மனிதாபிமான உதவி விநியோகத்திற்காக படையினரை காசாவிற்கு அனுப்பலாமா? ஆராய்கின்றது பிரிட்டன்
மனிதாபிமான உதவிகளை வழங்கும் வாகனத்தொடரணிகளின் பாதுகாப்பிற்காக காசாவிற்கு தனது படையினரை அனுப்புவது குறித்து பிரிட்டன் ஆராய்ந்து வருகின்றது என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உருவாக்கிவரும் பாரிய தற்காலிக இறங்குதுறை ஊடாக செல்லவுள்ள மனிதாபிமான உதவிகளிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தனது படையினரை பயன்படுத்துவது குறித்து பிரிட்டன் ஆராய்ந்து வருகின்றது.
இந்த இறங்குதுறையை அமைக்கும் பணிகள் அடுத்த மாதமளவில் கிழக்கு மத்தியதரைகடலில் பூர்த்தியாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ள அமெரிக்க படையினர் கடலில் இருந்து தரைப்பகுதியில்காலடி எடுத்துவைக்க மாட்டார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வேறு ஒருநாடு மிகவும் சவாலான பகுதிகளில் சர்ச்சைக்குரிய அரசியல் நடவடிக்கையான மனிதாபிமான உதவி விநியோகத்தை முன்னெடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே இது குறித்து பிரிட்டனின் உள்துறை அமைச்சு ஆராய்கின்றது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் இந்த விடயத்தில் சவால்கள் காரணமாக பிரிட்டன் இந்த திட்டத்தை கைவிடலாம் எனவும்தெரிவித்துள்ளன.