இலங்கை

பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ளலாம் – சாணக்கியன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானை கைதுசெய்து விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2005இல் இடம்பெற்ற பல்வேறு கொலைகள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்ள முடியும்.

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதில் சாட்சி சொல்வதற்குப் பலரும் இருக்கின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் ராவமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை  இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் நடந்திருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் 2005ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் செயற்பட்டு வந்துள்ளன.

இது தொடர்பில் அடிக்கடி கூறியிருந்தாலும் இதன் பாரதூர தன்மை தொடர்பில் புரிந்துகொள்ளாது இருக்கின்றனர். எவ்வாறாயினும் தற்போது 2014ஆம் ஆண்டில் நடந்த சம்பவமொன்று தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் புலனாய்வுத்துறையுடன் சம்பந்தப்பட்ட மூன்று இனங்களையும் சேர்ந்த புலனாய்வுக் குழு அதிகாரிகளின் குழுவொன்றே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளன.

2004ஆம் ஆண்டில் ஈமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாயிஸ், ஆமி மொஹிதீன், கலீல் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கலீல் என்ற நபர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று விடுதலையானவர்.

2009 ஆம் ஆண்டில் திருகோணமலையில் 6 வயது வர்ஷா என்ற சிறுமி பெற்றோரிடம் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலைக்குப் பொறுப்பான மேர்வின் என்பவர் கைது செய்யப்பட்டார் ஜனார்த்தனர், நிசாந்தன், ரெஜினோல்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் பொலிஸாரின் பொறுப்பிலிருந்த போதே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 8 வயது சிறுடு ஒருவரும் கப்பம் கோரி 2009இல் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் நால்வரும் அரச படையினரால் கொலை செய்யப்பட்டனர்.

புலனாய்வு பிரிவின் குழுவினர் தமது நோக்கத்திற்காகக் கப்பம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதன்பின்னர் கைது செய்யப்படுபவர்களைக் கொல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.  இவ்வாறு பலர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடையே என்ன தொடர்பு என்று நினைக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்டு கிழக்கில் ஸ்தீரமற்ற நிலைக்குக் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறாகப் பரிசோதிக்கப்பட்ட விடயங்களே பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. பிள்ளையான் உள்ளே இருந்தால் அவர் பலவற்றை கூறலாம் என்பதனால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளனர்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார். மரண பரிசோதனைக்கு இடமளிக்காது அவரின் உடலை எரித்துள்ளனர்.

அதனால் 2005ஆம் ஆண்டு முதல் ஈஸ்மர் தாக்குதல் வரை இடம்பெற்ற கொலை சம்பவங்களுக்குத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குத் தொடர்பு இருக்கிறது. அதனால் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த கட்சியின் தலைவை கைதுசெய்து விசாரணை நடத்தினால் இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ளலாம். எனவே மட்டக்களப்பு மாவட்ட வாக்குகளைப் பார்க்காமல் ஜனாதிபதி அவரை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.