“முகராசி” …. சிறுகதை – 64 …. அண்டனூர் சுரா
பனை மரத்திற்கு வெள்ளை வேட்டிக்கட்டி கையெட்டும் உயரத்தில் கண், காது, மூக்கு, வாய் வரைந்து அந்த உருவத்திற்கு குணா என்று பெயர்சூட்டலாம், அப்படித்தான் இருப்பான் குணா. முற்றிக் காய்ந்த மட்டை உரிக்காத தேங்காய்ப் போன்று சுருக்கங்களாக அவனது முகம். இமைகளுக்குள் அழுந்திய கண்கள். நிறைவேறா ஆசைகளின் அவலம் பொழியும் பார்வை. மேனி தார்ப் பூசியதைப் போன்று கறுத்தும் உதடுகள் வெளிர்த்தும் சுண்ணாம்பு தடவியதைப் போன்றிருக்கும். பஞ்சடித்தது போன்று கலைந்து கிடக்கும் முடி. உடம்பில் சில்லுச் சில்லான தேமல். மரப்பலகையைப் போல சொர சொரப்பான உள்ளங்கைகள்.
அவன் வேகு, வேகுவென்று நடக்கிறவன். அவனது நடை பார்க்க வேண்டாவெறுப்போடு நடப்பதைப் போன்றிருக்கும். எடுத்துவைக்கிற ஒவ்வொரு நடைக்கும் அவனது மிதியடிகள் ‘கிரிச், படக், கிரிச், படக்’ என்று துள்ளலோசை கொடுக்கும். கால்களை எறிவதைப் போலவே நடப்பான். நடையும் நடைக்கேற்ப அவனது கை அசைவுகளும் பார்க்க வேடிக்கையாகத் தெரியும்.
அவனது வயதை முப்பத்தைந்தாக மதிக்கலாம். அந்த வயதைக் காட்டிக்கொடுக்கும் விதமாக மீசையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெள்ளை முடிகள் நட்டுண்டு நிற்கும். புளிச்சைத் தண்டு நாறைக் கொசக்கி காதோரம் வைத்ததைப் போன்ற கிருதா. வெண்நரம்புகளாகத் தலையெங்கும் வெள்ளை முடிகள். கண்ணாடியில் அவனது மேனியை அவன் பார்க்கையில் இதெல்லாம் தெரியவரும். அவனது முகத்தை அவன் கண்ணாடியில் பார்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அவனை வைத்து நடந்தேறிய ஒரு கேலி சம்பவம் அவனைக் கண்ணாடியிலிருந்து வெகுதூரத்திற்கு விலக்கி விட்டது.
எட்டு வயது ஒரு பள்ளிக் குழந்தை தாயிடம் கேட்டது. “அம்மா சிம்பன்சினா என்னதும்மா?”
தாய் சொன்னாள், “அது ஒரு வகை குரங்கு”
“அது எப்படி இருக்கும்?“
தாய் சுற்றும்முற்றும் பார்த்தாள். தூரத்தில் குணா வந்துகொண்டிருந்தான். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சொன்னாள், “நம்ம குணா மாதிரி இருக்கும்.”
அவள் இதைச் சத்தமாக சொன்னாள். அதன்பிறகு தாயும் பிள்ளையும் வயிறு குலுங்கிய சிரித்த சிரிப்பு, அதில் தொனித்திருந்த கேலியும் கிண்டலும் குணாவைச் சம்மட்டிக்கொண்டு அடித்துவிட்டது. தூக்கத்தில் அழும் குழந்தையின் தேம்பலைப் போல அவனது தொண்டைக்குழி இடறியது. நான் சிம்பன்சி போலவா இருக்கேன்? என்னைப் போலதான் சிம்பன்சி இருக்குமா? அவனுக்குள் எதிரொலித்த கேள்விகள், விடை தேட அளாவிய துடிப்புகள்,.. கண்கள் கசங்காமல் கனிந்தன.
ஒரே ஓட்டமாக ஓடி அவனது முகத்தைக் கண்ணாடியில் பார்த்தான். எல்லோரையும் போலத்தான் அவனுடைய முகம் இருந்தது. இரண்டு உதடுகளும் தடித்து வெளியே தள்ளியிருந்தன. பெரிய மூக்கு. காதின் மடல்கள் தலையோடு ஒட்டியிருந்தன. அவனது தலையைக் கண்ணாடியில் முட்டிக்கொண்டான். முகம் கண்ணாடிச் சில்லுகளாக உடைந்து சிதறியது. அதன்பிறகு அவன் கண்ணாடி பார்ப்பதில்லை. அவனது முடிகளைக் கத்தரிக்க, மீசையை மழிக்க நண்பர்களின் உதவியை நாடினான்.
அவனுக்கு இருபத்தைந்து வயது நெருங்குகையில் அவனது பெண் பார்க்கும் படலம் தொடங்கியது. அதிலிருந்தே அவன் அவனுக்கான துணையைத் தேடத் தொடங்கினான். பெண்
பார்க்க பெண் வீட்டில் உட்கார்ந்திருக்கும்பொழுது அவனுடைய நெற்றியில் வியர்வை அரும்பும். கைக்குட்டையை நெற்றிக்குக் கொண்டுச்சென்று வியர்வைத் துளிகளை ஒற்றி எடுப்பான். கைக்குட்டையைக்கொண்டு விசிறிக்கொள்வான். முகத்தில் வெட்கம் வழியும். உதடுகள் காய்ந்து சுருக்கம் கொள்ளும். பார்க்கவே அசாதரணமாகத் தெரிவான். இப்போதெல்லாம் அவனுடைய முகத்தில் அத்தகைய மாற்றங்கள் நிகழ்வதில்லை.
ஒரு பெண் காலடிகளை அளந்து அன்னநடை எடுத்துவைத்து அவன் முன்பு வந்து நின்றாள். அவளை ஏறிட்டுப் பார்த்தான் குணா. அவளது முகத்தில் எண்ணமுடியாத தழும்புகள் இருந்தன. மாதுளம் பழம் அளவிற்கான மூக்கு. ஏறிய நெற்றி. சரிபாதி முடிகள் செம்பட்டைத் தட்டியிருந்தன.
அந்தப் பெண்ணைப் பார்த்து அவன் உதட்டைப் பிதுங்கினான். அந்தப் பெண் குணாவிடம் ஒரு சொம்பு தண்ணீர்க் கொடுத்து வெட்கத்தில் தலையைக் கீழே தொங்கவிட்டவளாய் நின்றாள். வாங்கிய தண்ணீரைக் குடிக்க மனமில்லாமல் வைத்துக்கொண்டிருந்தான் குணா. அவள் விரல்களில் நெட்டிப் பறித்து நகக்கணுவிலுள்ள அழுக்கை எடுக்க நின்றாள். அவளைப் பார்க்க அவனுக்குள் மின்னல் வெட்டியது. மூடுபனியைப் போன்ற உருவமற்ற ஒரு மிரட்டல் அவனை உருட்டியது. உட்கார்ந்திருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுக்குள் கனத்தது.
இதற்கும் முன்பு அவன் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான். இந்தப் பெண் அவனுக்குப் புதுஅனுபவத்தைக் கொடுத்தாள். அவள் பார்க்க பாவமாகவும் அதேநேரம் விகற்பமாகவும் தெரிந்தாள். அவளைக் கட்டிக்கொண்டு வாழ முடியுமா? இவளைக் கட்டிக்கொண்டால் தனக்குப் பிறக்கின்ற குழந்தை என்னைப் போலவும் அவளைப் போலவும் பிறக்குமே! அப்படியாகப் பிறந்தால் என்னாகுமென்று நினைக்கையில் அவனுக்குப் படபடப்பு வந்தது. வேண்டாம், நான் படும் அவமானம் என்னோடு போகட்டும். கேலியும் கிண்டலும் என்னைப் போல என் குழந்தையையும் துரத்தக் கூடாதென மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
மறுவாரம் அவனது சித்தி சகுந்தலா ஒரு செய்தியைக் கொண்டுவந்து அவனுடைய காதில் கொட்டினாள். “குணா, போன வாரம் நீ பார்த்த பொண்ணுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம்டா.”
அதைக் கேட்க அவனுக்கு வியப்பாக இருந்தது. இதற்கு என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. நல்லா இருக்கட்டும் என்கிற தொனிப்பில் புருவங்களை ஏற்றி இறக்கினான்.
“குணா எங்க ஊர்ல ஒரு பொண்ணிருக்கா. நீ வந்து பாரேன்.”
குணா முகத்தில் மஞ்சள் வெயிலடித்தது. மனஆழி கொண்டாடியது. சித்தி கொண்டுவரும் வரன் நல்ல வரனாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் அவனுக்குள் வேர் படர்ந்தது. மனஅலை உயரத் தாவியது. நீண்டகால ஏக்கத்திற்குக் கை, கால்கள் முளைத்து அவனுக்குள் ‘தங்,தங்’கென்று குதித்தது.
“எப்ப போகலாம் சித்தி?” ஆவல் பொங்கக் கேட்டான்.
“இப்பவே போவோம்.”
“இப்பவேவா!” மனதிற்குள் குதித்துக் கொண்டான்.
“இன்னைக்கு நல்ல நாள்தானே. பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதில்லையா?“
காதிற்குள் நாக்கென்று இருந்திருந்தால் அந்தச் செய்தி அவனுக்குத் தேன் போல இனித்திருக்கும். அவனுக்குள் மனச்சிறகுகள் அடித்துகொண்டன. சட்டென எழுந்தவன் தலைமுடியை உச்சி வகிடெடுத்து ஒதுக்கினான். தேய்த்து மடித்து வைத்திருந்த சட்டையை உடுத்திக்கொண்டு கேட்டான். “பொண்ணுக்கு எத்தனை வயசிருக்கும் சித்தி?”
“முப்பது இருக்கும்.”
சற்றுமுன் வரை அவனுக்கிருந்த உற்சாகத்தில் கல் விழுந்தது. பரவசப் பெருக்கு சூன்யம் கண்டது. மாட்டிக்கொண்டிருந்த சட்டையை உருவி கொடிக்கயிற்றில் போட்டவன் ஒடிந்து குந்தியவன், “நான் வரல சித்தி” என்றான்.
“முத்திப்போன வயசுனு நினைக்கிறியா?”
“பின்னே இல்லையா?“
“அட என்னப்பா நீ. உன்னையவா அவளைக் கட்டிக்கிறச் சொல்றேன். அவளை நீ பார்த்தால் உன் முகராசியில அவளுக்குக் கல்யாணம் ஆகும்ல” என்றாள். அவள் சொன்ன தொனிப்பும் அதிலிருந்த தெளிவும் குணாவை அரிவாள்மனைகொண்டு அறிவதைப் போலிருந்தது. அவனது தலை பம்பரம் போல சுற்றியது.
“நீயுமா சித்தி? உனக்கும் நான் உதைச்சு விளையாடும் பந்தாகிட்டேன்ல” உதடுகள் வறண்டு கமறியது. அவனது முகத்துத் தசை வேதனையால் துடித்தது. கண்ணீர்ப் பெருக்கெடுத்து வழிந்தது. அதன்பிறகு அவனுக்குச் சித்தியைப் பார்க்க பிடிக்கவில்லை.
சகுந்தலா சித்தியை அவனது மனதில் மிக உயரத்தில் வைத்திருக்கிறான். அவளை அவன் அம்மாவின் தங்கையாக மட்டுமா பார்க்கிறான். அம்மாவின் மறுவடிவமாக பார்க்கிறான். அவனுடைய அம்மா புற்றுநோயால் பீடிக்கப்பட்டு அவனைப் பாதியில் விட்டுச் செல்கையில் அவனுக்கு ஆறுதலாக இருந்தது அவள்தான். அதிலிருந்தே அவன் சித்தி மீது கரிசனத்தையும் பாசத்தையும் காட்டி வருகிறவன்.
“குணா, உன் அம்மா சாகலைடா. சாகலை. இதோ பார் நான் இருக்கேன்” என அவனது தலையை மடியில் சாய்த்துகொண்டு அவனைத் தேற்றியவள் சகுந்தலா. அத்தகையவளால் எப்படி என்னை வைத்து கேலி செய்யமுடிகிறது? அவனுடைய மனம் உலையாக கொதித்தது. கோபமும் விரக்தியும் கலந்த உணர்வு அவனது முகத்தில் ஓங்கி அறைந்தது. மனமுடைந்து நொறுங்கி திண்ணையில் ஒடுங்கினான்.
“குணா, என்ன சொல்லிட்டேனு இப்படிக் கலங்குறே? பொண்ண வந்துப் பாரு. பிடிச்சிருந்தா கட்டிக்க. இல்லைன்னா பிடிக்கலைனு சொல்லிடு”
சித்தி சொல்வது கொஞ்சம் பிடித்திருந்தது.
“ எத்தனை நாளைக்குத்தான் பொண்ணுக உன்னைப் பிடிக்கலைனு சொல்றது. நீ ஒரு நாளைக்குப் பொண்ணைப் பார்த்து பிடிக்கலைனு சொல்லேன்…” என்றவள் வெற்றிலை பையைத் துழாவி சுண்ணாம்புப் புட்டியைத் திறந்து கட்டைவிரல் நகத்தால் கொஞ்சம் போல எடுத்து உருட்டி வாயிற்குள் போட்டுக்கொண்டு மென்றவளாய் குணாவைப் பார்த்தாள்.
குணா குதூகலமாய் எழுந்தான். பேன் பொறுக்கும் கோழிகளின் சிறகு பரிக்கும் பரபரப்பு அவனைத் தொற்றிக்கொண்டது. பவுடரை உள்ளங்கையில் கொட்டி அதை வேகமாக தேய்த்து முகத்தில் அப்பிக்கொண்டான். வேட்டியையெடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு சித்தி முன்பு புதுமாப்பிள்ளையாக நின்றான். அவனது மனக்கிடங்கு ஆனந்தம் கண்டது. முதன்முறையாக ஒரு பெண்ணைப் பார்த்துப் பிடிக்கவில்லையென்று சொல்லப்போகிற மகிழ்ச்சியில் துள்ளினான்.
குணா தனக்கென்று தேடாத வரனில்லை. போகாத கோயிலில்லை. பார்க்காத ஜோதிடரில்லை. “தம்பி, உன்னோட ஜாதகத்துக்கு நல்ல பொண்ணாக் கிடைப்பாள். பொறுத்திருங்க.” ஒரு ஜோதிடர் இப்படியாகச் சொல்லியிருந்தார். இந்த வாசகத்தைத் தன் தலைமேல் கட்டிக்கொண்டு நம்பிக்கையுடன் இருந்தான் குணா. இதை அவன் மனதிற்குள் உருட்டுகையில் அவனது உடம்பு சிலிர்த்தது. உள்ளங்காலிலிருந்து உச்சந்தலையை நோக்கி ஆனந்தம் பெருக்கெடுத்தது. அந்தக் கொண்டாட்டம் ஐந்து நிமிடங்கள்தான். அதற்குள்ளாக பழைய ஞாபகங்கள் அவனுடைய முகத்தில் ஓங்கி அறைந்தது. ஏமாற்ற நிகழ்வுகள் அவனைச் சூன்யம் கொண்டது.
சகுந்தலா சித்தியைப் பைக்கில் ஏற்றிக்கொண்டு பைக்கை விரட்டாமல் மேடு பள்ளத்தில் அத்தனை பதவுசாக ஏற்றி இறக்கி மெதுவாகச் சென்றான்.
“ குணா, மேலப்பட்டி ரெங்கராஜன் மவளுக்கு மாப்பிளை அமையவே இல்ல. நீ வந்து பார்த்த. மறுவாரமே கல்யாணம் நடந்துமுடிஞ்சுச்சு. சொக்கம்பட்டி நிர்மலாவுக்கு செவ்வாய்தோசம். தோசமுள்ள மாப்பிளைதான் வேணுமென எத்தனையோ வருசம் காத்திருந்தாங்க. நீ போய்ப் பார்த்த மறுநாள் அவள் எவனையோ இழுத்துக்கொண்டு ஓடிட்டாள். அவளுக்கு இப்ப ஒரு பெண் கொழந்த பொறந்திருக்கு. கொல்லம்பட்டி சாந்தி, ராசாப்பட்டி வெண்ணிலா, வன்னியம்பட்டி மாரியம்மா, இடையப்பட்டி சாதனா எல்லாப் பெண்களுக்கும் நீ பார்த்த பிறகுதான்டா அவளுவளுக்குக் கல்யாணம் நடந்துச்சு.”
சித்தி சொல்லிவந்த செய்திகள் அவனுக்குக் கோபத்தை மூட்டின.
“ சித்தி அதை விட்டுட்டு வேற சேதி இருந்தா சொல்லேன் ” .
” வேறு என்னத்த சொல்லச் சொல்ற?” என்றவள் வண்டி சற்று ஆடும்படியாக உடம்பை அசைத்து வசதியாக உட்கார்ந்தாள்.
குணாவின் நினைவுகள் பல்வேறு அனுபவங்களை அசைபோட்டது. நான் இதுவரைக்கும் எந்தப் பெண்ணையும் பார்த்து பிடிக்கலைனு சொன்னதில்லை. இன்றைக்கு நான் ஒரு பெண்ணைப் பார்த்து பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா? ஒருவேளை நான் அப்படியாகச் சொல்வதற்கும் முன்பு அவள் சொல்லிவிட்டால்? அப்படியாகச் சொல்லும் செய்தி என் காதினை வந்தடைகையில் நான் ஒடிந்த கீரைத் தண்டாட்டம் ஆகிவிடமாட்டேனா? இன்னொரு முறை இதைத் தாங்கும் சக்தி எனக்கு இருக்கிறதா? மனது அவனுக்குள் உதைத்தது. வண்டியைச் சட்டென நிறுத்தினான்.
“குணா, ஏன் வண்டிய நிறுத்திட்டே?“
“வேண்டாம் சித்தி. வீட்டுக்குத் திரும்பிப் போயிடலாம் ”
“மனசை ஏன்டா இப்படி அலைபாய விடுறே?”
சொற்களற்ற அவன் மனது அதற்கு இடம் கொடுக்கவில்லை. வண்டியை ஒரு பக்கமாக சாய்த்து ஓரிடத்தில் நிறுத்தினான். கண்களை மூடி அலைபாயும் மனதை அமைதிப்படுத்தினான்.
சகுந்தலா சித்தியைப் பார்க்க அவனுக்குக் கோபம் வந்தது. பின்னே என்னவாம்! அவளுக்கும் ஒரு மகள் இருக்கிறாள். பூமிக்கு நிலவு போல குடும்பத்திற்கு ஒற்றைப் பிள்ளை. அவளுடைய அழகிற்கும் அறிவுக்கும் அவள் எந்தக் குடும்பத்திலேயோ பிறக்க வேண்டியவள். அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிவைக்க வேண்டுமென்று சித்திக்கு ஏன் தோன்றவில்லை. கழுத்தென்று இருந்தால் நகை வேணும். பெண்ணென்று இருந்தால் துணை வேணுமென்று சித்திக்கு ஏன் தெரியாமல் போய்விட்டது. சித்தி அவள் பெற்ற மகளை விடுத்து ஊர்ப் பெண்களுக்கு இவள் பெண் பார்த்து திரிகிறாளே…
சித்தி மகள் சுகந்தி குணா உயரத்தில் பாதி இருப்பாள். பெயருக்கேற்ப குள்ளம். அவன் மீது அவள் காட்டும் பாசத்தை அளக்க முடியாது. அவன் வீட்டிற்குச் சென்றால் “அண்ணா…” என்று வாஞ்சையோடு விளிப்பாள். அந்த விளிப்பில் பாசமும் பந்தமும் பொங்கிய பால் போல வழியும். மற்றவர்களைக் காட்டிலும் அவன் மீது அவள் காட்டும் பாசம் அதிகம். அவனைப் பார்க்கையில் அவளுக்குள் பரவசம் பெருகும். “எனக்கு என்னண்ணா வாங்கிக்கிட்டு வந்திருக்கே?” என்று உரிமையோடு கேட்பாள். வாங்கிப்போன பண்டத்தில் பாதியை அவனுக்குக் கொடுத்துவிட்டு மீதியை அவளும் சித்தியும் எடுத்துக்கொள்வார்கள்.
அவள் அவனிடம் நலம் விசாரித்து முடிக்க ஒரு நாழிகையாகிவிடும். வீட்டிலுள்ள ஆடு, மாடு, கோழி, குருவிகளையும்கூட விசாரிப்பாள். பக்கத்து வீட்டு வீராயி பாட்டி நல்லா
இருக்காளா? அவள் பேத்தி மீனா இப்ப என்ன படிக்கிறாள்? சௌந்தர்யாவுக்கு வளைக்காப்பு போட்டாச்சா? கேள்விகளின் பட்டியல் அனுமன் வாலாட்டம் நீளும்.
அவளுக்கு வயது இருபத்தொன்பதாகிவிட்டது. பி.ஏ வரலாறு முடித்திருக்கிறாள். பக்கத்திலிருக்கிற ஒரு தனியார் பள்ளிக்கூடத்திற்கு டீச்சராக போய் வருகிறாள். அவளிடம் வம்பு பேசுவது அவனுக்கு அலாதியாக இருக்கும்.
“சுகந்தி, உனக்கு மாப்பிளை பார்க்கட்டுமா…?” என்பான். அந்தக் கேள்வியில் அவள் பரிதவிப்பாள். “எனக்கா! அதற்குளையுமா? வேண்டாமண்ணா” என்பாள்.
“அண்ணா முதல்ல நீ கல்யாணம் பண்ணிக்கோ. பிறகு நீயும் அண்ணியுமா சேர்ந்து எனக்கொரு மாப்பிளை பாருங்க” என்பாள்.
“நீ வேணுமெனா பாரு. எனக்கு முன்னாடி உனக்குத்தான் கல்யாணமாகும்” என்பான் அவன். பதிலுக்கு அவள், “பார்த்திடலாம், பார்த்திடலாம்” என்பாள். அப்படிச் சொல்கையில் அவனுடைய உதடுகளை விட கண்கள் அதிகம் பேசும்.
குணா, மணி இங்கேயே பதினொன்னாச்சு. எப்ப நாம பொண்ணைப் பார்த்து திரும்புறது?”
“வேணாம் சித்தி. வீட்டுக்குப் போயிடலாம். ”
“அப்ப பொண்ணு?“
“அந்தப் பொண்ணைப்போய் நாம பார்த்து அவளைப் பிடிக்கலைனு சொல்லி, அவளோட மனசை நாம ஏன் கஷ்டப்படுத்தணும்?”
“குணா, பேசுறது நீதானா?”
“ஆமாம் சித்தி. உன்னை நான் வீட்ல விட்டுட்டு அப்படியே சுகந்தியைப் பார்த்திட்டு வீட்டுக்குத் திரும்புறேன்” என்றான் குணா.
கொஞ்சநேரம் ஆடாமல் அசையாமல் பொம்மையைப் போல நின்றுகொண்டிருந்த சகுந்தலா வேறு வழியில்லாமல் ஆமோதித்தாள். அதன்பிறகு வாகனம் காற்றைக் கிழித்துக்கொண்டு சகுந்தலா வீட்டை நோக்கி விரைந்தது.
குணா சுகந்தியைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்த மூன்றாம் நாள் அவனுடைய அலைபேசி சிணுங்கியது. தொடர்பிலிருந்தாள் சித்தி சகுந்தலா. வழக்கமான நலம் விசாரிப்பில்லாமல் அவளது பேச்சு அவனை வறுத்துக் கொட்டியது. அவளது வசை சொற்கள் அவனை மென்றுத் திப்பின.
“சித்தி சொன்னது உண்மைதானா? சுகந்தியைப் பார்த்ததால்தான் இது நடந்ததா?” விசாரணையில் இறங்கினான் குணா. சித்தி சொன்னது உண்மையாக இருந்தது. சித்தி மகள் சுகந்தி உள்ளூர் பையனிடம் ஓடிப்போய் கல்யாணம் செய்திருந்தாள். அதை நினைத்து அவனையே அவன் நொந்துகொண்டான்.
இது நடந்த மூன்றாவது மாதத்தில் குணா எல்லோருக்கும் ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தான். அவனது திருமணம் விமரிசையாக நடந்துமுடிந்தது. அவன் ஏங்கியபடியே அவனுக்கொரு அழகான துணைவி கிடைத்திருந்தாள். இந்த அதிசயம் எப்படி நடந்ததென எல்லோரும் மண்டையைக் குடைந்துகொண்டார்கள்.
ஒரு நாள் அந்த ரகசியத்தைக் குணாவே அவிழ்த்தான். “என்னைப் பார்க்கும் யாருக்கும் கல்யாணம் நடந்துவிடுவதாகச் சொல்கிறார்களே, அதைச் சோதிக்க என்னுடைய முகத்தை ஒரு நாள் நான் கண்ணாடியில் பார்த்தேன்” என்றான்.
மொழி நடை அருமை . அந்தத் தாயை வைத்துப் பார்க்கும்போது , ” காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ” என்ற பழமொழி கேள்விக் குறியாகிவிட்டது . பொன்னு கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதை , பொண்ணு கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது புதுமை . கதையின் முடிச்சைக் கடைசியில் அவிழ்த்த விதத்தை வைத்துப் பார்க்கும் போது , கதைக்குக் கண்ணாடி என்றும் பெயர் வைத்திருக்கலாம் போல உள்ளது .
சிவா , இராஜை .
முகராசி – கதை அற்புதம்.
யாரும் தொடாத சப்ஜெக்ட்
கழிவிரக்கம் கொள்ள வேண்டிய – குணா
எல்லோருக்கும் எடும் பார்கைப் பிள்ளையாக
தன் மீது தனக்கு வெறுப்பு ஏற்படுகிற ஒரு தாழ்வுமனப்பான்மை
குணாவுக்கு இருப்பதைப்போல எல்லோருக்குள்ளும் ஒரு-இன்ஃபியாரிட்டி காம்ப் எக்ஸ்-இருந்து கொண்டே இருக்கிறது
முகராசி – கைராசி என்று நம் கிராமக் களிடை யே உலகம்
வழக்குச் சொல்லுக்குள்
இத்தனை பொருள் பொதிந்திருப்பதை
முகராசி – கதையின் பின்புலமும் இதைத்தான் உணர்த்துகிறது
குணா மாதிரி
ஒரு அப்பாவியின்
அவலட்சணமான முகம் கண்ணுக்குள் நிறைந்திருக்கிறது
கதையைப்படித்து முடித்ததும்
மனசு இறுக்கமாகிவிட்டது
அற்புதம் தம்பி
சமீபத்தில் படித்த கதைகளில்
மனதில் நிற்கும் கதை-வாழ்த்துக்கள்
கவிஞர். நீலபாண்டியன்
தேனி
தோழர்,ரொம்ப அழகா எழுதிருக்கிங்க. கதையை வாசிக்கத் துவங்கியதில் இருந்து அங்கங்கே சிரிப்பு..
மனதைப் பிசையும் சோகத்தைக் கூட கொண்டாட்டமாகச் சொல்லியிருக்கும் நடை புதுமைப்பித்தனை நினைவூட்டியது..
பயணத்தை இனிமையாக்கிய நல்ல கதை
முகராசி !
வாழ்த்தும் அன்பும் தோழர்..
தங்க.துரையரசி
திருநெல்வேலி