தாமரைச்செல்வியின் “சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு” …. ஒரு பார்வை …. கிறிஸ்டி நல்லரெத்தினம்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஈழத்து மற்றும் புலம்பெயர் இலக்கியத்துறையில் தடம்பதித்து சிறுகதைகள், குறுநாவல், நாவல் என பல வகை ஆக்கங்களை தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டவர் திருமதி. ரதிதேவி கந்தசாமி எனும் இயற்பெயரைக்கொண்ட தாமரைச்செல்வி.
அவர் ஈழத்தில் முன்னர் வாழ்ந்த வன்னி மண்ணே அவரின் பல புனைவுகளின் கதைக்களமாகியுள்ளது. அவர் சந்தித்த அல்லது அவருடன் பயணித்த சாமானியர்களையே கதாபாத்திரங்களாக்கி அவர்களுடாக கதை நகர்த்துவதால் அவரது கதைகளில் யதார்த்தம் சகபயணியாகிறது.
மித வர்ணிப்பு மற்றும் வார்த்தைச் சோடனைகளைத் தவிர்த்து சொல்லவந்ததை குறுகச்சொல்லி, வாசகனின் புரிதலுக்கும் கற்பனைக்கும் வழிவகுத்துச் செல்வது இலக்கிய வாழ்வில் பொன்விழா கண்ட இந்த மூத்த எழுத்தாளரின் தனிச்சிறப்பு என்றும் சொல்லலாம்.
ஒரு கதை முடிந்த பின்னரும் முற்றுப்புள்ளி வைக்காமல் மேலதிகமாக சேர்க்கப்படும் ஒவ்வொரு வார்த்தையும் கதைக்கு சுமையே என்பதை அவர் கதைகள் சொல்லாமல் சொல்கின்றன.
அவரின் “மௌன யுத்தம்” சிறுகதையில் கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் வீட்டை விட்டுச் சென்ற மனைவி மீண்டும் வீடு திரும்புகிறார். இப்படி முடிகிறது கதை: “வழக்கம் போல் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. ஆனாலும் வாய் அசைந்து “வாரும்” என்றது கணவனின் குரல்.
. ஆண் ஆதிக்கத்தை குறியீடாக்கும் அந்த ஒரு சொல்தான் கதையை வேறு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது.
ஈழப்போரின் வரலாற்று நிகழ்வுகள் ஒரு நூலகத்தின் அலமாரியில் கட்டுரை வடிவில் சாய்ந்து உறங்கிக்கொண்டு இருக்கலாம். ஆனால், ஒரு போரின் அல்லது சமூகப்புரட்சியின் வடுக்களை பின்புலமாக வைத்து அது ஒரு சிறுகதையாகவோ அல்லது நாவலாகவோ இலக்கிய வடிவமெடுக்கும்போது அது தொன்மம் என்பதைத் தாண்டி நிகழ்காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. ஒரு தொன்மம் சார்ந்த நிகழ்வுகளை சாரமாய் கொண்ட புனைகதைகள் தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு அதை வாசிக்கும் காலத்தை நிகழ்காலமாக்கி வாசகனின் மனதில் மறுபிறவி எடுக்கின்றன.
டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ இதற்கு ஒரு நல்ல உதாரணம். தாமரைச்செல்வியின் சிறுகதைகளை தற்போது படிக்கும் அல்லது இன்னும் ஐம்பது வருடம் கழித்து படிக்கும் எதிர்கால சந்ததியும், அந்த போர் நினைவுகளில் மீண்டும் போய் நிச்சயம் வாழ்ந்து, மீண்டும் அதே வேதனை வடுக்களை பிராண்டிப் பார்க்கும் என்பது நிச்சயம்.
அதுவே இவரின் புனைகதைகள், ஆவணப்படுத்தல் என்பதையும் தாண்டி, ஒரு நிகழ்கால தோற்றத்தை எதிர்கால வாசகர் கண்முன் தோற்றுவிக்கும் என நம்பலாம்.
இக்கதைகளின் உள் அர்த்தத்தையும் போர்ச்சூழலில் வாழும் பாத்திரங்களின் மனக் கொந்தளிப்பையும் புரிந்து கொள்ள அந்த எதிர்கால சமூகம் தாமரைச்செல்வி எனும் எழுத்தாளரை புரிந்து கொள்ளத் தேவையில்லை.
இக்கதைகள் அவரை உதறித்தள்ளிவிட்டு அச்சூழலில் ஈழத்தின் வடகிழக்கில் நிகழ்ந்த சமூக இடர்களை அந்த வாசகன் முன் விரித்துப் போடும் தன்மை கொண்டவை. அந்த வரலாற்று நிகழ்வுகளில் போய் அந்த வாசகன் வாழ்வான். அந்த வாசகனுக்கு இதை எழுதியவர் பற்றிய எந்த அறிவும் இல்லாவிட்டாலும், இக்கதைகள் வாசகனை இழுத்துச் சென்று பதுங்குகுழிக்குள்ளும், அகதிகள் முகாமின் முள்ளுக்கம்பிகளின் பின்னேயும், ஷெல் வெடிக்கு தப்பி செட்டிக்குளம் முகாமிற்குள்ளும் வாழவைக்கும்.
அதன் வேதனை வடுக்களை வாசகன் புதுப்பித்துக்கொள்வான். இந்த அனுபவத்தை சரித்திரப் பாடப்புத்தகங்கள் ஒரு வாசகனுக்கு அளிக்காது. எனவேதான் போர்க்கால நினைவுகளில் வாழ்ந்த பாத்திரங்கள் ஊடாக புனைகதைகள் போரின் அவலத்தை எம்மனதில் ஆழப்பதியவைத்து விடுகின்றன. போரின் புறவய காட்சிகளே இக்கதைகள் மூலம் படிமங்களாய் மாறி ஒரு இலக்கியத்தை செழுமைப்படுத்தியுள்ளன என்பது உண்மை.
எனவே ஒரு கதாசிரியருக்கும் அவர் படைந்த இலக்கியத்திற்கும் உள்ள பிணைப்பு காலத்தால் முறிந்த பின்பும் அந்த இலக்கியம் தொடர்ந்து வாழும் எனில் அதுவே உயர்ந்த இலக்கியம் என நம்பலாம். போரின் வடுக்களைக் கடந்து தனி மனித உணர்வுகளை கூறுபோட்டுப் பார்க்கும் சிறுகதைகளும் இந்த தொகுப்பில் உண்டு.
“மழை வரும் காலம்” சிறுகதையில் விவாகரத்துப்பெற்ற இருவரை அறிமுகப்படுத்தி, ஒரு புலம்பெயர்ந்த சூழலில், மீண்டும் ஒரு புதிய உறவை அவர்கள் ஏற்படுத்த எடுக்கும் எத்தனிப்பையும் அதற்கான காரணிகளை தராசில் ஏற்றி அவற்றை யதார்த்த சிந்தனைக்குட்படுத்தி இறுதியில் ஒரு முடிவை அடைவதையும் மிக ஆழ்சிந்தனையுடன் சித்திரிக்கிறார் கதாசிரியர்.
ஒரு ஆணின் மன ஓட்டத்தில் இக்கதை சொல்லப்பட்டிருந்தாலும் பெண் பாத்திரங்களின் மென் உணர்வுகளை மிகச்சிறப்பாக சித்திரிக்கத் தவறவில்லை. “அவரோட சரியாய் களைச்சுப் போனன்” என்ற வார்த்தைகள் இக்கதையின் பெண் கதாபாத்திரத்தின் அங்கலாய்ப்பையும் அலைக்கழிப்பையும் ஆழகாகவும் ஆழமாகவும் சித்தரித்துச் செல்கிறது. போர்க்கால அலைக்களிப்புகளின் சித்தரிப்பைப்பற்றிய ஒரு பத்திரிகையாளனின் நோக்கும் ஒரு இலக்கிய படைப்பாளியின் நோக்கும் வேறுபடுகிறது. செய்தியை ”சொல்வதுடன்’ செய்தி சேகரிப்பவனின் கடமை முடிந்துவிடுகிறது. ஆனால், ஒரு படைப்பாளி வாசகனுடன் ஒரு நிகழ்வின் வலியையும், கதாபாத்திரங்களுக்கு அது ஏற்படுத்தும் தாக்கத்தையும், சமுதாய கட்டமைப்பில அது ஏற்படுத்தும் நிலை குலைவையும் ‘காண்பித்து’ கடந்து போகிறான்.
இதன் வலிகள் கதையை படித்து முடித்த பின்னரும் வாசகன் ஆழ்மனதில் நிலையாக குடிகொள்கிறது. இந்த காட்சிப்படுத்தலை மிக நேர்த்தியாக ஆங்காங்கே கதையின் கருவுடன் இணைத்த கதாசிரியரை பாராட்ட வேண்டும். போர்ச் சம்பவங்களின் பாதிப்புகள் மிக இறுக்கமாக கதை மாந்தர்களுடன் பிணைத்து புனையப்பட்டுள்ளதால் அவைகள் இன்றி கதை சரிந்து விடுமோ என எண்ணத்தோன்றும்.
இத்தொகுப்பின் முத்திரைக்கதையான “சின்னாச்சிக் கிழவனின் செங்காரிப் பசு” வில் குஞ்சப்பரந்தனில் இருந்து ஷெல் அடிபட்டு தன் மகனையும் மருமகளையும் இழந்ததில் இருந்து கிழவனின் இடப்பெயர்வு ஆரம்பமாகிறது.
செட்டிக்குளம் முகாம், மீள் குடியேற்றம் என அலைக்கழிந்து இறுதியில் சொந்த ஊர்திரும்பி, செங்காரிப் பசுவிற்கு உரிமையாளராகிறான்
சின்னாசிக்கிழவன். பின்னர் பசுவை இழந்த அவனின் தேடலில் நாமும் இணைந்து கொள்கிறோம். போர்ச் சூழலில் உறவுகளை இழந்த எத்தனையோ சொந்தங்களின் உருவகமாக (allegory) செங்காரிப்பசுவை கதாசிரியர் இங்கு காட்சிப்படுத்துகிறார் எனச் சொல்லலாம். மனித மென் அகஉணர்வுகளை கருவாய் கொண்ட “அவனும் அவளும்”, “வெயிலோடும் மழையோடும்”, “மௌன யுத்தம்”, “மழை வரும் காலம்” போன்ற கதைகளில் உள்ள சமூகநீதி கடந்த யதார்த்த நோக்குடன் கூடிய பரிவும் மனித நேயமும் கருணை மரித்துவிடவில்லை என்பதை சொல்லிப் போகின்றன.
“வாழ்தல் என்பது” கதையில் இலங்கை அண்மையில் எதிர்கொண்ட பொருளாதார வீழ்ச்சியின் இடர்களில் சிக்கித்தவிக்கும் இரு ஆட்டோக்காரர்களின் தோழமையையும் மனித நேயத்தையும் சொல்லிப்போகிறது. தினக்கூலியில் நாட்களை நகர்த்தும் இவர்களின் புரிந்துணர்வையும் பரிவையும் மிக நேர்த்தியாக கதையில் புகுத்தியிருக்கிறார் கதாசிரியர். பல மாறுபட்ட கோணங்களிலும் கதைக்களங்களிலும் பயணிக்கும் கதைகளை “ஒரே மூச்சில் படித்து முடித்தேன்” எனச் சொல்லி கடந்து போனால் கதைகளில் பொதிந்துள்ள உணர்ச்சிக் கொந்தளிப்புகளை வாசகன் தவற விட்டுவிடலாம். எனவே இக்கதைகள் மீள் வாசிப்பிற்குட்பட்டு, வாசகர் வட்டம் போன்ற அமைப்புகளிலும் விவாதிக்கப்பட வேண்டியவை. ஒரு மூத்த எழுத்தாளரின் முத்திரை இத்தொகுப்பில் உள்ள எல்லாப் படைப்புகளிலும் ஆழமாய் வீழ்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. பொன்விழாக் கண்ட திருமதி தாமரைச்செல்வி அவர்கள் மேலும் பல புனைகதைகளைப் படைத்து இலக்கிய வானில் மின்ன வேண்டும் என வாழ்த்துகிறோம். அதே வேளையில் புலம்பெயர்ந்த சூழலில் மாற்றுச் சமூகத்தினுடனான பண்பாட்டு உரசல்களை சித்திரிக்கும் கதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்படாமல் இருப்பதையும் நோக்கக்கூடியதாய் உள்ளது.
அவர்களுடனான கலாச்சார சிக்கல்கள், அற மீறல்கள், முரண்கள் போன்றவற்றை ஆசிரியர் எழுத வேண்டும் என்பதே எனது அவா. இவ்வாறான கதைகள் நிச்சயம் புலம்பெயர் இலக்கியத்தை செழுமைப்படுத்தும் என நம்பலாம்.
சிறுகதை தொகுப்பு: சின்னா சிக்கிழவனின் செங்காரிப்பசு முதல் பதிப்பு: டிசம்பர் 2023 பதிப்பகம்: எதிர் வெளியீடு மொத்தக்கதைகள். 15 பக்கங்கள் : 176 விலை : ரூ 250
நன்றி: பூமராங் – ஏப்ரல் 2024