இலங்கை

சிறிலங்கா வரலாற்றில் முதன்முறை : அதிபர் பதவிக்கு ஏழுபேர் வரிசையில்

அதிபர் தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்ள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

அதிபர் தேர்தலில் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க மற்றும் முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரன் இஷான் ஜயவர்தன ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்

இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் பதில் தலைவரும், நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சருமான கலாநிதி விஜயதாச ராஜபக்ச அண்மையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, எதிர்வரும் சில வாரங்களில் கோரிக்கை தொடர்பான தனது முடிவை அறிவிப்பதாக நேற்று தெரிவித்தார்.

பெரமுனவின் அதிபர் வேட்பாளர்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவிக்கையில், ​​அதிபர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் யார் என்பது கட்சியின் மே தினக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் காலங்களில் அதிபர் தேர்தலில் மேலும் பல வேட்பாளர்கள் இணையவுள்ளனர். அதிபர் தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.