“காத்திருப்பது வலிதரும் நிகழ்வு.. கண்ணாளன் வரும் நேரம் இது” … கவிதை …. முல்லைஅமுதன்.
உன்னிடம் எனக்கான பதில்கள்
கிடைக்குமென வீதியில் இறங்கினேன்.
மழையை அனுப்பிவிட்டு
என்ன ஜாலம் செய்கிறாய் என் தேவதையே.
எங்கே ஒளிந்துகொண்டன நட்சத்திரங்கள்?
மழைத்துளி பூக்களுள் மறைந்துகொண்டு
சமிக்ஞை காட்டின ஒருகணம்.
இரவு முழுதும் கண் விழித்து எழுதிய கவிதகளை
காட்டியபோது மழையும் தன் அழுகையை நிறுத்தி வாசிக்கத்தொடங்கியதும்
எனக்குள்ளும் அதிசயம் நிகழ்ந்தது.
வியர்த்துக்கொட்டியதை
நீ காணாத பொழுதில் துடைத்துக்கொள்வதை ரசிக்கிறாய் என்பதை அறிவேன்.
கவிதை நன்று ஒற்றையாய் ஒரு வார்த்தை..
கால்பெருவிரல் ஏதோ எழுதுவது போல உணர்கிறேன்.
சொல்லிவிடு…
காத்திருப்பது வலிதரும் நிகழ்வு..
கண்ணாளன் வரும் நேரம் இது..
அதற்குள் உன் அன்பை மறைத்தது போதும்..
வெளியே வந்து உன் அன்பைச் சொல்லிவிடு பெருமழையே!
உன்னை மறைத்ததில் பூக்களுக்கும் வலிக்குமல்லவா?
தூரலில் அல்ல..
பெருமழையில் உன்னுடன் நனையவே பிரியமாய் இருகிக்றேன்.
முல்லைஅமுதன்.