கட்டுரைகள்
சிட்னி இரு கத்திக்குத்து தாக்குதல் …. பயங்கரவாத அறிவிப்பில் இன… மத பாகுபாடு? …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(ஆறு பேரைக் கொன்ற பொன்டி ஜங்சன் தாக்குதல் – விரைவாக பயங்கரவாதம் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், வேக்லி தேவாலய சம்பவத்தை ஏன் காவல்துறை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுகிறது என்பதில் இன-மத பாகுபாடு காட்டப்பட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன)
சிட்னி நகரத்தில் தொடரான இரண்டு கத்திக்குத்து தாக்குதல்களின் பின்னர், முழு நாடே துயர்விலும், கொந்தளிப்பிலும் தத்தளித்தது. ஏன் எனில் ஒரு தாக்குதலை மட்டுமே பயங்கரவாத சம்பவமாக அரசின் காவல்துறை அறிவித்தமை இன-மத பாகுபாட்டின் அடையாளமாக தெரிந்தது.
அவுஸ்திரேலியாவில் பொதுவாக வன்முறையோ, கத்தி குத்து தாக்குதல்கள் அரிதாகவே நிகழ்கின்றன. ஆனால் சிட்னியில் அடுத்தடுத்து இரண்டு தாக்குதல்களும் பலரை பயமுறுத்தியுள்ளது.
புரிந்து கொள்ளக் கூடிய வகையில், இரண்டிற்கும் இடையேயான வன்முறை வடிவை ஒப்பீடுகளுக்கு வழிவகுத்தது.
ஆறு பேர் கொல்லப்பட்ட பொன்டி ஜங்சன் வெஸ்ட்பீல்ட் வணிக வளாக ( Bondi Junction Westfield) தாக்குதல் ஏன் பயங்கரவாதமாக கருதப்படவில்லை என்பது பலருக்கும் உள்ள கேள்வியாகும். ஆனால் இந்த அதிர்ச்சியூட்டும், மரணத் தாக்குதல் பற்றி நிறைய விவாதங்கள் உள்ளன.
பொன்டி ஜங்சன் வெஸ்ட்பீல்ட் வணிகவளாக மற்றும் வேக்லி தேவாலயத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி காவல் துறையினரிடமிருந்து மிகவும் மாறுபட்ட தகவல்களை ஊடகங்கள் கண்டன. மூன்று நாட்களில் இரண்டு கத்தி தாக்குதல்கள் சிட்னியிலும் நாடு முழுவதிலும் உள்ள பலரை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியது.
ஆறு பேரைக் கொன்ற பொண்டி ஜங்சன் தாக்குதல் – விரைவாக பயங்கரவாதம் இல்லை என நிராகரிக்கப்பட்ட நிலையில், வேக்லி தேவாலய சம்பவத்தை ஏன் காவல்துறை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுகிறது என்பதில் இன-மத பாகுபாடு காட்டப்பட்டதாக சந்தேகங்கள் உள்ளன.
தேவாலய தாக்குதல் மட்டுமா பயங்கரவாதம் ?
நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை கடந்த 16/4/24 அன்று அசிரியன் கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் பிஷப் மாரி இம்மானுவேல் மற்றும் பல வழிபாட்டாளர்கள் கத்தியால் குத்தப்பட்டதை உடனடியாக பயங்கரவாத சம்பவம் என்று அறிவித்தது.
ஆனால் பொன்டி ஜங்ஷனின் வெஸ்ட்ஃபீல்டில் இரு தினங்களுக்கு முன்பாக சனிக்கிழமை நடந்த கத்திக்குத்து ஒரு பயங்கரவாத சம்பவம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டது. மத்திய போலீஸ் கமிஷனர், ரீஸ்கெர்ஷா, அரசே அந்த மதிப்பீட்டைச் செய்ததாக கூறினார்.
மத்திய சட்ட திணைக்களம் ஒரு பயங்கரவாதச் செயலை “ஒரு அரசியல், மத அல்லது கருத்தியல் காரணத்தை முன்னெடுப்பதற்காக மிரட்டுவதன் மூலம் பொதுமக்களை அல்லது எந்தவொரு அரசாங்கத்தையும் வற்புறுத்துவது அல்லது செல்வாக்கு செலுத்துவது பயங்கரவாதம் என வரையறுக்கிறது.
பயங்கரவாதம் என்பதன் வரைமுறை:
இரண்டு சிட்னி கத்திக்குத்தும் சமூகத்தில் பயத்தையும், பாரிய விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கலாம் என்றாலும், காவல்துறையின் ஆரம்ப தகவல்கள் வெவ்வேறு இலக்குகளை பரிந்துரைக்கின்றன என்று ஒரு பயங்கரவாத நிபுணரான பேராசிரியர் கிரெக்பார்டன் கூறியுள்ளார்.
பொன்டி ஜங்சன் வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் ( Bondi Junction Westfield) , தாக்குதல் நடத்திய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அவர் பெண்களை குறிவைத்து தாக்கியதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
ஒன்பது மாதக் குழந்தை ஒன்று முதல் பலரைக் கத்தியால் குத்திக் கொண்டே சென்ற ஜோயல் (Joel Cauchi, 40) என்னும் நபரைக் கண்ட பெண் பொலிசாரான ஏமி (Amy Scott), கத்தியை கீழே போடு என சத்தமிட, ஜோயல் அந்தப் பெண் பொலிசாரை நோக்கிப் பாய, ஏமி அவரை துப்பாக்கியால் சுட, சம்பவ இடத்திலேயே பலியானார் ஜோயல்.
பெண்களை குறிவைத்த தாக்குதல்தாரி:
ஜோயலால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பான்மை பெண்கள் என்னும் விடயம் பின்னர் கவனத்திற்கு வந்தது. 17 பேர் ஜோயலால் தாக்கப்பட்ட நிலையில், அவர்களில் 14 பேர் பெண்கள், மூன்று பேர் ஆண்கள். கொல்லப்பட்டவர்களில் ஒரே ஆணான Faraz Tahir (30), அந்த வளாகத்தில் பாதுகாவலராக பணியாற்றியவர். அவர் ஜோயலைத் தடுக்க முயன்ற போது அவரால் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜோயல் பெண்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜோயலுடைய தந்தையான ஆண்ட்ரூ தனது மகன் குறித்து கூறும்போது, அவர் நீண்டகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக மருந்து சாப்பிடுவதை சமீபத்தில் நிறுத்தி விட்டதாகவும், அதற்குப்பிறகே இந்த மோசமான தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் ஏன் பெண்களைக் குறிவைத்துத் தாக்கினார் என ஆண்ட்ரூவிடம் கேட்ட போது, தனக்கு ஒரு காதலி வேண்டுமென அவன் விரும்பினான். ஆனால், அவனுக்கு வெளியாட்களிடம் பழகும் திறன் இல்லை, கத்திகள் மீது ஆர்வம் கொண்ட அவன் தனக்கொரு காதலி கிடைக்காத கோபத்தை பெண்கள் மீது வெளிப்படுத்தியுள்ளான் என்று கூறியுள்ளார் ஆண்ட்ரூ.
பாதிரியார் மீது தாக்குதல்:
இதேவேளை சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக் குத்துதாக்குதல் தொடர்பில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் அசிரியன் கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் ( Assyrian Christ The Good Shepherd) 16/4/24 தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பலதடவை கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நேரலையாக ஒளிபரப்பாகியுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு பாதிரியார் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்த போது திடீரென சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர்அவரை நோக்கி வந்தார். அப்போது அவர் பாதிரியாரின் நெஞ்சில் கத்தியால் குத்தினார்.
இதனால் அவர் சம்பவ இடத்திலே சரிந்து விழுந்து விட்டார். இதனை பார்த்து ஆலயத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆலயத்தின் அவையில் உள்ள பெண்கள், முதியவர்கள் என எல்லோரும் பயந்து அலறினர். அங்குள்ள ஒரு சிலர் தாக்குதலை தடுத்து நிறுத்தவும் முயன்றனர்.
இந்த தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் மக்கள் அந்நபரை பிடித்து வைத்திருந்தனர். அந்தநபரை போலீசார் விசாரித்தபோது , 16 வயது சிறுவன் இந்த தாக்குதலில் ஈடுபட்டு உள்ளான் என தெரியவந்துள்ளது.
தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து:
இதன்போது, நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன் தாக்குதல் நடத்தியவரும் காயமடைந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலானது மதரீதியிலான தீவிரவாதத்தினை தூண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை ” பயங்கரவாத தாக்குதல் சதித்திட்டம்” – ஐந்து இளைஞர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சிட்னி தேவாலயத்துக்குள் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஏழு சிறார்களில் ஐவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிணையும் தற்போது மறுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகம் மேல் துவேசம்:
NSW மாநில இஸ்லாமிய கவுன்சில் இதனைப்பற்றி தெரிவிக்கையில் பொன்டி ஜங்சனில் நடந்த தாக்குதல் மனநலப் பிரச்சினையாக கருதப்பட்டது, ஆனால் தேவாலயத்தில் கத்தியால் குத்தப்பட்டது ஒரு சில மணிநேரங்களில் ஒருபயங்கரவாத செயலாக அறிக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய சமூகத்திற்கு இது அனுப்பும் சமிக்ஞை என்னவென்றால், பயங்கரவாதம் முஸ்லீம்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது போன்றும், சமூக ஒற்றுமை மீதான தாக்கங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்தில் எழுப்பப்பட்ட கவலைகளை தாம் புரிந்து கொள்வதாகவும் இவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்குலகில் பயங்கரவாத பிரகடனம் ஆனது இஸ்லாமிய சித்தாந்தத்தால் ஏதாவது தூண்டப்பட்டால், ஊடகங்களில் அதை ஒரு பயங்கரவாத தாக்குதலாக கருதுகிறார்கள். இதற்கு நேர்மாறாக, தீவிர வலதுசாரி நபர்களின் தாக்குதல்கள் அவ்வளவு விரைவாக முத்திரை குத்தப்படுவதில்லை என NSW மாநில இஸ்லாமிய கவுன்சில் தெரிவித்துள்ளது.