இலங்கை

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்

சித்திரவதை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை (Deshabandu Tennakoon) சந்தித்ததற்காக கனேடிய (Canada) பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றின் செய்தியின்படி, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பீல் பிராந்திய பொலிஸ் தலைவர் நிஷான் துரையப்பா (Nishan Duraiappah), டிசம்பர் 29, 2023இல் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் சீருடையுடன் இருந்ததை காட்டியுள்ளது.

புகைப்படங்களில் இருந்த சட்ட அமுலாக்க அதிகாரிகளில் ஒருவரான இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு, ஒரு நபரை “இரக்கமின்றி” தாக்கியதற்காக, இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கோரிக்கை நிராகரிப்பு

2023ஆம் ஆண்டு டிசம்பர் 14இல், திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை தென்னக்கோன் கைது செய்து கொடூரமாக தாக்கியுள்ளார் என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கனடாவின் பொலிஸ் அதிபர் ஒருவர், இலங்கையில் பல முறைகேடுகளுக்கு காரணமான அதே நிறுவனத்திடம் இருந்து மரியாதையை பெறுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மருத்துவர் துசியன் நந்தகுமார் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலுக்கான கோரிக்கையை துரையப்பா நிராகரித்துள்ளார். எனினும், பீல் பிராந்திய பொலிஸ் பேச்சாளர், துரையப்பாவின் இலங்கை பயணத்தை “தனிப்பட்டது என்றும் பீல் பிராந்திய பொலிஸ் துறைக்கும் இலங்கையில் உள்ள எந்தவொரு அமைப்புக்கும் இடையில் ஒத்துழைப்பும் இல்லை” என்று கூறியுள்ளார்

இருப்பினும், துரையப்பா தனது பீல் பொலிஸ் சீருடையை அணிந்து பலமுறை புகைப்படங்களில் காட்சியளித்துள்ளார்.

கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான ரதிகா சிற்சபேசன், ஒருவர் சீருடை அணிந்தால், “நீங்கள் தலைவராக உள்ள அமைப்பை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்” என்றே அர்த்தம் என்று கூறியுள்ளார்.

கூடுதல் சந்திப்புகள்

இது, ஒரு கனேடியனாக, பீல் பகுதியில் வளர்ந்தவள் என்ற முறையில் தனக்கும், பீலில் தொடர்ந்து வாழும் தமிழர்களாக அடையாளம் காணும் அனைத்து மக்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்பதே தமது கருத்து” என்று சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

துரையப்பா தனது குடும்ப விடுமுறைக்காக அவர் பிறந்த நாட்டிற்குச் சென்றிருந்தபோது, இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக பீல் பேச்சாளர் தெரிவித்துள்ளார். துரையப்பா தென்னகோனை நேரடியாகச் சந்தித்தாரா என்று கேட்டபோது, பேச்சாளர் அதனை உறுதிப்படுத்தவில்லை. அவர்கள் ஒன்றாக நிற்பதையும் விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிடும்போது துரையப்பாவின் பின்னால் தென்னக்கோன் நிற்பதையும் புகைப்படம் காட்டுகிறது.

புகைப்படம் எடுக்கப்பட்ட நிகழ்வு ஒரே கூட்டமா அல்லது துரையப்பாவும் தென்னகோனும் ஒன்றாக புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்திற்கு வெளியே சந்தித்தார்களா என்பது உட்பட ஏதேனும் கூடுதல் சந்திப்புகள் நடைபெற்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், அண்மைய தீர்ப்பு உட்பட தென்னகோன் பற்றிய தகவல்களை முன்கூட்டியே துரையப்பாவுக்கு, வழங்கியதாக கனேடிய பொலிஸ் தெரிவித்துள்ளது.

கனேடிய அரசாங்கம் இந்த விஜயத்தை ஏற்பாடு செய்யவில்லை, இது தனிப்பட்ட விஜயமாக கருதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பீல் பிராந்திய பொலிஸாருடன், ரோயல் கனேடிய பொலிஸின் நெருங்கிய பணி உறவைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கான அதன் இணைப்பு அதிகாரி துரையப்பாவுக்கு இலங்கையில் உள்ள பொலிஸ் அமைப்புகளை சந்திக்கும் ஏற்பாடுகளை வழங்க முன்வந்துள்ளார் என்று ரோயல் கனேடிய பொலிஸ் பேச்சாளர் ஊடகத்தின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.