இன்னும் 9 ஆண்டுகள் கூட சிறைத்தண்டனை அனுபவிக்க தயார்.. ஆனால்..? – இம்ரான்கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 4 வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 90-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் வெற்றிப் பெற்றனர்.
இந்த சூழலில் இம்ரான்கானின் சிறை தண்டனையை குறைக்க, ஒரு சமரச திட்டத்துக்கு ஒப்புக்கொள்ளும்படி அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் 28-வது நிறுவன தினத்தை முன்னிட்டு இம்ரான்கான் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:-
நாட்டின் மீது மோசமான சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. இது பொருளாதாரம், ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் அழிவுக்கு அடிப்படையாக மாறியது.நாட்டின் அழிவை நோக்கிய இந்த வீழ்ச்சியை தடுக்க ஒவ்வொரு தனிமனிதனும் தங்களின் பங்களிப்பை ஆற்ற வேண்டும். உண்மையான சுதந்திரத்துக்கு தேவையான எந்த தியாகத்தையும் நான் செய்வேன். ஆனால் எனது அல்லது எனது தேசத்தின் சுதந்திரத்தில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன். போலி வழக்குகள் காரணமாக கடந்த 9 மாதங்களாக நான் சிறையில் உள்ளேன். இன்னும் 9 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் நான் சிறையில் இருப்பேன். ஆனால் என் தேசத்தை அடிமைப்படுத்தியவர்களுடன் நான் ஒருபோதும் சமரச ஒப்பந்தம் செய்ய மாட்டேன்.
இவ்வாறு இம்ரான்கான் கூறியுள்ளார்.