“சொல்லித்தான் ஆகவேண்டும்” …. அரசியல் பத்தி தொடர்…. சொல்-01…. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
தற்போதைய தமிழர் தரப்பு அரசியலிலிருந்து ‘புலி நீக்கம்’ அவசியம்!
தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.
இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் உலாவரும் அனேகமான ஊடகங்கள் அவை அச்சு ஊடகங்களாயினும் சரி மின்னூடகங்களாயினும் சரி அவற்றில் கட்டுரைகள் எழுதும் அரசியல் ஆய்வாளர்-பத்தி எழுத்தாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் அநேகம் பேர் (சிலவேளை ஆசிரிய தலையங்கங்களில் கூட) முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்ற 2009 ஆம் ஆண்டு வரை இலங்கைத் தமிழர்களுடைய அரசியலில் எல்லாமே சரியாக நடந்து வந்தது போலவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல் குழம்பிப்போய்விட்டது போலவுமே கருத்துக்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்கள்.
அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோலோச்சிய காலத்தில் தமிழர் அரசியலில் எல்லாமே ஒழுங்காகவும் சரியாகவும் நடைபெற்றது போலவும் வழமையான சொல்லாடலான ‘புலிகளின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட பின்பு’ தமிழர் அரசியல் தலைகீழாக மாறிவிட்டது போலவுமே எழுதியும் வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசியவாதிகள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளும்கூட இப் போக்கிற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.
இத்தகைய தமிழ் ஊடகங்களிடமும்-அரசியல் ஆய்வு மற்றும் பத்தி எழுத்தாளர்களிடமும்-‘தமிழ்த் தேசியக் கட்சி’ களிடமும்-‘தமிழ்த் தேசியவாதி’களிடமும்-பத்திரிகாசிரியர்களிடமும்கூடப் பின்வரும் கேள்விகளைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்-சொல்லித்தான் ஆக வேண்டும்.
இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பெற்ற 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் சகோதர இயக்கங்களைத் தடைசெய்து அவற்றின் மீது நிகழ்த்திய தாக்குதல்கள்-மாற்றுச் சிந்தனையாளர்களையும் கருத்தாளர்களையும் போட்டுத் தள்ளியமை-அப்பாவிச் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைத் தாக்குதல்கள் என்பவற்றை ஒருபுறம் வைத்துவிட்டு 1987 க்கு பின்னர்
நடைபெற்ற விடயங்களை மட்டுமாவது சொல்லி ஆகவேண்டியுள்ளது. கேட்டுத்தான் ஆகவேண்டியுள்ளது கேள்விகள் இதோ.
* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த்தது அல்லது அனுசரித்துப் போகாமை சரியா?
* தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரச படைகளுடன் இணைந்து அவர்களுடைய ஆதரவுடன் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை ஆதரித்த சகோதரப் போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களைத் தேடித் தேடிப் போட்டுத் தள்ளியமை சரியா?
* தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் கூட்டு வைத்துக்கொண்டு, இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்யவென இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் மீது போர் தொடுத்தது சரியா?
* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் வாயிலாக அமைந்த வடகிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாகவேனும் இணைந்த மாகாண அரச நிர்வாகத்தை ஆயுத நடவடிக்கைகள் மூலம் சீர்குலைத்ததும் செயலிழக்கச் செய்ததும் சரியா?
*தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக விளங்கியவரும் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போவதில் உறுதியாகவிருந்தவருமான அ. அமிர்தலிங்கம் அவர்களைக் கொழும்பில் வைத்து 13.07.1989 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றது சரியா?
* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அமுல் செய்வதில் துணிவோடு செயற்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ பி ஆர் எல் எஃப்) செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபா அவர்களையும் அவருடன் இணைந்த ஏனைய பன்னிரண்டு தோழர்களையும் இந்திய மண்ணில்-சென்னையில் வைத்து 19.06.1990 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா?
* இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிதாமகரான இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய தமிழ்நாட்டு மண்ணில் வைத்துத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் 21.05.1991 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது சரியா?
இவ்வாறு நீலன் திருச்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோரின் படுகொலைகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மீதான கொலை முயற்சித் தாக்குதல் என்று பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய செயற்பாடுகளால் இலங்கைத் தமிழர்கள் அடைந்த நன்மைகள் என்ன?
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இவ்வாறான அரசியலற்ற ஆயுத நடவடிக்கைகள்தானே தமிழ் மக்களுக்கு இறுதியில் முள்ளிவாய்க்காலில் பேரழிவை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
இவற்றை நுணுகி ஆராய்ந்து பிழை எங்கே இருக்கிறது என்று அறிவு பூர்வமாகத் தேடும் உளவியலை இலங்கைத் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வளர்த்துக் கொள்ளாதவரை தமிழர்களுடைய அரசியல் மேலும் மேலும் பின்னோக்கியே செல்லும்; குழப்பமடைந்தே செல்லும். புலிசார் உளவியலிலிருந்து தலைவர்களும் விடுபட வேண்டும். மக்களும் வெளியேற வேண்டும். சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுவதென்றால் இலங்கைத் தமிழர்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படுவதும் அவசியமானதும் ‘புலி நீக்கம்’ செய்யப்பட்ட புதியதோர் அரசியல் கலாசாரம் ஆகும்.
புலி நீக்கம் செய்யப்பட்ட தமிழர்களுடைய அரசியலையே தென்னிலங்கையின் முற்போக்குச் சக்திகளும்-வடகிழக்கு மாகாணத்தின் இளைய தலைமுறையும்-இந்து சமுத்திரப் பிராந்திய வல்லரசான இந்தியாவும்-இலங்கைத் தமிழர்களின் மீது அனுதாபம் கொண்டுள்ள சர்வதேச சக்திகளும் ஆதரிக்கும். இவற்றின் ஆதரவு இல்லாமல் தமிழர் தரப்பு அரசியலை (தமிழ்த் தேசிய அரசியலை) முன் கொண்டு செல்ல முடியாது.
நீண்ட காலமாக 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளாலும் 2009க்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகவர்களாலும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழ்ச் சமூகம் இதிலிருந்து விடுபடுவது அல்லது அவர்களை விடுவிப்பது கஷ்டமான காரியம்தான். ஆனாலும், அதுதான் இன்றைய தேவைப்பாடாக உள்ளது என்பதே அறிவுபூர்வமான அரசியல் யதார்த்தம். இதனைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
1) மேலும், ‘புலி நீக்க’ அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரானதல்ல. எனவே ‘புலி நீக்க’ அரசியலென்பதைத் தமிழ்த் தேசிய நீக்க அரசியலென்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது
2) இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்ஜேவி செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களே தமிழர் தாயகம்-சுய
நிர்ணய உரிமை- ஈழத் தமிழர் இறைமை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கருத்தியலைக் கட்டமைத்தார்.
3) தந்தை செல்வாவினால் அறிமுகம் செய்யப்பட்டு அவரது தலைமையில் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியலானது, அடிப்படையில் யாழ்குடா நாட்டில் அதிகாரம் செலுத்திய மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களைப் பேணும் வர்க்க குணம்சத்தைத் தனது பலவீனங்களில் ஒன்றாகக் கொண்டிருந்த போதும்-தமிழ் மக்களுக்குக் குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார அரசியல் அடைவுகள் எதனையும் பெற்றுத்தராத ஏட்டுச் சுரக்காய் அரசியலாக இருந்த போதும் இலங்கை அரசாங்கங்களின் பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்க ஒடுக்கு முறைக்கு எதிர் வினையாற்றி இலங்கைத் தமிழர்கள் தமது சமூக பொருளாதார அரசியல் இருப்பைப் பேணிப் பாதுகாப்பதற்கும் தமது இன மொழி அடையாளங்களை இழக்காமல் இருப்பதற்கும் அது காலத்தின் தேவையாக மாறியது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
4) ஆனாலும், தந்தை செல்வா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியலினதும் அவரின் மரணத்தின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் அ. அமிர்தலிங்கம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கைகளினதும் அவற்றின் பக்க விளைவாகத் தமிழ் இளைஞர்களின் மத்தியிலே தோற்றம் பெற்ற அனைத்து ஆயுதப் போராளி இயக்கங்களும் இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்த இராணுவ அழுத்தங்களினதும் ஒட்டுமொத்த விளைவுதான் 1987 இந்திய சமாதான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களுடைய போராட்ட அரசியலுக்குக் (அதன் பலம் பலவீனங்களுக்கும் அப்பால்) கிடைத்ததோர் இராஜதந்திர வெற்றியாகும். 5) ஆனால், இந்த வெற்றியினால் விளைந்திருக்கக்கூடிய அனுகூலங்களைத் தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாதபடி அதனைப் போட்டுடைத்துச் சீரழித்தது பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே. தந்தை செல்வாவினால் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பலம் மற்றும் பலவீனங்களுடன் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியத்தைப் பிரபாகரன் ‘தமிழ்ப் பாசிச’ மாகப் பிறழ்வடையச் செய்தமைதான் இலங்கைத் தமிழினம் இதுவரை அடைந்த/அடைந்து கொண்டிருக்கும் பேரழிவுக்கும் பின்னடைவுகளுக்கும் காரணமாகும்.
6) இதிலிருந்து இலங்கைத் தமிழ்ச் சமூகம் விடுபட்டுச் சரியான அரசியல் செல்நெறியில் தடம் பதிக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய அரசியலில் கருத்தியல் ரீதியாகப் -கோட்பாட்டு ரீதியாகப் ‘புலி நீக்கம்’ அவசியமாகும். அப்போதுதான் தமிழர் அரசியலில் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.
“உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்” —– லெனின்