கட்டுரைகள்
ஐ.நாவும் சர்வதேசமும் தடுக்க தவறிய ருவாண்டா…. தமிழ் இனப்படுகொலை! …. நவீனன்.
ருவாண்டா இனப்படுகொலையை 1994இல் தடுக்கத்தவறியமைக்கு காரணம் அதனைப்பற்றி மேற்குலக நாடுகள் அறியாமல் இருந்தது என்பதல்ல, மாறாக மேற்குல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளே காரணமாகும். இந்நிலமையே 2009 இல் வன்னியில் தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலை அரங்கேறிய வேளையில் சர்வதேசம் மௌனம் காத்தது.
ருவாண்டா- தமிழ் இனப்படுகொலை:
உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச சக்திகளோ ருவாண்டா இனவழிப்பை நிறுத்தவில்லை. ருவாண்டா மக்களின் விடுதலை இயக்கமான ருவண்டா தேசிய முண்ணனியே(Rwandan Patriotic Front) அவ் இனவழிப்பை நிறுத்தியது என்பதே வரலாற்று உண்மையாகும்.
தமிழ் இனவழிப்பிற்கு சர்வதேச சக்திகள் பல உடந்தையாக இருந்தமையால், தமிழ் ஈழப் போராட்டம் மௌனித்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் தமிழினப் படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை, ருவாண்டா இனப்படுகொலையுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது.
1994இல் ருவாண்டா இனவழிப்பை தடுத்து நிறுத்தாதது போன்று தமிழ் இனவழிப்பையையும் தடுத்து நிறுத்தாமைக்குக் காரணம் தமிழினப் படுகொலையை அவர்கள் அறியாமல் இருந்தது என்பது அல்ல மாறாக அந் நாடுகளின் அரசியல் நிலைப்பாடே காரணம் ஆகும்.
அத்துடன் இலங்கை தனது தமிழ் இனவழிப்பிற்கு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் “ என முலாம் பூசியபோது சர்வதேச சக்திகள் இந்தப் பொய்யை ஏற்றுக் கொண்டதுடன், இலங்கையின் தமிழ் இனவழிப்பிற்கு ஆயுதங்களையும் வழங்கியது. சர்வதேச சக்திகளின் இந் நடவடிக்கை தமிழ் இனவழிப்பிற்கு அச் சக்திகளும் உடந்தையாக இருத்தன.
1994 ருவாண்டாவில் கோரம்:
1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதியிலிருந்து 1994ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி வரையில் 800,0000க்கும் மேற்பட்ட டூட்ஸி,( Tutsi) சிறுபான்மை இன மக்களை, ஹூட்டு (Hutu) பெரும்பான்மையினம் கொன்றொழித்திருந்தது என்பதை உலகறியும்.
ருவாண்டாவில் தற்போது எவருமே இனம் பற்றி பேச சட்ட ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இனம் பற்றி பேசினால் அது நிஜமான நல்லிணக்கம் உருவாவதற்கு தடையாகவே இருப்பதாக ருவாண்டா அரசாங்கம் வாதிடுகிறது.
நீண்ட கால வறுமையின் பிடியிலிருந்து ருவாண்டா நாடு வேகமாக வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் ருவாண்டாவின் பொருளாதாரம் சராசரியாக ஒன்பது வீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிகரான ஒரு வளர்ச்சி ஆகும்.
அத்துடன் 1994களில் இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீதான சட்ட நடவடிக்கை என்று எடுத்துக் கொண்டால், இருபது லட்சம் பேருக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றங்களிலும், கொலைவெறிக் கும்பல்களின் தலைவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் மீது அயல்நாடு தான்ஸானியாவிலும் வழக்கு விசாரணை நடந்துள்ளது.
முள்ளிவாய்க்கால் மானுடப் பேரவலம்:
ருவாண்டாவில் 1994இல் நிகழ்ந்த படுகொலைகளைப் போல 2009இல் முள்ளிவாய்க்காலில் பாரிய மானுடப் பேரவலம் நிகழ்ந்தது. முள்ளிவாய்க்கால் அதுவொரு காலப் பெருந்துயரம் என்றே வரலாற்றில் பதியப்படும்.
கொத்துக் கொத்தாய் கொன்றழிக்கப்பட்ட தமிழ் மக்களின் குருதி படிந்து சிவந்த நிலமே முள்ளிவாய்க்கால். பல ஆண்டுகளாக தம் இருப்புக்காய் இனத்தின் விடுதலைக்காய் போராடிய ஒரு இனக்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் கொத்துக் குண்டுகளுக்கும் எறிகணைகளுக்கும் இரையாக்கப்பட்ட 2009 மே 18 நாளாகும்.
முள்ளிவாய்க்கால் மண்ணும் மே 18ம் நாளில் ஈழத்தமிழர் வாழ்வில் இருந்து மறக்கவும் மன்னிக்கவும் முடியாத ஒன்றாய் இதனாலேயே தன்னை வரலாற்றில் நிலைநிறுத்திக் கொண்டது.
இன அழிப்பின் முப்பதாவது ஆண்டு :
கொடூரமான ருவாண்டா இனவழிப்பின் முப்பதாவது ஆண்டு நினைவு தற்போது அனுஷ்டிக்கப்படுகிறது. 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதியிலிருந்து 1994ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி வரையில் 800,0000க்கும் மேற்பட்ட டூட்ஸி,( Tutsi) இன மக்களை, ஹூட்டு (Hutu) பெரும்பான்மையினம் கொன்றொழித்திருந்தது.
ருவாண்டா இன அழிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், இவ் இன அழிப்பை சர்வதேச சமூகமானது குறிப்பாக பலம் வாய்ந்த சர்வதேச சக்திகள் கவனத்தில் எடுக்கவில்லை. மேலும், படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனவழிப்பென ஏற்றுக் கொள்ள சர்வதேச சக்திகள் மறுத்திருந்தன.
நீண்ட காலத்திற்கு பின்னரே ருவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனவழிப்பு நடவடிக்கைஎன ஐ.நா்குறிப்பிட்டிருந்த போதும் இந்நடவடிக்கைகள் இனவழிப்புக் குற்றத்தில் உள்ளடங்குபவை என கூறத் தயாராக இருக்கவில்லை.
பழங்குடியின ருவாண்டா:
ருவாண்டா 26 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட நாடாகும். இதன் மக்கள் பல்வேறு பழங்குடிக் குழுக்களைச் சார்ந்தவர்கள். ஆதியில் வந்தவர்கள் ‘ட்வா’ என்றும் , பின்னர் வந்தவர்கள் இன்று பெரும்பான்மை மக்கள் என அறியப்படும் ஹூட்டு பிரிவைச் சார்ந்தவர்கள்.
1700களில் எட்டு அரசுகளாக அங்கள உருவாகின. அதில் ஓர் அரசான டூட்ஸி நயிகின்யாவின் ஆட்சியில் தனிப் பெரும் அரசாக உருவெடுத்தது. அதன் முக்கிய மன்னனான கிகேலி ர்வாபுகிரி (Kigeli Rwabugiri) பல நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
டூட்ஸி மக்கள் சமூகத்தின் மேற்படியில் அமர்த்ப்பட்டனர். ஹூட்டுக்கள் டூட்ஸி குழுத் தலைவர்களுக்கு வேலை செய்தனர்.
அப்போதிருந்து டூட்ஸிக்களுக்கும், ஹூட்டுகளுக்கும், சமூகப் பொருளாதார, அரசதிகாரப் பிரிவினைகள் துவங்கின. அதன்பின் 1884 பெர்லின் மாநாட்டின் வழியாக, ருவாண்டா ஜெர்மனிக்கு அளிக்கப்பட்டது. ஜெர்மனி, உள்ளூர் அரசர் வழியாக ருவாண்டாவை ஆண்டுவந்தது.
ருவாண்டா பெல்ஜிய ஆதிக்கத்தில் :
முதலாம் உலகப் போருக்குப் பின், ருவாண்டா பெல்ஜியத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. ஜெர்மனியைப் போல் இல்லாமல், பெல்ஜியம் நேரடியான நிர்வாகத்தில் ஈடுபட்டது. ருவாண்டாவை நவீனப்படுத்தும் முயற்சிகள் துவங்கின. அதில் ஓர் அங்கமாக, நிலச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, நிலம் தனியார்மயம் ஆக்கப்பட்டது.
இந்தச் சீர்திருத்தத்தில், பொருளாதாரத்தின் மேற்படியில் இருந்த டூட்ஸிகள் பயனுற்றார்கள்.
ஹூட்டுக்கள் தம் நிலங்களை குறைந்த இழப்பீட்டுத் தொகைக்கு இழந்து, டூட்ஸிகளின் கீழ் நிலமற்ற வேளாண் கூலிகள் ஆனார்கள். பெல்ஜியம் செய்த சீர்திருத்தம்தான் ஒரு பேரழிவை அறிவியல் பூர்வமாகச் செய்ய உதவியாக இருந்தது. அதுவே
மக்களை ஹூட்டு, டூட்ஸி, ட்வா மற்றும் குடியேறிகள் எனப் பிரித்து அடையாள அட்டை கொடுத்தார்கள்.
மக்கள் பிறப்பின் அடிப்படையில் டூட்ஸி, ஹூட்டு, ட்வா எனப் பிரிக்கப்பட்டார்கள். அதற்கு முன்பு, ஒரு பணம் படைத்த ஹூட்டு, தன்னை டூட்ஸி என மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இதுபோன்ற வழிகள் அடையாள அட்டைக்குப் பின்பு நிரந்தரமாக அடைக்கப்பட்டன.
1962இல் சுதந்திரம்:
பின்னர், பெல்ஜியம் ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்க சபை ருவாண்டாவில் பிரபலமானது. இச்சபை, மெல்ல மெல்ல ஹூட்டுக்களின் தரப்பிற்காக பேசத் துவங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, ஹூட்டுக்களின் மேம்பாடு பற்றிய குரல்கள் வலுக்கத் துவங்கின.
1957இல், ஹூட்டு கோட்பாடு என்னும் முதல் ஆவணம் வெளியாயிற்று. இது புள்ளியியல் அடிப்படையில், அதிகாரம் டூட்ஸிகளிடம் இருந்து, ஹூட்டுகளுக்கு மாற வேண்டும் எனக் கோரியது.
1959இல் அடுத்த திருப்புமுனை. டொமினிக் ம்போனியுமுட்வா (Domnique Mbonyumutwa) என்னும் ஹூட்டு தலைவர், தலைநகர் கிகாலியில் தாக்கப்பட்டார். அவர் கொல்லப்பட்டார் என்ற தவறான தகவல் பரவ, ஹுட்டுக்கள், டூட்ஸிகளைக் கொல்லத் துவங்கினர்.
டூட்ஸிகளும் பதில் தாக்குதல்களைத் துவங்கினர். ருவாண்டப் புரட்சி என்னும் இந்தத் தகராறு துவங்கியது. இந்தக் காலகட்டத்தில், பெல்ஜியர்கள், பெரும்பான்மை ஹூட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்படத் துவங்கினர். 1960இல், டூட்ஸித் தலைவர்கள் மாற்றப்பட்டு, ஹூட்டுக்கள் அந்த இடங்களில் நிரப்பப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், பெருவாரியாக ஹூட்டுக்கள் வென்று ஆட்சியமைத்தனர். 1962இல் ருவாண்டா, ஹூட்டுக்களின் தலைமையில் சுதந்திரம் பெற்றது.
ருவாண்டா இனப்படுகொலை:
1959ல் ருவாண்டாவின் டூட்ஸி மன்னராட்சி முறையை ஒழித்துவிட்டு ஹூட்டூக்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர். டூட்ஸி இனத்தார் உகாண்டாவுக்கும் பிற அண்டை நாடுகளுக்கும் வெளியேறினர். அவர்கள் ஆர் பி எஃப் அதாவது ருவாண்டா தேசப்பற்று முன்னணி என்ற கிளர்ச்சிக் குழு ஒன்றை அமைத்து ருவாண்டாவுடன் சண்டையிட்டு வந்தனர்.
1990ல் அந்நாட்டின் மீது படையெடுத்தனர். 1993ல் ருவாண்டாவுக்கும் இவர்களுக்கிடையே சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டிருந்தது. 1994 ஏப்ரல் 6இல் ருவாண்டாவின் அதிபரான ஹூட்டூ இனத்தைச் சேர்ந்த ஹப்யாரிமனா சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹூட்டூ கடும்போக்காளர்கள், டூட்ஸி இனத்தாரை ஒட்டுமொத்தமாக அழித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டு கொலைவெறியாட்டத்தில் இறங்கினர்.
திட்டமிட்ட இன வெறியாட்டம்:
ருவாண்டா அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் யார் யார் என்று கவனமாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் எல்லாம் திட்டமிட்டு குடும்பத்தோடு கொன்று குவிக்கப்பட்டனர். டூட்ஸி இனத்தவரை அவரது அயல் வீட்டில் வாழ்ந்த ஹூட்டூ இனத்தவரே கொன்ற அவலமும், டூட்ஸி மனைவியை அவருடைய ஹூட்டூ கணவனே கொன்றது போன்ற கொடூரங்களும் அப்போது அரங்கேறின.
கொலைகளைத் தாண்டி டூட்ஸி இனப் பெண்கள் ஆயிரக்கணக்கானோர், பிடித்துச் செல்லப்பட்டு பாலியல் அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர். திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு கொலைகள் அரங்கேறின.
1994ஆம் ஆண்டு ஏப்ரல் காலகட்டத்தில் ருவாண்டாவில் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெரும்பான்மையாக டூட்ஸி இனத்தவர். கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையாக ஹூட்டு இனத்தவர் ஆவார்கள்.
ருவாண்டாவின் அப்போதைய சனத்தொகையில் 85% சதவீதம் பேர் ஹூட்டு இனத்தார் என்றாலும், அங்கு சிறுபான்மையாக வாழ்ந்துவந்த டூட்ஸி இனத்தாரின் கை வணிகத்திலும், பொருளாதாரத்திலும் மேலோங்கியிருந்தது என்பது உண்மையே.
ருவண்டா தேசிய முண்ணனி :
படுகொலையை இனவழிப்பென சர்வதேச சக்திகள் எற்க தயங்குவதற்கு காரணம் நடைபெற்றது இனப்படுகொலையென அங்கீகரித்தால் அதனைத் தடுக்க வேண்டிய சட்டக் கடப்பாடு இருப்பதே ஆகும். அந் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையின் தலைவராகவிருந்த கொபி அனான் (Kofi Annan) ருவாண்டா இனப்படுகொலையை தடுக்கத் தவறியமைக்கு காரணம் அதனைப்பற்றி மேற்குலக நாடுகள் அறியாமல் இருந்தது என்பதல்ல, மாறாக மேற்குல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளே காரணமாகும்.
ஐநா கொலைகளை தடுக்கவில்லை:
அந்த நேரத்தில் ஐநா அமைதிகாப்பு படைகளும் மற்றும் பெல்ஜியம் படைகளும் அவ்விடத்தில் இருந்தாலும், இந்த கொலைகளை தடுக்க வேண்டிய உத்தரவு அவர்களுக்கு சென்றிருக்கவில்லை.
ஹூட்டூ அரசாங்கத்துக்கு நெருக்கமாக இருந்த பிரஞ்சு அரசாங்கம் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைத்தாலும் அதுவும் கொலைகளைத் தடுக்க போதிய முயற்சி எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சும் கூட கொலைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாக ருவாண்டாவின் தற்போதைய அதிபர் குற்றம்சாட்டுகிறார். ஆனால் பிரான்ஸ் அரசு அதனை மறுக்கிறது.
பின்னர் டூட்ஸி இன கிளர்ட்ச்சிக் குழுவினர் வலுவாக அணிதிரண்டு ஹூட்டுக்களை ருவாண்டாவை விட்டு விரட்டி ஆட்சியைக் கைப்பற்றினர்.
இனக்கொலை வெறியாட்டம் முடிந்து அமைதி திரும்பிய பின்னர் ருவாண்டாவில் ஆர் பி எஃப் கிளர்ச்சிப் படையின் தலைவர் பால் கிகாமே அதிபராக வந்து, பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்றியுள்ளார்.
கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட தமிழர்:
2008 இன் இறுதிப் பகுதியிலும், 2009 ஆரம்பத்திலும், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரச படைத்துத்துறையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.
மேற்குலகின் உதவியுடன் அதி நவீன ஆயுதங்கள் இரக்கமே இல்லாது முள்ளிவாய்க்கால் மண் மீது வீசப்பட்டது. அண்டை நாடு முதல் ஐநா சபை வரை வேடிக்கை பார்த்து நிற்க பேரினவாத அரசின் கொடூர வன்செயலால் பிஞ்சுக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை குரல்வளை நசிக்கப்பட்டும் உயிரோடு புதைக்கப்பட்டும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் கொல்லப்பட்டிருந்தனர் .
தமிழீழ தனிநாடு விடுதலை கோரி 1956 இலிருந்து அகிம்சைப் போராட்டங்களிலும், பின்னர் 2009 வரை ஆயுதப்போராட்டத்தின் இறுதிக்கட்டம் முள்ளிவாய்க்காலில் பாரிய மனிதப் பேரழிவுடன் தமிழர்களின் ஈழப்போராட்டம் மௌனிக்கப்பட்டது.
இத்தனைக்கும் தமிழ் பேசும் மக்கள் கேட்டது அவர்கள் நிலம் அவர்களுக்கு வேண்டும் என்பதேயாகும். இதை ஏற்க மறுத்த பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களை மேற்குலகின் துணையோடு இரக்கமே இல்லாமல் முள்ளிவாய்க்காலில் அழித்தொழித்தது.
அன்றைய ருவாண்டா படுகொலையும், பின்னர் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கோரங்களுக்கும் சர்வதேசம் பொறுப்புக் கூற தவறியுள்ளது.