பலதும் பத்தும்

சவூதி தலைமையில் நடைபெறும் உலக பொருளாதார மன்றம்

உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டம் இன்றும் (28) நாளையும் (29) சவூதி அரேபியா ரியாத் நகரில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் சர்வதேச ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் போன்ற பல முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட இருக்கின்றன.

இந்நிகழ்வானது சவூதி அரேபியா மற்றும் உலக பொருளாதார மன்றத்துக்கிடையே கைச்சாத்தான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விளைவாக நடைபெறும் ஒன்றாகும்.

இந்த முக்கிய கூட்டத்தில் சர்வதேச நிறுவனங்கள், அரசு சார் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்த சர்வதேச வல்லுநர்கள், கருத்துத் தெரிவிப்பவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தற்போதைய உலகளாவிய சவால்களைப் பற்றி இவ்வல்லுநர்கள் கலந்துரையாடி, உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை காணும் நோக்கோடு சர்வதேச கூட்டு முயற்சிகள் மேற்கொள்வதையும் ஊக்குவிக்கவுள்ளனர்.

சவூதி அரேபியா மற்றும் ரியாத் நகரானது உலகப் பொருளாதாரம் தொடர்பான விடயங்களின் சிந்தனை, பொதுக் கருத்துக்களின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார விடயங்களுக்கு தலைமை வகித்தல் போன்ற விடயங்களுக்கான உலகளாவிய தலைநகரமாக மாறியுள்ளது.

ரியாத் நகரில் நடைபெறும் இந்த உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டம் சர்வதேச ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதோடு, இந்த நிகழ்வானது உலகப் பொருளாதார மன்றம் மற்றும் உலகளாவிய பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உதவும் ஒரு புதிய தளமாக இருக்கும்.

சவூதி அரேபியாவால் நடாத்தப்படும் இந்த உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டம் மத்திய கிழக்கின் மிகப் பெரிய பொருளாதாரத் தலைநகரும், மூன்று கண்டங்களை இணைக்கக்கூடிய மைய நகரமுமான ரியாத் நகரில் நடைபெறவிருப்பதால் மேலும் பயனளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களுக்கு தற்போதுள்ள சவால்களைப் பற்றி கலந்துரையாடவும், அனைவருக்கும் நேர்மறையான உலகளாவிய தாக்கங்களை உருவாக்க புதுமையான தீர்வுகளை முன்மொழியவும் இந்த சந்திப்பு ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான் அவர்களது முயற்சியின் மூலம் இம்மன்றம் ரியாத் நகரில் நடைபெறுவதோடு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்துக்குப் பிறகு முதல் முறையாக உலகப் பொருளாதார மன்றமானது டாவோஸ் நகரிலிருந்து ரியாத் நகருக்கு இடமாற்றம் பெற்றிருக்கிறது.

2016 ஏப்ரல் 25 அன்று தொடங்கப்பட்ட சவூதியின் விஷன் 2030 திட்டத்தின் எட்டாவது ஆண்டு நிறைவில், இத்திட்டத்தின் மூலம் பல்வேறு நிலைகளில் சவூதி அடைந்துள்ள மாபெரும் வளர்ச்சி சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலான ஆண்டறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே இக்கூட்டம் நடைபெறுகிறது.

எனவே பொருளாதார ரீதியாக இதுவரை சவூதி அடைந்துள்ள வளர்ச்சிகள், சாதனைகளை எடுத்துக்காட்டி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான சந்தர்ப்பமாகவும் இம்மன்றம் அமையும்.

இச்சந்திப்பானது முக்கிய மூன்று விடயங்களில் கவனம் செலுத்துகிறது.

* செழுமையை அடைவதன் மூலமும் சமூகங்களை மேம்படுத்துவதன் மூலமும் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்தல், விரிவான வளர்ச்சியை ஆதரித்தல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் விரிவான வளர்ச்சியை ஆதரிக்க தேவையான திறன்களைக் கொண்ட வலுவான நிறுவனங்களை உருவாக்குதல், அடிப்படை பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அரசாங்கங்கள், தனியார் துறை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே உறுதியான தொடர்புகளை உருவாக்குதல். நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் பரவலை மேம்படுத்துதல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களின் தரத்தில் அவற்றின் தாக்கத்தை மேம்படுத்தல், மனித மேம்பாட்டை நோக்காக கொண்ட சமூகத்தை உருவாக்குதல் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்.

* உள்நாட்டிலும் பிராந்திய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு நிலைகளில் செழுமையான வளர்ச்சியை அடைவதற்காக முதலீடுகள் வழிநடத்தப்படுவதை உறுதி செய்தல், பொருளாதார மீட்சியைத் தூண்டுவதற்கும், நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வலையமைப்புகளை பல்வகைப்படுத்துதல், சர்வதேச சமூகங்களின் வளர்ச்சி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப எதிர்கால தொழிலாளர் சந்தைகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிலையான பொருளாதார மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் புகை, கார்பன் உமிழ்வினை குறைத்தல் மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான விரிவான மற்றும் நிலையான வழிகாட்டல்களை வழங்குதல்.

* பாதுகாப்பான மற்றும் நிலையான எதிர்காலத்தை அடைய உலகளாவிய வளங்களுக்கு இடையே சிறந்த சமநிலையை பேணல், எரிசக்தி பயன்பாட்டின் செயல்திறனை இரட்டிப்பாக்குதல் மற்றும் சர்வதேச பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்காக முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்தல், எரிசக்தி துறையில் ஒரு விரிவான நடைமுறை மாற்றத்தை நோக்கி முன்னேறல் மற்றும் பெற்றோலிய, எரிசக்தி துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கூட்டு முதலீடுகளை ஆதரித்தல்.

இச்சிறப்புக் கூட்டத்தோடு சேர்த்து சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழல் ரீதியான சவால்கள், சமூகத்தில் கலைகளின் பங்கு, நவீன காலத்தில் தொழில்முனைவு மற்றும் டிஜிட்டல் நாணயங்கள், செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் மனநலம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிந்தனையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உரையாடலை எளிதாக்கும் நோக்கத்துடன் ஒரு திறந்த மன்றத்தை நடத்துகிறது.

மாணவர்கள், தொழில்முனைவோர், இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட இது ஒரு சந்தர்ப்பமாக அமையும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.