துழைப்பு கொடுத்தா குடும்பத்துல ஒருத்தருக்கு அரசு வேலையும் நிலத்துக்கு உண்டான பணமும் கிடைக்கும்….” சொல்லிக் கொண்டிருக்கும்போதே வந்திருந்த மற்ற அலுவலர்கள் ‘ஷூ’ போட்ட கால்களோடு அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகளை மிதித்தவாறு வயலுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்.
“ஆத்தா…. வீர…மா….காளி…. உனக்கு கண்ணு இல்லையா…? ஒனக்கு பூசை பண்ணிட்டுத்தானே அறுக்க ஆரம்பிப்போம். எங்க வயித்துல அடிக்கிறானுக…. நீ வெறும் கல்லாவே இருக்கியே….? ஓம்….மனசு இன்னு….மா எறங்கல.. வெளஞ்ச நெல்லுல வெவரங்கெட்த்தனமா நடந்துக்குறானுகளே… எந்தக் கொறையும் இல்லாம ஒனக்கு பூசை பண்ணுனதுக்கு நீ எங்களுக்கு கொடுக்குற கூலி இதுதானா…..” தலைவிரித்து மார்பில் தனது கைகளால் அடித்துக் கொண்டு தரையில் புரண்டு கதறினாள் பணசெல்வி.
எதையும் காதில் வாங்காமல் வந்தவேலையை கவனிப்பதிலேயே அதிகாரிகள் குறியாக இருந்தனர். பெண்கள் சிலர் மண்ணை வாரி எறிந்தனர். கூட்டத்துக்குள் சலசலப்பும் ஏற்பட்டது. முத்தையன் என்ன சொல்லப்போகிறார் என்ற ஆவலோடு பலரும் பெரியவர் முகத்தைப் பார்த்தவாறு நின்றனர்.
“அய்யா… இனிமேலும் சும்மா இருந்தா…. குருவிக்காடு மட்டுமல்ல… இந்த சோழமண்டலமே சுடுகாடா மாறிவிடும். சோழமண்டலத்து நெல்லுதான் எல்லாருக்கும் சோறு போடுது. இது தெரிஞ்சும்.. அரசாங்கமே இந்த மண்ணக் கை கழுவிருச்சு. இனிமேலும் அகிம்சையை கடைப்பிடிச்சா நாம சாக வேண்டியதுதான். நாம யாருங்கிறத காட்டியே ஆகனும். தடாலடியா இறங்குனாதான் சரிபட்டுவரும்.” பெரியவர் முத்தையனிடம் வாதம் செய்தான் நிலவன்.
“தம்பிக யாரும் அவசரப்படாம கோபத்த கொஞ்சம் இறக்கி வையிங்க.. அதிகாரிக என்ன முடிவோடு வந்துருக்காங்கனு தெரிஞ்சுக்குவோம்.” முத்தையன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே.,
“இனிமே என்னத்த தெரிஞ்சுக்கிறது. வெவரம் தெரிஞ்ச காலத்துலருந்து செருப்பு போட்டு வயலுல நடந்தது இல்ல. இவங்க என்னடானா உசுரக் காப்பாத்துற சாமிய பூட்ச்காலால மிதிச்சுக்கிட்டு போறாங்க. அதிகாரம் இருக்குனா எல்லாம் பண்ணுவாங்களா…? இனிமேலும் பாத்துக்கிட்டு சும்மா இருந்தா……” கத்திக்கொண்டே கூட்டத்தினர் பெரிய தடிகளை எடுத்துக்கொண்டு வாகனங்களை நோக்கி ஓட ஆரம்பித்தனர். காவல்துறையினர் வானத்தை நோக்கி பலமுறை சுட்டும் கூட்டம் நிற்பதாக இல்லை. வாகனங்களை அடித்து நொறுக்கும் நோக்கில் கூட்டம் வேகம் எடுத்தது. அப்போது காவல்துறை அதிகாரிக்கு போன் வந்தது.
“இப்ப கிளம்பி வாங்க… கூட்டத்தை ஒடுக்கிற விதமா ஒடுக்கிக்குவோம்” எதிர்முனையில் பேசியதும், “இன்னைக்கி ஆய்வு பண்ண வேண்டாம். எல்லாரும் கிளம்பி வாங்க..” என காவல்துறை அதிகாரி ஒலிப்பெருக்கியில் எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக பேசினார்.
கண் சிமிட்டும் நேரத்தில் அனைத்து வாகனங்களும் அலுவலர்களை ஏற்றிக்கொண்டு பின்னோக்கி ஓட்டம் எடுத்தது.
வயல்வெளியில் செய்வதறியாது திகைத்து நின்ற ஒன்றிரண்டு அதிகாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
வெட்டப் போகும் ஆட்டை போல விழித்த அதிகாரிகளில் ஒருவர் பேசத் தொடங்கினார். “இங்கேருங்க… நாங்க கவர்மெண்ட் ஆளுக. எங்க மேல கைய வச்சீங்க குருவிக்காடே கூண்டுக்குள்ள போக வேண்டியதுதான்….”
“வேர்வை சிந்தி வெளைய வச்ச நெல்ல.. மிதிச்சு சேதப்படுத்திப்புட்டோமேங்கிற குத்த உணர்ச்சி இல்லாம பேசுற பேச்சப் பாத்தீகளா… இவங்கெல்லாம் சோறுதண்ணி திங்காம வானத்துலருந்து குதிச்சா வந்தாங்க. அய்யா இந்தமாறி அதிகாரிகளுக்கு நாம யாருனு காட்டியே ஆகனும். அப்பதான் அரசாங்கமும் நம்ம உணர்வுகளை புரிஞ்சிக்கும்..” கொதித்தெழுந்தான் வேலுப்பிள்ளை.
“பாவம் இவங்க என்ன பண்ணுவாங்க. விட்ருங்க. வாங்குற காசுக்கு மாறடிக்கிறாங்க. அரசாங்கம் சொல்றதத்தான் இவங்கனால செய்ய முடியும். திட்டம் தப்புனு தெரிஞ்சாலும் இவங்க சொல்றத யாரு கேட்பா. என்ன செய்வாங்க” முத்தையன் சொன்னதும் அதிகாரிகளை மக்கள் விடுவித்தனர்.
எல்லோரது முகமும் சித்திரை மாசத்து உச்சி வெயிலைப்போல் இருந்தது. இப்போதைக்கு நிழல் போன்ற ஆறுதல் தேவைப்பட்டது.
“அரசாங்கத்துக்கு ஒரைக்கிற மாதிரி நாம ஏதாச்சும் செஞ்சே ஆகணும். அப்பதான் நாம இந்த மண்ணுல உசுரோட வாழ முடியும்.. இல்லன்னா சோத்துக்கும் தண்ணிக்கும் ஊர்ஊரா அலை வேண்டி வரும்” பெரியாத்தாள் சொன்னது எல்லோருக்கும் சரியென்றே தோன்றியது.
“ம்…. ஒரே தேசம்னு வாய் கிளியே பேசுறோம். ஏற்கனவே, மீத்தேன் திட்த்துலருந்து நாம மீள முடியாம இருக்கோம். இப்ப என்னடானா கன்னடத்துக்காரங்க புதுசா ஒரு அணைய கட்ட போறதா ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருந்தத நிறைவேத்தியே தீருவோம்னு புடிவாதமா இருக்காங்க. நாம எந்தெந்த கொடுமைக்குத்தான் ஆளாகுறது. அணையக் கட்டுனா… நாம மேலும் நாசமா போக வேண்டியதுதான். மத்த ஊர்க்காரங்களும் என்ன பண்றாங்கன்னு பார்ப்போம். இப்ப அவங்க அவங்க வேலைய பாருங்க..” பெரியவர் சொன்னதும் கூட்டம் கலைந்தது. சாலை வெறிச்சோடியது.
ஒன்றிரண்டு காகங்கள் சாலையில் நிற்கவும் பறக்கவுமாக இருந்தன. வயல்வெளியில் கொக்குகள் சில வேடிக்கை பார்த்தன. இந்த மண்ண பசுமையா மாத்துறதுக்கு இந்த மக்கள் எவ்ளோ கஷ்டப்பட்டாங்க. பெரியவர்களோடு சேர்ந்து சின்னவனாக இருந்த முத்தையனும் கால்வாயில் கூடையில் மண்ணை சுமந்து கரையில் கொட்டியதும் முள் காட்டை அழித்ததும் நினைவில் வந்து போனது. இன்னக்கி இந்த மண்ணு இப்புடி பச்சையா இருக்குனா எத்தனையோ பேரோட உழைப்பு….. கண்கலங்கினார் முத்தையன்.
சில நாட்களுக்குப் பிறகு..
இரவு பதினொரு மணி. ஊர் முகப்பில் இருக்கும் பூவரசு மரத்தடியில் வேலுப்பிள்ளையும் இளைஞர்கள் சிலரும் வழக்கம்போல் பேசிக்கொண்டு இருந்தனர். ஏதோ வண்டிகள் வரும் சத்தம் கேட்டது. என்ன ஏதுனு யோசிப்பதற்குள் மின்னல் வேகத்தில் ஊருக்குள் நுழைந்த காவல்துறை வாகனம் இமைப்பொழுதில் இளைஞர்களை அள்ளிச் சென்றது.
ஊர் முழுவதும் சூறாவளிக் காற்றாய் செய்தி சுழன்று பறந்தது. சுற்று வட்டார கிராமமே இரவோடு இரவாக அந்த தேசிய நெடுஞ்சாலையில் கூடியது. குருவிக்காடு கிராமம் போராட்டம் நிறைந்த பகுதியாகவே பார்க்கப்பட்டது. எப்போது யார் வருவார்.. என்ன நடக்கும் என்று தெரியாத சூழல் நிலவியது.
கண்களுக்கு எட்டிய தூரம்வரை மனித தலைகள். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நகர முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தன. ஆம்புலன்ஸ் செல்வதற்கு மட்டும் மக்கள் அனுமதித்தனர். அர்த்தராத்திரியில் நடைபெற்ற சாலை மறியலால் வாகனங்கள் நீண்டதூரம் காத்திருந்தன. தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியரும் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
“கட்டுக்கடங்காத கூட்டம் எங்கிருந்து வந்தது. இளைஞர்களை கைது செய்யும் விவகாரத்தை யாரும் கசியவிட்டனரா..?” என்று காவல்துறை அதிகாரியிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு மாவட்ட ஆட்சியரும் காவல்துறை அதிகாரியும் மக்களிடம் சமாதான பேச்சு நடத்தினர்.
போராட்டத்தைக் கைவிடுவதில்லை என்கிற முடிவோடு இருக்கும் மக்களிடம் எதைஎதையோ பேசியும் தோல்வியிலேயே முடிந்தது. தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் கணக்கில்லாத சரக்கு
வாகனங்களும் தொலைதூரப் பேருந்துகளும் சாரைசாரையாக அணிவகுத்து நின்றன. வாகனங்களில் வந்திருந்தவர்களும் சாலையில் வழிவிடச்சொல்லி கீழே இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இரண்டுபக்கமும் போராட்டக்களம் சூடுபிடித்தது. மாவட்ட ஆட்சியரும் காவல்துறையும் செய்வதறியாது திகைத்தனர்.
“வேலுப்பிள்ளையையும் மற்ற இளைஞர்களையும் உடனே விடுதலை செய்” ஓங்கி ஒலித்த ஒருமித்த கருத்து அந்த இரவிலும் வானத்தையே பதம் பார்த்தது.
“அவங்க சட்டவிரோதமா ஆயுதங்கள பதிக்கி வச்சு இருந்தாங்க. அதுக்கான ஆதாரம் எங்ககிட்ட இருக்கு. அதனால அவங்கள இப்போதைக்கி விட முடியாது. கூட்டத்த கலைக்கலனா துப்பாக்கி சூடு நடத்தப்படும்…” காவல்துறை அதிகாரி ஒலிபெருக்கியில் ஓங்கி பேசினார். அவரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனங்களில் வந்திருந்தவர்கள் வாகனத்தின் ஒலியை உண்டாக்கி அலரவிட்டனர். கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் வாகனங்களும் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தமுடியாமல் காவல்துறை திணறியது.
“உங்களுக்கு விவசாயகள சுட்டுக்கொல்றது ஒன்னும் புதுசு இல்லையே. சுட்டுக்கொல்றதுனு முடிவுக்கு வந்துட்டா காக்காகுருவியப்போல சுட்டுத்தள்ள வேண்டியதுதானே. நாங்க எல்லாத்துக்கும் துணிஞ்சுதான் வந்துருக்கோம். அடுத்த நாட்டுக்காரன் ஆளும்போதுகூட நிம்மதியா ஒருவாய் கஞ்சி குடிக்க முடிஞ்சுச்சு. நம்ம நாட்டுக்காரன் ஆளப்போறான்டோனு ஆடிப்பாடுனோம்ல… எங்களுக்கு இதுவும் வேணும் இன்னம்மும் வேணும்….” பெரியவர் முத்தையன் பேச்சை கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார் மாவட்ட ஆட்சியர்.
பெரியவரின் பேச்சு இன்னும் பெரிய படையையே உருவாக்கிவிடும் என நம்பினார் மாவட்ட ஆட்சியர். எப்படியாவது போரட்டத்தை தடுத்து பொதுமக்களை அப்புறப்படுத்த எண்ணினார்.
“தஞ்சாவூர் நீதிபதி வீட்டில் எல்லோரையும் ஆஜர்படுத்தியிருக்கோம். அதுனால இப்போதைக்கு அவங்கள கொண்டுவர முடியாது. பொழுது விடிஞ்சதும் என்னோட சொந்த ஜாமின்ல நானே கொண்டுவந்து உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்” மாவட்ட ஆட்சியரின் சமாதான பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவரை மேலும் பேசவிடாமல் தடுத்தனர்.
“அப்டினா….. அவுங்கமேல கேஸ் போட்டு செயிலுல அடைக்கிறதுனு முடிவே பண்ணிட்டிங்களா… எங்க மேலயும் போடுங்க. எங்களையும் செயிலுல போடுங்க……” எல்லோரும் உரக்க கத்தினர். வாகனங்களில் வந்தவர்கள் போராட்டம் வேறு வண்டியின் ஒலியை எழுப்பி கத்திக்கொண்டு இருந்தனர்.
என்னடா இது ராத்திரி நேரத்துல இப்புடி ஒரு சோதனை என மாவட்ட ஆட்சியர் அலுத்துக்கொண்டார். கூட்டம் கலைவதாக இல்லை. விடுதலை செய்… விடுதலை செய்… என மக்களின் குரல் ஓங்கி ஒலித்த வண்ணம் இருந்தது.
கட்டுக்கடங்காத கூட்டத்தாலும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து தடையாளும் மாவட்ட நிர்வாகம் வேறுவழியில்லாமல் பணிந்தது. சூரியன் கீழ்வானில் எட்டிப் பார்க்க தொடங்கியது. வேலுப்பிள்ளை உட்பட இளைஞர்கள் அனைவரும் அதிகாலையில் விடுதலை செய்யப்பட்டனர். புகையைக் கக்கிக்கொண்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
நாட்கள் கடந்தன…
அன்றொரு நாள் நண்பகலில் வேலுப்பிள்ளை, சோலைமணி, தம்பிவீரன் மூவரும் பெரியவர் முத்தையனை சந்தித்தனர்.
வாகை மரத்தடியில் கட்டிலில் அமர்ந்திருந்தார் பெரியவர் முத்தையன். இவர்களைப் பார்த்ததும் தம்பிகளா…. வாங்கப்பா என்றார்.
“அயயாவுக்கு வணக்கம்..” இது வேலுப்பிள்ளையின் குரல் .
“ கொஞ்சம் இருங்கப்பா…’’ என்றவர் “தொட்டியா…. செவலக்களைய தண்ணி காமிச்சு கட்டிட்டு பெரியவாய்க்கால் தண்ணிய கீழச்செய்க்கு திருப்பிவிட்ரு.”
“சரிங்கய்யா….” என்றவாறு வேலை பார்க்கும் தொட்டியன் மாமரத்து அடியில் கட்டி இருந்த மாட்டை அவிழ்க்கப் போனார்.
சொல்லுங்கப்பா என்பதுபோல பார்த்தார் பெரியவர்.
“அய்யா நமக்கு இது சோதனைக் காலம். ஒரு பக்கம் மீத்தேன் பிரச்சினையிலிருந்து மீள முடியாம போராடிக்கிட்டு இருக்கோம். இப்ப கன்னடமும் காவிரியில அணையை கட்ட டெண்டர் விட்டுருச்சு. இது ஒன்றுபட்ட தேசமானு தெரியல. ஒன்றை விட்டு தேசமாத்தான் இருக்கு. கன்னடம் அணைய கட்டுனா இந்தச்
சோழமண்டலமே பாலை மண்டலமா மாறிடும். நீங்க சின்னவங்களா இருக்கும்போது ஏற்பட்ட பஞ்சத்துல கூழு கிடைக்காமல் வரப்புகளை வெட்டி எலிக்கறி சாப்பிட்டதா எத்தனையோ முறை சொல்லிருக்கீங்க…… அந்த நிலை வராம நாமதான் பார்த்துக்கனும்” சொல்லி முடித்தான் வேலுப்பிள்ளை.
“உரிமைக்கு போராடிய நம்மள ஆயுதம் பதுக்குனதா அரசாங்கம் கைது பண்ணுச்சு. அரசாங்கத்தோட கத்திக்கு எல்லாபக்கமும் கூராத்தான் இருக்கும். நாம ரொம்ப எச்சரிக்கையா செயல்படனும். அன்னைக்கி விட்டுட்டுப் போயிட்டாங்க. ஆனா.. எப்ப வேணாலும் போலிஸ்படை குருவிக்காட்டுக்குள்ள நுழையலாம்” கொதித்தெழுந்தான் தம்பிவீரன்.
“என்னத்த சொல்ல…. சுபாஷ் சந்திரபோசையே தீவிரவாதியாத்தானே நம்ம நாடு பாத்திச்சு. நம்மல்லாம் சுண்டக்காய்க்கு சமம்…. எந்த முடிவு எடுத்தாலும் சட்டுப்புட்டுனு சீக்கிரமா எடுக்கனும்” சலித்துக் கொண்டான் வேலுப்பிள்ளை.
“நானும் எவ்ளோ யோசிச்சு பாத்துட்டேன். எனக்கு எதுவும் மட்டு படல…. அரசியல் கட்சிகளின் போராட்டம் நமக்கு ஆதரவாக இருந்தாலும் எந்த அரசும் நம்மள கண்டுக்கவே மாட்டேங்குது. ஆனா… நாம எதச் செஞ்சாலும் பெருசா செய்யனும்” வேதனையை வெளிப்படுத்தினார் பெரியவர்.
“அய்யா…நம்ம உசுரக் கொடுத்தாவது நம்ம நிலங்களை காப்பாத்தணும். எப்பவும் போல் இந்த வயல்வெளி பசுமையா இருக்கணும். இந்தப் பகுதியில தூக்கணாங்குருவி சத்தம் கேட்டுகிட்டே இருக்கணும். அந்த தூக்கணாங்குருவி சத்தம்ங்கிறது வெறும் சத்தம் இல்ல. நம் முன்னோர்களின் சத்தம்….” என்று ஆதங்கப்பட்டான் சோலைமணி.
கண்களை மூடி ஏதேதோ யோசனையில் மூழ்கினார் பெரியவர். என்ன செய்யலாம் என சட்டுனு முடிவெடுக்கமுடியாமல் குழப்பத்திற்கு ஆளானார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு….
தம்பிகளா… இப்ப என்ன செய்யலாம்னு இருக்கீங்க…? என்றார். இதைத்தான் அவர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
“அத நான் சொல்றேங்கய்யா…..” வேலுப்பிள்ளை பேசத் தொடங்கினான்.”
“குருவிக்காடு கிராமத்த இந்த உலகமே தெரிஞ்சுக்கணும். நம்முடைய போராட்டத்தால ஒவ்வொரு கிராமமும் பாதுகாக்கப்படனும். விவசாயத்தை குழி தோண்டி புதைக்கும் எந்த திட்டமும் இனி இந்த தேசத்துல உருவாக்கக் கூடாது. ஒவ்வொருத்தருடைய உசுரும் மானமும் மதிக்கப்படனும். சாகும்வரை தர்ணா போராட்டம். தர்ணா பண்றது முக்கியமல்ல. எங்கே பண்றோம் என்பதுதான் முக்கியம்….”
தம்பி இது சாத்தியமாகுமா…. குறுக்கிட்டார் பெரியவர்.
“ உன்னால் முடியாது என்றால் உலகத்தாலே முடியாது என்கிற சப்பானிய தாரக மந்திரம்தான் இனி நமக்கும். நம்மால் முடியாது என்றால் எவராலும் முடியாது..” என்று தீர்க்கமாக சொன்னான்.
வேலுப்பிள்ளையின் பேச்சை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார் பெரியவர். மேலும் பேசத் தொடங்கினான் வேலுப்பிள்ளை.
“ நாளை காலை நம்ம சோழமண்டலம் வழியா போற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஊருல உள்ள அத்தனை பேரும் பிரதம அமைச்சர் அலுவலகத்திற்கு போறோம். சாகும் வரை தர்ணாவை தொடர்வோம். துரத்தி அடிக்கப்பட்டாலும் கிடைத்த இடத்தில் போராடுவோம். துப்பாக்கியை தூக்கினால் துணிஞ்சு சாவோம். சோறு தண்ணி கிடைக்கலையேனு எந்தச் சுழ்நிலையிலும் நெனைக்கக் கூடாது. எத்தனையோ பேரோட பசியப் போக்கிருக்கோம். நாம பசியால செத்தாலும் நாட்டுக்கு ஒன்னும் நட்டம் வரப்போறது இல்ல. நாம போராட்டத்த வெதைக்கிறோம். கண்டிப்பா அது துளிர்விட்டு கிளையடிச்சு வளரும். நாம எடுத்துக்கிட்ட கொள்கைக்காக குருவிக்காடு அழிஞ்சுச்சு அப்படிங்கற வரலாறு நிலைக்கட்டும். அப்படி ஒரு அழிவு வந்தால் ஒவ்வொரு கிராமமும் வேடிக்கை பார்க்காது. புரட்சி வெடிக்கும். இந்தப் போராட்டத்தில் நான் முதல்ல செத்தாலும் என் உடம்ப வச்சாவது போராடுங்கள்..” என்றான் வேலுப்பிள்ளை. அவனின் பேச்சைக் கேட்டு கண்கலங்கினார் பெரியவர்.
தம்பிகளா… உங்கள நினைச்சா பெருமையா இருக்குய்யா. எல்லோரையும் இறுக அணைத்துக்கொண்டார் பெரியவர் முத்தையன்.
“ தம்பி நமக்கு எதிரா கன்னடத்து விவசாயிகளையும் தூண்டி விடுவாங்களே. மீத்தேன் தேவைன்னு பிரச்சாரம் பண்ணுவாங்களே..” குறுக்கிட்டார் பெரியவர்.
“அய்யா…அதிகாரத்துல உள்ளவன் ஆட்டம்போடத்தான் செய்வான். அந்த அதிகாரம் எத்தன நாளைக்கி செல்லுபடியாகும். நாம வயிறு பசிச்சு கத்துறோம். பாதிக்கப்பட்டு வேதனையில் கத்துறோம். நம்மள வச்சு அரசியல் பண்றாங்கன்னு கன்னடத்து விவசாய தோழர்களும் புரிஞ்சுக்கிற நேரம் சீக்கிரமா வரும். நம்முடைய இந்தப் போராட்டத்தால் சோழமண்டத்துல இருக்கிற ஊர் மட்டுமல்ல உணர்வுள்ள ஒவ்வொருவரும் நமக்காக குரல் கொடுப்பாங்க…..” பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் வேலுப்பிள்ளை.
பொழுது சாயத் தொடங்கியது. பறவைகள் மரங்களில் இசைக்கச்சேரி நடத்த ஆரம்பித்திருந்தன.
காதும் காதும் வைத்தது போல் குருவிக்காடு கிராமம் முழுவதும் போராட்டச் செய்தி பரவியது. சாமக்கோழி கூவியது. ஊர் மக்கள் அனைவரும் ரயில் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
மயான அமைதியை கொண்டிருந்தது குருவிக்காடு.
***********