அம்பியெனும் தமிழ்த்தும்பி அவ்வுலகம் சென்றது! …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியம் பற்றி எழுதவோ அல்லது பேசவோ தொடங்குவதாய் இருந்தால் அம்பி என்னும் அம்பிகைபாகரை உச்சரிக்காமல் தொடங்கவே இயலாது. அந்த அளவுக்கு அவுஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தில் தனக்கென ஒரு தனியான இடத்தினை அவர் ஏற்படுத்தி வைத்துள்ளர்.
அம்பி தாய்மொழிப் பற்று மிக்கவர்.சமூக அக்கறை கொண்டவர்.அடுத்த தலை முறை யினரான குழந்தைகளை மனமிருத்தினார். அதனால் அவரின் குழந்தைகள் பற்றிய சிந்தனை சிறப் பினைப் பெற்றது எனலாம்.
ஆரம்பத்தில் சிறுகதை எழுதியவர் பின்னர் கவிஞராகவே மலர்ந்தார். கவிஞராகவே இருக்கவே ஆசையும் கொண்டார். தமிழ்நாட்டில் குழந்தை இலக்கியம் என்றதும் எல்லோர் நினைவிலும் வந்து நிற்பவர் கவிமணி அவர்களே. அம்பியையும் ஈழத்துக் கவிமணி என்றுதான் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு குழந்தைகளிடம் பற்றும் பாசமும் கொண்டு அவர்களுக்காக கவிதை இலக்கியத்தை வளர் த்து நின்றார்.
கணித ஆசிரியராய் இருந்தவரின் எண்ணத்தில் குழந்தைகள் இலக்கியம் கருக்கொண்டது என்றால் அந்த அளவுக்கு அம்பியின் ஈடுபாடு குழந்தைகள் பால் மிக்கிருந்தது என்றுதான் கருத முடி கிறது.
குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதற்கு கடின உழைப்பு. பொறுமை, சொற்களஞ்சிய அறிவு மிகவும் முக்கியம் ஆகும். குழந்தைகளின் கவிதைகள் அவர்களின் நாட்டப் பொருட்களை மையமாகக் கொண்டிருக்கவும் வேண்டும்.வீண் சொற்களையோ, வர்ணனைகளையோ, குழந்தைப் பாடல்கள் கொண்டிருப்பது கூடாது.இவற்றையெல்லாம் மனமிருத்தியே கவிஞர் அம்பி அவர்கள் குழந்தை இலக்கி யத்தைப் படைத்தார்.
இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் குழந்தைகளுக்கான கவிதைகளையும் தந்திருக்கிறார். அவுஸ்திரேலிய தமிழ்க்குழந்தைகள் தமிழில் பேச வேண்டு. பேசிப் பேசி மகிழ வேண் டும் என்பதே அவரின் பேரவாக இருந்தது. இந்த எண்ணத்தை மனமிருத்தியே அவுஸ்திரேலிய குழந்தை இலக்கியத்தைக் கட்டி எழுப்புவதில் அம்பி அவர்கள் பெரும்பங்கு வகித்தார் என்பதை இங்கு வாழும் தமிழர்கள் அனைவருமே ஒரு மனதாக ஏறுக்கொள்ளுவார்கள்.
” கொஞ்சும் தமிழ் ” , ” பாலர் பைந்தமிழ் ” என்னும் கவிதை நூல்களை குழந்தை இலக்கியமாய் அளித்திருக்கிறார். இவரின் அணுகு முறை அவுஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தியதுதான் என் பதே இங்கு முக்கியமாகும்.சூழலுக்கு ஒவ்வாத விடயங்களை யார் படைத்தாலும் அஃது பொருத்தம் அற்றதாகவே ஆகிவிடும். அப்படிப் பாடிஅமைப்பதை விட படைக்காமலே இருந்திடலாம்.
நீண்ட கால ஆசிரியப்பணி. பல நாடுகளில் ஆசிரியப்பணி. புலம் பெயர் நாடுகளில் உள்ள பிள்ளைகளின் உள்ளக் கிடக்கை இவற்றை எல்லாம் மிகவும் உன்னிப்பாகாகக் கவனத்தில் கொண்ட காரணத்தினால்த்தான் அம்பி அவர்களின் குழந்தை இலக்கியம் அவுஸ்திரேயாவில் முக்கியத்துவம் மிக்கதாக அமைகின்றது எனலாம்.
” நீங்கள் இனிய தமிழ் வேச வேண்டு. பேசிப் பழக வேண்டும். இனிமையாக பேசி மகிழவேண்டும். நீங்கள் இனிய பாடல்கள் பாட வேண்டு.பாடப் பழக வேண்டும். இனிமையாகப் பாடி மகிழ வேண்டு. நீங்கள் பாடல்கள் பாடி ஆட வேண்டும்.பாடி ஆடி மகிழ வேண்டும். பெற்றோரையும் மற்றோரையும் மகிழ்வித்தல் வேண்டும். நீங்கள் பாடி ஆடும்போது அபிநயம் செய்து மகிழ வேண்டும்.அபிநயம் செய் யப் பழக வேண்டும்.அபிநயத்தால் எல்லோரையும் மகிழ்வித்தல் வேண்டும்.நீங்கள் பாடி ஆடி அபிநயஞ் செய்து மகிழும்போது அறிந்த சொற்களின் பொருளை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். புதிய சொற்களையும் அறிதல் வேண்டும். புதிய சொற்களுடன் அறிவு வளர்ச்சியும் பெறுதல் வேண்டும்.” என்று – ” கொஞ்சும் தமிழ் பாடல்கள் ” நூலில் அம்பி அவர்கள் தனது மனத்தினை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அம்பியின் பாடல்கள் தனித்துவம் மிக்கன.குழந்தைகளின் நாவில் உச்சரிக்கக் கூடிய எளிய தமிழ், அவர்களின் சிந்தையில் பதியக் கூடிய ஓசை நயத்துடனான சொற்கோலங்கள். இதனால் குழந்தைகள் அந்நியப்பட்டு விடாமல் பாடலுடன் நெருங்கி ஒட்டுற வாடுகின்றனர். இதுவேதான் ” அம்பி ” என்னும் குழந்தை இலக்கியப் படைப்பாளருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்துள்ள முக்கியத்துவம் எனலாம்.
வினா விடை முறையிலே பல பாடல்களை அமைத்திருக்கிறார். அங்கு குழந்தைகளின் உளவியலை அவர் நன்கு அறிந்து எழுதியிருக்கிறார் என்பதையே காணமுடிகிறது.அவுஸ்திரேலிய குழந்தைகளை மனமிருத்தி
” அம்பி மழலை ” என்னும் குழந்தை இலக்கிய நூலை ஆக்கியிருக்கிறார்.கங்காரு அவுஸ்திரேலிய நாட்டின் அடையாளம். அதனை சிறியவர் முதல் பெரியவர்வரை விரும்பி இரசிப்பார்கள்.இந்த நாட்டில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு விளங்காத விலங்குகளை அறிமுகப்படுத்தவோ அல்லது அவை பற்றி சொல்லுவதோ பொருத்தம் அற்றது என்பதை அம்பி அவர்கள் தெரிந்து காரணத்தால் ” ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி அருமையான சின்னக்குட்டி ” என்று பாடாமல்
” முன் இரண்டு காலைத் தூக்கி
முன்னே பாய்ந்து செல்குவேன்
பின் இரண்டு காலில் துள்ளி
பாய்ந்து பாய்ந்து செல்லுவேன்
சின்னக்குட்டியை வயிற்று பையில்
செருகிக் கொண்டு செல்லுவேன்
என்னைப் போன்ற அன்னை யாரோ
என்று கேட்டுச் செல்லுவேன்
என்னைத் தெரியுமா – என்
பெயரைத் தெரியுமா ?
என்று கங்காரு பற்றி குழந்தைகளுக்கு காட்டுகிறார் அம்பி.
“கொஞ்சும் தமிழ்” அழகிய வண்ணப்படங்களுடன் அவுஸ்திரேலிய குழந்தை இலக்கியமாய் வந்திருக் கிறது. அத்துடன் “பாலர் பைந்தமிழ்” படைப்பும் சேர்ந்துவிட்டது.
” தமிழில் சிறுவர் இலக்கியம் இல்லாமை பெருங்குறையாகும். சிறுவர் இலக்கியத்தில் நாம் பின்தங்கி விட்டோம். அத்துறையில் “அம்பி யுகம் ” ஆரம்பமாகி விட்டது என்று நாம் பெருமையும் பூரிப்பும் அடைய வேண்டும்.” என ஈழத்து அறிஞர் அஸீஸ் அவர்கள் குறிப்பிடுகிறார்.