கட்டுரைகள்
ANZAC ‘அன்சாக்’ தினம் ஏப்ரல் – 25 அன்சாக் தின கலப்போலி தரையிறக்க தோல்வி ! குழந்தைப் போர்வீரர் அலக் காம்ப்பெலின் தியாகம்! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து நாட்டு மக்களின் போர் நினைவு நாளே
அன்சாக் ஏப்ரல் 25ம் நாளாகும். இந்நாளில் கலப்போலி தரையிறக்க தோல்வி பற்றியும், குழந்தைப் போர்வீரர் அலக் காம்ப்பெலின் தியாகத்தையும் உலகம் மறந்து விட்டது)
போரின் கொடுமை எவ்வாறு இருக்கும் என்பதை அன்றைய அவுஸ்திரேலிய பொது மக்கள் உணர்ந்து உள்ளார்கள் என்பதன் சாட்சிய வெளிப்பாடே
‘அன்சாக்’ (ANZAC) தினம் எனலாம்.
துருக்கியின் கலப்போலியில் (Gallipoli) தோல்வி அடைந்த தரையிறக்கத்தின் எட்டு மாதப் போரின் தொடக்க நாளான 1915 ஏப்ரல் 25ம் நாள் அவுஸ்திரேலிய தினத்தைப் போன்றே அவுஸ்திரேலியர்களுக்கு முக்கியமான மற்றொரு தினமாகும்.
தற்போது ‘அன்சாக்’ தினமாக அனுஷ்டிக்கப்படும் ஏப்ரல் 25இல் தொடங்கிய கலப்போலி தரையிறக்க போரில் 26,000 அவுஸ்திரேலிய வீரர்கள் உயிரிழந்தனர். இதில் 8,000 பேர் காயங்கள் அல்லது நோயால் இறந்தனர்.
தோல்வியடைந்த கலப்போலி தரையிறக்கம்:
கலப்போலியைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியைத் தழுவினாலும், இப்போர்க்காலம் அவுஸ்திரேலிய நியூசிலாந்து வீர்ர்களின் வீரத்தையும் தியாகத்தையும், இந்நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டையும் வெளிக்கொணர்ந்த காலமாக அறியப்படுகிறது. அதேவேளை
கலப்போலி தீபகற்பத்தில் போரிட்ட மக்களின் வீரமும் தியாகமும் காவியமாக உருவெடுத்தது என்றும் கூறலாம்.
‘அன்சாக்’ என்ற சொல் அவுஸ்திரேலிய வாழ்வியலின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. முதலாம் உலகப்போரில்
பங்கேற்ற மற்றும் உயிர்நீத்தப் படைவீரர்களின் நினைவாக, போர்வீரர் நினைவுதினத்தை இரு நாடுகளிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் ‘அன்சாக்’ தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கலப்போலி தரையிறக்கங்கள் முதன்முதலில் 1916 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் எகிப்து துருப்புக்களால் நினைவுகூரப்பட்டன. அந்த ஆண்டில்தான் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ‘அன்சாக் தினம்’ என்று பெயரிடப்பட்டது. அப்போதிருந்து, ஏப்ரல் 25 அன்சாக் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
போர் முடிவின் பின்னர் இந்நாள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் பெருமளவில் தேசிய ஒருமைப்பாட்டு அலையை உருவாக்கியது. அத்துடன் கலப்போலி போர் நினைவிடங்கள் பலவும் அமைக்கப்பட்டன. வீரர்களுக்கான நினைவேந்தல்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன.
முதல் உலகப்போரில் அவுஸ்திரேலியா:
முதல் உலகப்போரின்போது, நேச நாட்டு படைகளுக்கு ஆதரவாக, மத்தியத்தரைக்கடல் பயணப்படையின் ஒரு அங்கமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போர்வீரர் படைக்குழாம் உருவாக்கப்பட்டது.
‘அன்சாக்’ படைக்குழாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், கூட்டுப்படைகளின் போர்க்கப்பல்கள் கருங்கடல் வழியே துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லை கைப்பற்ற ஏதுவாக கலப்போலி தீபகற்பத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகும்.
அவுஸ்திரேலிய நாட்டின் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் ஏராளமான அவுஸ்திரேலிய இளைஞர்கள் அன்று தங்களைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்வதில் முண்டியடித்து ஆர்வம் காட்டினார்கள் என வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது நாட்டு மக்களுக்காகப் போராடுவதற்காக அந்த இளைஞர்கள் காட்டிய கடமை உணர்ச்சியை விளக்குவதற்கு ஒரு வரலாற்றுச் சம்பவமே (child Soldier) குழந்தைப் போர்வீரனான (Alec Campbell) அலக் காம்ப்பெலின் வாழ்வாகும்.
குழந்தைப் போர்வீரனான அலக் காம்ப்பெல்:
அக்காலகட்டத்தில் அவுஸ்திரேலிய நாட்டிலிருந்து சுமார் 324,000 இளைஞர்கள் தம்மை இந்த போராட்டத்தோடு இணைத்துக் கொண்டார்கள். அவர்களில் 66,000க்கு மேற்பட்ட இளைஞர்கள் போரில் மடிந்து மாவீரர்களானார்கள் என்பதை யாரும் மறக்க முடியாது.
1915ம் ஆண்டில் அலக் காம்ப்பெல் (Alec Campbell) என்கின்ற அவுஸ்திரேலியச் சிறுவனுக்கு அப்போது பதினாறு வயதுதான் ஆகியிருந்தது. இராணுவத்தில்
சேர்வதென்றால் இருபத்தியொரு வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அதற்கும் இளையவராக இருந்தால் பதினெட்டு வயதிற்கும் இருபத்தியொரு வயதிற்கு உட்பட்டவர்கள் தமது பெற்றோரின் சம்மதத்துடன்தான் இராணுவத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்ற சட்டம் அப்போது அவுஸ்திரேலியாவில் இருந்தது.
ஆனால் அலக் காம்ப்பெலுக்கோ 16 வயதுதான் ஆகியிருந்தது.
தன்னுடைய வயது 18 ஆண்டுகள் 4 மாதங்கள் என்ற பச்சைப்பொய் ஒன்றைச் சொன்னார். தான் போர்ச் சண்டையில் இணைவதற்கும் பெற்றோர்கள் சம்மதித்து அளித்த கடிதத்தையும் இராணுவ அதிகாரிகளிடம் அவர் கையளித்து தன் தேசத்து மக்களுக்காக,ஒரு போர் வீரனாகத் தன்னை படையில் இணைத்துக் கொண்டார்.
குழந்தைப் போர்வீரரின் தியாகம்:
குழந்தைப் போர்வீரன் (child Soldier) என்று அழைக்கப்பட்ட திரு அலக் காம்ப்பெல் 2002ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இறந்தபோது அவருக்கு வயது 103. அச்செய்தியால் அவுஸ்திரேலியக் கண்டம் முழுவதும் அவுஸ்திரேலியத் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. சகல தொலைக்காட்சிகளும், செய்திப் பத்திரிகைகளும் தங்களுடைய மரியாதையை அந்தக் குழந்தைப் போர்வீரனுக்கு அர்ப்பணித்தன. பூரண அரசாங்க மரியாதைகயோடு அவருடைய இறுதி ஊர்வலத்தை நடாத்தியதன் மூலம் இத்தேசம் தனது நன்றிக் கடனைச் செலுத்தியது.
இன்றைய காலத்தில் ‘அன்சாக்’ தினம் கொண்டாடப்படுகின்ற வேளையில் அமரர் அலக் காம்பெலின் நாட்டுப்பற்றை அவுஸ்திரேலிய தேசம் மதித்துத் தலை வணங்குகின்றது. அந்தக் குழந்தைப் போர் வீரனைத் தனது தேசியச் சொத்தாக அவுஸ்திரேலிய தேசம் போற்றியதும் உண்மையே.
அந்தக் குழந்தைப் போர்வீரனின் அர்ப்பணிப்பை ஒரு தேசியத்தின் கடமையாக, நாட்டுப்பற்றாக, தியாகமாக, அவுஸ்திரேலிய நாடும் மக்களும் மதித்துப் போற்றுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
துருக்கி கலப்போலியில் கால் வைத்த 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாளான முதல் நாளே இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்ட துயரத்தை எடுத்தியம்பும்
ஏப்பிரல் மாதத்து 25ம் திகதியானது அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான தினமாகும்.
1914-1918 ஆண்டுக் காலப்பகுதிகளில் நடைபெற்ற போரில் கலந்து கொண்ட இந்நாடுகளின் போர்வீரர்களின் நினைவாக இந்த இரண்டு நாடுகளின் பெயர்களில் உள்ள முதல் எழுத்துக்களையும் இராணுவ அணியினைக் குறிக்கும் முதல் எழுத்துக்களையும் சேர்த்து ‘அன்சாக் தினம்’ என்று அவுஸ்திரேலிய-நியூஸிலாந்து மக்கள் தங்கள் தேசத்துப் போர் வீரர்களைக் கௌரவிக்கும் ஏப்ரல் 25 நாள் துயரத்தையும் தியாகத்தையும் வெளிப்படுத்துகிறது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா