கட்டுரைகள்

காவிரிநதி நீர் விவகாரத்தில் மேகேதாட்டு அணை மேலுமொரு முட்டுக்கட்டையாகின்றதா?…. நியூசிலாந்து சிற்சபேசன்.

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்பார்கள். தொலைவு எப்போதுமே அவாவக்கூடியது. அருகாமை அச்சம் ஏற்படுத்தக்கூடியது. அருகாமையைப் பகிர்ந்துகொள்வது சவாலானது. அருகாமையைப் பகிர்ந்துகொள்ளும்போது, இரண்டு மனிதர்களிடம் பிரச்சினை வரலாம். இரண்டு மாநிலங்களிடம் பிரச்சினை வரலாம். இரண்டு நாடுகளிடம் பிரச்சினை வரலாம். அதற்கான சான்றுகளுக்குப் பஞ்சமில்லை. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களிடையேயான காவிரிநதிநீர் பங்கீடு விவகாரமும் அதற்கு உதாரணமாகும்.

காவிரிநதிநீர் பங்கீடு தொடர்பான முரண்பாடு இன்றுநேற்று ஆரம்பமானதல்ல. சுமார் நான்கு சகாப்தங்களுக்கு மேலாக தொடருகின்றது. அதனை, மேகேதாட்டு அணை விவகாரம் தற்போது உசுப்பேத்தியிருக்கின்றது.

காவிரிநதிநீர் பங்கீடு தொடர்பில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களிடையே ஐம்பதுவருட ஒப்பந்தம் 1924ல் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தமிழ்நாட்டுக்கு 350 டி.எம்.சி வரையான அளவுகளில் தண்ணீர் கிடைத்தது. அந்த ஒப்பந்தம் 1974ல் முடிவடைந்தது.

அதனை நீட்டிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு மாநிலங்களிடையேயும் பலவருடங்களாக நடைபெற்றன. ஆனால், எத்தகைய உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால், மத்தியஸ்தத்துக்குச் செல்லவேண்டிய நிலை உருவாகியது.

1990ல் காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. தமிழகத்துக்கு 205 டிஎம்சி ஒதுக்குவதாக நடுவர்மன்றம் 1991ல் இடைக்காலத்தீர்ப்பை வழங்கியது. .

காவிரிநடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியாகியபோது, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்பட்டன. தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

இடைக்காலத்தீர்பை அமுல்படுத்துவதிலேகூட இழுத்தடிப்புக்களை மேற்கொள்வது கர்நாடகத்தின் வாடிக்கையாகியது. அதனால், காவிரி நடுவர்மன்றத்தீர்ப்பை அமுல்படுத்தக்கோருவதே தமிழ்நாட்டுக்கு சுமையாகிவிடுகின்றது. சிலவேளைகளில், உச்சநீதிமன்றத்தை நாடவேண்டிய சூழ்நிலைகூட ஏற்படுகின்றது. உச்சநீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்பை அமுல்படுத்துவதுகூட சவாலாகிவிடுகின்றது. அதிலிருந்தும் கர்நாடகம் தந்திரோபாயமாகத் தப்பிவிடுகின்றது.

காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 2007ல் வழங்கப்பட்டது. அதன்பிரகாரம், தமிழ்நாட்டுக்கான காவிரிநீர்ஒதுக்கீடு 192 டிஎம்சி அளவாகக் குறைக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர், விவாகாரம் மேலும் சிக்கலாகியது. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களுமே உச்சநீதிமன்றத்தை நாடின. அதுதொடர்பிலான விசாரணைகள் பதினொரு ஆண்டுகள் நடைபெற்றன. மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு 2018ல் வழங்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு 177.25 டிஎம்சி அளவுக்கு மேலும் குறைக்கப்பட்டிருந்தது.

உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக, பண்பு உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக எனப் பாடல்வரிகளில் வருவதுபோல காவிரி தமிழ்நாட்டின் பெருமைக்குரிய பொக்கிஷமாகும். அண்ணளவாக, ஒன்றரைக்கோடி மக்கள் குடிநீர்த் தேவைக்காக காவிரிநீரைச் சார்ந்திருக்கின்றனர். காவிரிநீர் தடைப்படுகின்றபோது இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குள்ளாகின்றது. சுமார் முப்பதுலட்சம் ஏக்கர் விவசாயநிலம் காவிரிநீரை நம்பியிருக்கின்றது. காவிரிநீர் தடைபடுகின்றபோது பயிர்ச்செய்கை பாதிக்கப்படுகின்றது. காவிரிநீர் உரியநேரத்தில் கிடைக்காமையினால் குறுவை, சம்பா சாகுபடிகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுகின்றன. அதனால், காவிரிப்படுகை சொல்லொணாத் துன்பங்களை எதிர்கொள்கின்றது. விவசாயிகள் கடன்சுமையில் வீழ்கின்றனர். அதனால் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. நடந்தாய்வாழி எனப் போற்றப்படுகின்ற காவிரியற்றங்கரை சமூகத்திலே கண்ணீர் பெருக்கெடுக்கின்றது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவிரிநீர் பங்கீடு தொடர்பில் தொடர்ந்து ஆட்சிபீடமேறிய மாநில மற்றும் ஒன்றிய அரசியல் கட்சிகள் ஆத்மார்த்தமான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை. அதனாலேயே மாநிலங்களிடையேயான உறவு பிசிறுகின்றது.

காவிரிவிவகாரத்தில், நடுவர்மன்றத்தில் தீர்ப்பாகிய நீரைக்கூட பெற்றுகொள்ள முடியாமை தமிழ்நாட்டின் துர்ப்பாக்கியம். தமிழ்நாட்டுக்கு நீரைத் திறந்துவிடாமல் இருப்பதற்கான முன்னெடுப்புக்களே கர்நாடகத்தின் குறிக்கோள். தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் மேகேதாட்டு அணை நிர்மாணத் திட்டத்தையும் அந்தவகையிலேயே பார்க்கமுடிகின்றது.

இவ்வாறாக அணைகட்டி நீரின் ஓட்டத்தையும், தமிழ்நாட்டுக்கு வழங்கும் நீரின் அளவையும் குறைக்கின்ற கர்நாடகத்தின் முயற்சி புதியதல்ல. இதற்கு முன்னரும் 1970களின் பின்னரைப்பகுதிகளில் கபிணி, ஹேரங்கி, ஹேமாவதி, யாகாச்சி, ஸ்வர்ணாவதி ஆகிய ஐந்து அணைகளை காவிரி மற்றும் துணை நதிகளில் கர்நாடகம் கட்டியிருக்கின்றது.

மேகேதாட்டு அணை, சுமார் 68 டிஎம்சி கொள்ளளவையுடைய நீர்த்தேக்கத்தைக் கொண்டதாகவே திட்டமிடப்படுகின்றது. அதிலே நீர்மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

இத்திட்டத்தை அமுல்படுத்துகின்ற பட்சத்தில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்படுகின்ற நீரின் அளவு கணிசமாக குறையும் எனக் கணிக்கப்படுகின்றது.

கூடவே, சூழல்பாதிப்புக்களும் ஏற்படுமெனச் சொல்லப்படுகின்றது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காடுகள் அழிக்கப்படுவது ஏற்கெனவே அதிகரித்திருக்கின்றது. புதிய அணை நிர்மாணிக்கும்போது மேலும் காடுகள் அழிக்கப்படலாம். அதனால் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் உயிரிழக்கலாம். இவ்வாறான செயற்பாடுகளின் விளைவுகள் பாரதூரமானவை. புவிவெப்பமடைவதிலும் பங்களிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்போவதாக கர்நாடக அரசின் அறிவிப்பு உள்ளது. மறுவளத்தில், மேகேதாட்டு அணை நிர்மாணத்துக்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கக்கூடாது என்னும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது. அத்துடன், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தாக்கல் செய்துள்ளது.

நீதிமன்றம் மற்றும் காவிரிநடுவர் மன்றத்தின் தீர்ப்புக்களை அமுல்படுத்துவதில் உள்ள சவால்கள், பலனற்ற பேச்சுவார்த்தைகள், அறமற்ற அரசியல் தலையீடு ஏற்படுத்துகின்ற பக்கச்சார்பு, ஒன்றியஅரசின் நடுநிலைமை குறித்த அய்யம், மாநில அரசியல் வெட்பதட்பங்கள் என கடந்தகால வரலாறுகள் நம்பிக்கைகளை நறுக்குகின்றன.

ஏலவே, காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்பிரகாரம் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடுவதில்லை. அதனால், மத்தியஸ்தத்துக்கு அலைவதே தமிழ்நாட்டுக்கு வாடிக்கையாகிவிட்டது. தற்போது, மேகேதாட்டு அணை காவிரிநதிநீர் விவாகரத்தில் மேலுமொரு முட்டுக்கட்டையாகின்றது.

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.