“கனகர் கிராமம்” …. தொடர் நாவல் …. அங்கம் – 27 …. செங்கதிரோன்.
ஈழத்தமிழர்களுடைய விடுதலைப்போராட்ட அரசியல் பயணத்தில் ‘தந்தைசெல்வா’ என அழைக்கப்பெற்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத்தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தராக அக்கரைப்பற்றுத் தென்பகுதிப் பிரதேசத்தில் விளங்கியவரும் 1956 இல் நடைபெற்ற ‘திருமலையாத்திரை’க்குத் திருக்கோவிலிருந்து சென்ற அறப்போர் அணிக்குத் தலைமைதாங்கிச் சென்றதால் ‘அறப்போர் அரியநாயகம்’ என அழைக்கப்பெற்றவருமான அமரர்.அரியநாயகத்தின் தம்பிலுவில் வீட்டு முற்றத்தில் நின்றிருந்த மாமரநிழலின்கீழ் தரையில் எல்லோரும் வட்டமாய் வீற்றிருக்கச் சிவஞானச்செல்வக்குருக்கள் தலைமையில் பொத்துவில் தொகுதித் தமிழர்விடுதலைக் கூட்டணிக் கிளையின் பொதுச்சபைக் கூட்டம் காலை பத்துமணி போல் ஆரம்பமாகிற்று.
பொத்துவில் தேர்தல் தொகுதியின் காரைதீவு – அட்டப்பள்ளம் – திராய்க்கேணி – மீனோடைக்கட்டு – அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு – கோளாவில் – பனங்காடு – தம்பட்டை – தம்பிலுவில் – திருக்கோவில் – விநாயகபுரம் – தாண்டியடி – சங்கமன்கண்டி – கோமாரி – பொத்துவில் ஆகிய தமிழ்க்கிராமங்களிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பலர் முதியோரும் இளையோருமாகப் பிரசன்னமாயிருந்தார்கள்.
எல்லோரும் எழுந்துநின்று இறைவணக்கம் செலுத்தியபின் தரையில் வட்டமிட்டு மீண்டும் அமர்ந்தார்கள். அரைவட்டப்பகுதியொன்றின் நடுவில் எல்லோரையும் நோக்கிபடி தலைவர் சிவஞானச் செல்வக்குருக்கள் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
தலைவர் சிவஞானச் செல்வக்குருக்கள் எழுந்து எல்லோருக்கும் வணக்கங்களைக் கூறித் தனது தலைமையுரையில் கூட்டம் கூட்டப்பெற்றதன் நோக்கத்தை வெளிக்கூறி அபிப்பிராயங்களைக் கோரி அமர்ந்தார்.
தம்பிலுவிலைச் சேர்ந்த முதியவர் சிந்தாத்துரை எழுந்து எடுத்தவுடனேயே “பொத்துவில் தொகுதிக்கான தமிழர்விடுதலைக்கூட்டணி வேட்பாளராகத் தம்பிலுவிலைச் சேர்ந்த நடராசா தருமலிங்கத்தின் பெயரை நான் சிபார்சு செய்கிறேன்” என்றார்.
கட்சியில் சிந்தாத்துரையின் சமகாலத்தவரும் சிந்தாத்துரையைப் போலவே அமரர். அரியநாயகத்துடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவருமான தம்பிலுவிலுவைச் சேர்ந்த அரசரெட்ணம் “நான் அதனை எதிர்க்கின்றேன்” என்று பட்டென்று குரல்கொடுத்தார்.
தமிழரசுக்கட்சியின் தீவிர தொண்டர்களில் ஒருவரான தம்பிலுவிலைச் சேர்ந்த தர்மரெட்ணமும் “நானும் அதனை எதிர்க்கின்றேன்” என்று கூற,
கூட்டத்தில் பிரசன்னமாயிருந்த தம்பட்டைக் குருநாதபிள்ளை – தம்பிலுவில் வேல்முருகு – திருக்கோவில் நாகமணி – விநாயகபுரம் குருநாதபிள்ளை – பொத்துவில் நடராசா என்று பலர் ஏககாலத்தில் “நாங்களும் எதிர்க்கின்றோம்! நாங்களும் எதிர்க்கின்றோம்” என்று குரல் எழுப்பினார்கள். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சிவஞானச்செல்வக்குருக்களின் அருகில் அமர்ந்து கூட்டக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த பொத்துவில் தொகுதித் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் திருக்கோவிலைச் சேர்ந்த சிவஞானம் செய்வதறியாது திகைத்தபடி அமர்ந்திருந்தார்.
சிவஞானச்செல்வக்குருக்களின் முகத்திலும் அவ்வளவாக மகிழ்ச்சி நிலவில்லை. என்றாலும் எழுந்துநின்று அவரது கணீரென்ற குரலில் “அமைதி! அமைதி” எனப் பலமுறை உரத்துக்கூறி அமைதியை நிலைநாட்டினார்.
கூட்டத்தில் அமைதி ஏற்பட்டதும் பொத்துவிலைச் சேர்ந்த இளைஞனான ஆசீர்வாதம் “நான் பொத்துவிலைச் சேர்ந்த மயில்வாகனம் கனகரட்ணம் அவர்களின் பெயரை முன்மொழிகின்றேன்” என்றான்.
மற்றொரு பொத்துவில் இளைஞனான நல்லதம்பி அதனை வழிமொழிந்தான். சிந்தாத்துரை எழுந்து “கனகரட்ணம் தமிரசுக்கட்சியினதோ அல்லது தமிழர்விடுதலைக்கூட்டணியினதோ அரசியலில் இதுவரையில் ஈடுபட்டவர் அல்ல. அவர் கட்சியின் உறுப்பினருமல்ல. 1960 ஆம் ஆண்டுகளிலிருந்தே பழைய பொத்துவில் தொகுதியிலே சுயேச்சையாகத் தேர்தல்களிலே போட்டியிட்டு வெற்றிபெற்றுவரும் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளரான சம்மாந்துறையைச் சேர்ந்த அப்துல்மஜீத்தையே கனகரட்ணம் ஆதரித்து வருபவர். ஒரு தடவை கனகரட்ணத்தின் கூடப்பிறந்த தமக்கையின் கணவரான ‘புறக்டர்’ சந்திரசேகரம் நொத்தாரிஸ் தேர்தலில் போட்டியிட்டபோதுகூட தனது அக்காவின் கணவரை ஆதரிக்காமல் அப்துல்மஜீத்தையே ஆதரித்தவர். அவரை எப்படித் தமிழர்விடுதலைக்கூட்டணி வேட்பாளராக நியமிப்பது” என்று ஆட்சேபனை கிளப்பினார்.
“அதுதானே!” என்றார் இடையில் ஒருவர். சிந்தாத்துரையின் ஆளாக இருக்க வேண்டும்.
இதுதான் சந்தர்ப்பம் என்றுணர்ந்த கோகுலன் எழுந்தான். சிவஞானச்செல்வக்குருக்களின் கண்கள் கோகுலனின் மீது நிலைகுத்தி நின்றன.
கோகுலன் என்ன கூறப்போகிறானோ என்ற வினாக்குறியை நெற்றியை உயர்த்தி அவர் அவனைப் பார்த்த பார்வை வெளிப்படுத்திற்று.
“தமிழரசுக்கட்சியின் அல்லது தமிழர்விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்பது கட்டாயமென்றால் பெரியவர் சிந்தாத்துரை அவர்கள் முன்மொழிந்த நடராசா தருமலிங்கமும் கட்சி உறுப்பினர் அல்ல.
கனகரட்ணம் அப்துல்மஜீத்தை ஆதரித்தது குற்றமென்றால் அமரர். அரியநாயகம் அவர்கள் 1965 ஆம் ஆண்டுத் தேர்தலிலே பழைய பொத்துவில் தொகுதியில் தமிழரசுக்கட்சி நிறுத்திய வேட்பாளர்; கொழும்பைச் சேர்ந்த காதர் என்பவரையோ அல்லது அத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தமிழரான நடராசா தருமலிங்கத்தையோ ஆதரிக்காமல்; கனகரட்ணம் ஆதரித்த அதே அப்துல்மஜீத்தையே ஆதரித்திருந்ததும் குற்றம் என்பதைச் சிந்தாத்துரை அவர்கள் ஒப்புக்கொள்வாரா?. அடுத்து வந்த 1970 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் கூட தருமலிங்கத்தை ஆதரிக்காமல் அப்துல்மஜீத்தைத்தானே அரிநாயகம் ஆதரித்திருந்தார். இந்த வரலாறுகள் பெரியவர் சிந்தாத்துரை அவர்களுக்குத் தெரியாததல்ல.
அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் எடுத்த அரசியல் நிலைப்பாடு அது. அதனை வைத்துக்கொண்டு நாம் இப்போது குழம்பக்கூடாது. இப்போதைய சூழ்நிலையில் எப்படியாவது பொத்துவில் தொகுதியிலிருந்து தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினரொருவரை அம்பாறை மாவட்டத் தமிழர்கள் பெற்றாகவேண்டும். என்று கூறிய கோகுலன்,
புதிய பொத்துவில் தொகுதியின் முஸ்லீம் – தமிழ் – சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கைகள் – அது எப்படி வாக்களிக்கப்படலாம் என்பது பற்றியெல்லாம் எதிர்வுகூறிப் புள்ளி விபரங்களுடன் விளக்கிவிட்டுக்,
“கனகரட்னம் தமிழரசுக்கட்சியினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியினதும் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவராக இருக்கலாம். ஆனால் தமிழர்களுடைய எதிர்கால வாழ்விலும் முன்னேற்றத்திலும் அக்கறைகொண்ட தமிழ் உணர்வாளர்.
1958 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது தமிழர்களைத் தாக்குவதற்கென்று சிங்களக் காடையர் கும்பலொன்று மொனராகலையிலிருந்து லகுகலை வழியாகப் பொத்துவில் வருகிறதாம் என்ற செய்தியைக் கேள்விப்பட்டுக் கையிலே துவக்கும் கழுத்தைச் சுற்றித்தோட்டா மாலையையுமாக ஆட்கள் சிலரோடு காரில் லகுகலைநோக்கிச் சென்றதாகவும் அவரது அந்த போர்க்கோலத்தைக்கண்டு அவருடைய மனைவி மயங்கி விழுந்ததாகவும் பொத்துவில் முதியோர்கள் பலர் கூற நான் காதில் கேட்டிருக்கிறேன். சிங்களக்காடையர்கள் தாக்க வருகிறார்கள் என்ற அந்தச் செய்தி பின்னர் வேறும் ‘வதந்தி’ யாகிற்று. ஆனால் அப்படி நடந்திருந்தால் கனகரட்ணம் அதனை எதிர்கொள்ளத் தயாராயிருந்திருக்கிறார்.
போனவருடம், சிறையிலுள்ள காசி ஆனந்தன், மாவை சேனாதிராசா, மற்றும் வண்ணை ஆனந்தன் உட்பட்ட தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யக்கோரிப் பொத்துவில் தமிழர்விடுதலைக் கூட்டணியால் நிகழ்த்தப்பெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் நானும் எனது தாயாரும் கலந்து கொண்டிருந்தோம். இங்கு இக்கூட்டத்தில் பிரசன்னமாயிருக்கும் அனேகம் பேர் பெரியவர் சிந்தாத்துரை மற்றும் அரசரட்ணம் உட்பட அவ்வுண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களே. அரியநாயகத்தின் மூத்தபுதல்வர் சந்திரநேருவும் அதில் கலந்து கொண்டிருந்தார். உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த வேளை அங்குவந்த பொத்துவில் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி உண்ணாவிரதிகளிடம் வந்து அதிகார தோரணையில் விசாரணை செய்ய முற்பட்டபோது அவ்வேளை வேறு அலுவல்கள் காரணமாக வீதியில் தனது காரில் சென்று கொண்டிருந்த கனகரட்ணம் இதனைக் கண்டு விட்டு காரைநிறுத்தி இறங்கிவந்து பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் பேசி அந்த உண்ணாவிரதம் எவ்வித தடங்கலுமின்றித் தொடர வழிசெய்தவர்.
மட்டுமல்ல, உகந்தை முருகன் கோயிலுக்கும் சங்கமன்கண்டிப் பிள்ளையார் கோயிலுக்கும் அபிவிருத்திப் பணிகளில் பலவிதங்களிலும் உதவி வரும் ஓர் ஆன்மீகச் செயற்பாட்டாளரும் கூட.
வருடாவருடம் கதிர்காமத்திற்கு நடந்து செல்ல வருகின்ற யாத்திரீகர்கள் அனைவருக்கும் பொத்துவிலில் அவருடைய வாசஸ்தலம் அமைந்துள்ள வளவில் அத்தனை நாட்களும் அவர்களைத் தங்கவைத்து உணவளித்து உதவி வருபவர். இது எல்லோருக்கும் தெரியும்.
மேலும், கனகரட்ணம் அவருடைய தந்தை வழியில் பெரிய தனவந்தர். மற்றைய சிலரைப்போல் அரசியலுக்கு வந்து பொருள் தேடவேண்டிய – வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கில்லை. தனது பணத்தை அள்ளியிறைத்து மக்கள் பணி புரியக்கூடிய மனமுடையவர். அவருடைய அரசியலில் ஊழல் இருக்காது. நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் உண்மையும் துணிவும் இருக்கும். இப்படியான அரசியல்தான் தமிழ்மக்களுக்கு அதுவும் கடந்த முப்பது வருடங்களாக அரசியல் அனாதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்குத் தேவை. அதற்கு மிகவும் பொருத்தமானவர் பொத்துவில் தொகுதியிலே அவரைத்தவிர வேறொருவருமில்லை. நான் முன்பு விளக்கியதைப்போல குறைந்தது ஆயிரம் முஸ்லீம் வாக்குகளைப் பெறக்கூடிய வல்லமை அவருக்கு மட்டும்தான் உண்டு. அவருடைய தந்தை மயில்வாகனம் ஓவசியர் காலத்திலிருந்து அவர்களுடைய வயல் – தென்னந்தோட்டம் – மாட்டுப்பண்ணை – வர்த்தக நிலையங்கள் என்று அவற்றில் தொழில் பார்த்துத் தங்கள் குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்ட பல ஏழை முஸ்லீம் குடும்பங்கள் பொத்துவிலில் உள்ளனர். அவர்கள் தங்களை வாழவைத்த மயில்வாகனம் ஓவசியர் மற்றும் அவருடைய மகன் கனகரட்ணத்தின் குடும்ப விசுவாசத்திற்காகவும் நன்றிக்கடனுக்காகவும் கனகரட்ணத்திற்கே வாக்களிப்பார்கள்” என்று சுமார் அரைமணித்தியாலத்திற்கு மேல் கனகரட்ணம் புராணம்பாடி முடித்தான் கோகுலன்.
கோகுலன் மூச்சுப்பிடித்துக் கூறியவைகள் அனைத்தையும் கூட்டத்தில் குண்டூசி விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் தங்கள் உடல்மொழியால் ஏற்றுக்கொள்வதாக வெளிப்படுத்தினர்.
சிந்தாத்துரை ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார். கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய சிவஞானச்செல்வக்குருக்கள் முன்னாலும் பக்கவாட்டிலும் தன் கண்களை மேயவிட்டு வழமைபோல் தாடியை ஒருதரம் நீவிவிட்டுக் கொண்டார்.
கோகுலன் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பொத்துவிலைச் சேர்ந்த இளைஞன் இலட்சுமணனுக்குக் கண்ணைக் காட்டினான். கூட்டத்தில் நிலவிய அமைதியைக் கிழித்துக் கொண்டு இலட்சுமணின் குரல் எழுந்தது.
“பொத்துவில் தொகுதியின் தமிழர்விடுதலைக்கூட்டணி வேட்பாளராகத் திரு.மயில்வாகனம் கனகரட்ணம் அவர்களை நியமிக்கும்படி இக்கூட்டம் ஏகமனதாகத் தீர்மானிக்கிறது என்பதை ஒரு தீர்மானமாக முன்மொழிகிறேன்” என்று கூறி விடயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.
“அத்தீர்மானத்தை நான் வழிமொழிகின்றேன்” என்று அரசரட்ணம் எழுந்துகூற அனைவரும் கரவொலி எழுப்பினர். சிந்தாத்துரையின் முகத்தில் ஈயாடவில்லை. தோளில் மடித்துப்போட்டிருந்த சால்வைத் துண்டால் முகத்தில் அரும்பிய வியர்வைத்துளிகளைத் துடைத்துக்கொண்டார்.
கூட்டத்தின் முடிவு வெற்றியாய்க் கனிந்ததும் கோகுலன் துரிதமாகச் செயற்படத் தொடங்கினான்.
செயலாளர் சிவஞானத்தைக் கொண்டு அன்றைய கூட்டத்தீர்மானத்தை ஒரு வெள்ளைத் தாளில் எழுதிவித்து அன்றைய கூட்டத்திற்குத் தலைமைவகித்த சிவஞானச்செல்வக் குருக்களிடமும் செயலாளர் சிவஞானத்திடமும் திகதியிடப்பெற்ற கையொப்பங்களைப் பெற்றுக்கொண்டு அத்தாளைப் பக்குவமாய் மடித்துத் தனது ‘சேர்ட் கொக்கட்’டுக்குள் வைத்துக்கொண்டான்.
கூட்டத்திற்கு வந்தவர்கள் கலையத்தொடங்கினார்கள். சிவஞானச்செல்வக்குருக்களின் முகத்தில் திருப்தி தென்படவில்லை. கோமாரியைச் சேர்ந்த யேசுரட்ணம் – தம்பிலுவிலைச் சேர்ந்த பொன்கோபால் மற்றும் திருக்கோயிலைச் சேர்ந்த இன்னுமிரு இளைஞர்களையும் தன்னுடன் வரும்படி கூட்டிக்கொண்டு அன்றிரவே கொழும்புக்குச் செல்லும் புகையிரதத்தைப் பிடிப்பதற்காக மட்டக்களப்புக்குப் புறப்பட்டான் கோகுலன். சிவஞானச்செல்வக்குருக்களிடம் கொழும்பு செல்லும் விடயத்தைக் கோகுலன் கூறவில்லை. “போய் வருகிறேன்” என்று மட்டும் சொல்லி விடை பெற்றான்.
கதிரவேற்பிள்ளை எம்.பி கல்முனை வாடிவீட்டில் வைத்துக் குறிப்பிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைக்குழுக்கூட்டம் மறுநாள் கொழும்பு மருதானையில் உள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரம் அவர்களின் இல்லத்தில் நடைபெறுவதாயிருந்தது. அக்கூட்டத்திற்குத் தம்பிலுவிலில் நடந்த கூட்டத் தீர்மானத்துடன் போய்ச் சேர்வதே கோகுலனின் அடுத்தகட்ட நகர்வாகவிருந்தது.
(தொடரும் …… அங்கம் – 28)