“உரி பொருளும் அதன் உரை பொருளும்” …. பகுதி. 1…. சங்கர சுப்பிரமணியன்.
தன் நெஞ்சே தன்னைச்சுடும்”
என்ற குறளின் துணையோடு இக்கட்டுரையை தொடங்குகுறேன்.
வற்றாத நதிகளெல்லாம் கடலைத் தேடி ஆறுதலடையும். ஆனால் அந்த கடலே வற்றி விட்டால் எங்கு சென்று ஆறுதலடையும் என்ற திரைப்பட வசனத்தை பலர் கேட்டிருக்கலாம். அதை திரும்பவும் எண்ணிப்பார்த்தேன். அதோடு ஒன்றைப் பொருத்திப் பார்த்தேன். ஆனால் அந்த இடத்தில் நதிக்குப் பதிலாக தமிழரின் நிலையை வைத்து எண்ணிப்பார்த்தேன். வேதனையடைந்தேன்.
வேதனைக்குக் காரணத்தை சொல்கிறேன். மற்ற இனத்தவர்கள் நம்மை அவமதித்தால் நாம் ஏனைய தமிழரிடம் அதைச் சொல்லி வருந்தலாம். தமிழரே தமிழரை அவமதித்தால் அதை யாரிடம் சொல்லி வருந்துவது? நான் கதைக்கு உதவாதவைகளை கணக்க வாசிப்பதில்லை. சிறிது வாசித்தாலும் சிந்திக்க வைப்பதையும் கொஞ்சநேரம் பார்த்தாலும் மனதில் தைப்பதையும் வாசிக்கிறேன் பார்க்கிறேன்.
ஒரு அன்பரின் கூற்றிலிருந்து நான் கற்றறிந்த பாடம் நூறு நூல்கள் வாசித்த அனுபவத்தை ஒரு பயணம் கொடுத்து விடும் என்பதாகும். நான் பார்த்த ஒன்றிலிருந்த கருத்தை மட்டும் மட்டும் இக்கட்டுரைக்காக ஊறுகாய்போல் தொட்டுவிட்டு கட்டுரைக்குள் பயணிப்போம்.
நமக்கு ஆத்திகம் மற்றும் நாத்திகம் என்பதைப் பற்றி என்ன தெரியும்? கடவுளை ஏற்பவரை ஆத்திகர் என்றும் கடவுளை மறுப்பவரை நாத்திகர் என்றும் எண்ணிக்கொண்டு இருக்கிறோம். இதற்காக கடவுளை மையப்படுத்துகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஆத்திக நாத்திகம் போன்றவை வேதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.
வடமொழியில் அஸ்தி என்றால் ஆம் என்று பொருள். வேதத்தை ஆம் என்று ஏற்பவர்கள் ஆஸ்திகர்கள் என்பதால் ஆத்திகர்கள் என்றார்கள். நா அஸ்தி என்றால் இல்லை என்று பொருள். வேதத்தை இல்லை என்று ஏற்காதவர்கள் நாஸ்திகர்கள் என்பதால் நாத்திகர்கள் ஆனார்கள். எனவே இங்கு வேதம்தான் மையம். கடவுள் மையமே
இல்லை. புத்தரும் அருகரும் முறையே பௌத்தத்தையும் சமணத்தையும் தோற்றுவித்தனர்.
அம்மதங்களைப் பின்பற்றுபவர்களையும் நாத்திகர்களாகவே பார்க்கப்பட்டனர். ஏனென்றால் அம்மதங்களை தோற்றுவித்தவர்களையே கடவளாக வணங்கியதோடு வேதத்தையும் அவர்கள் ஏற்கவில்லை
வேதகைத்தை ஏற்கும் ஆத்திகர்களிலே ஆறு வகையினர் உண்டு. இந்த ஆறுவகையில் ஒரு வகை சாங்கியம். இந்த வகையினர் கடவுளை மறுக்கின்றனர். இருப்பினும் இவர்கள் ஆத்திகர்களாம். ஏனென்றால் இவர்கள் ஏதோ ஒருவகையில் வேதத்தை ஏற்கின்றனர். சரி, இந்த வேதத்தை மையப் படுத்தி பிரிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?
வேதத்தை புனிதப்படுத்தினார்கள். சடங்குகள் சம்பிரதாயங்கள் மூலம் புனிதத்தை அதிகப்படித்தினர். குழந்தை இல்லையா? புத்திரகாமேஷ்டி யாகம் செய். எதிரி அழிய வேண்டுமா சத்ருசம்ஹார யாகம்
செய் என்றார்கள். வேதம் புனிதப் படுத்தப்பட்டது. வேதம் எப்போது தோன்றியது? தெரியாது. அதை எழுதியவர் யார்? தெரியாது. ஆனால் அது முதலிலேயே இருக்கிறது. ஆசிரியர் இல்லாத நூல் புனிதமடைகிறது.
ஆனால் திருக்குறளை தமிழர் புனிதப் படுத்தவில்லை. அதை எழுதிய திருவள்ளுவரை அவர் இங்கேதான் மைலாப்பூரில் பிறந்தார். இல்லையா நாஞ்சில் நாட்டில் வள்ளுவ குலத்தில் பிறந்தார் என்று சாதாரணமாகவே பார்க்கப்பட்டார்.
அதுபோல் சிலர்,
“பொய்யகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த, வயங்கொலி நீர் – கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”
என்ற ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கண நூலான புறப்பா வெண்பா மாலையில் சொல்லப்பட்ட பாடல் வரிகளை எடுத்துக் கொண்டு அறிவியலோடு சம்பந்தப் படுத்தி தமிழையும் தமிழரையும் இழிவு படுத்துகிறார்கள்.
தமிழரை தமிழர் இழிவு செய்வதை விடவா வேற்றினத்தவர் இழிவு செய்துவிடப் போகிறார்கள். இனி யார் தமிழரை இழிவு செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
சீனர்கள், ஜப்பானியர்கள் இழிவு செய்கிறார்களா? ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் இழிவு செய்கிறார்களா? குறிப்பாக கனடாவில் இழிவு செய்கிறார்களா? தெரிந்தால் சொல்லுங்கள். கற்றுக்கொள்கிறேன். கற்றுத் தெளிவது தானே அறிவு.
இப்போது தமிழர் எவ்வாறு இழிவு படுத்தப் பட்டனர் என்று எனக்குட்பட்ட சிற்றறிவின் மூலம் தெரிந்தவற்றை சொல்கிறேன். ஏற்பதும் விடுவதும் உங்கள் விருப்பம். இந்தியாவில் வட இந்தியர்கள் தமிழர்களை இழிவு படுத்துவர். காரணம் தமிழர் வடமொழியான இந்தியை எதிர்ப்பவர்கள். தமிழ் மொழியை தமிழர் உயர்வாக எண்ணுவது குற்றமா?.
வட இந்தியாவிலும் மேற்கு வங்காளத்தவரோ அஸ்ஸாமியரோ வடகிழக்கில் மணிப்பூர், திருபுரா, அருணாச்சலப் பிரதேசத்தினரோ தமிழரை வெறுப்பதோ இழிவு படுத்துவதோ இல்லை. வடமேற்கில் பஞ்சாப்பினரும் தமிழரை இழிவு படுத்துவதில்லை.
மகராஷ்டிராவின் அரசியல் சிவசேனா கட்சியின் மூலம் தமிழரால் வேலை வாய்ப்பு குறைகிறதென்ற காரணத்தால் தமிழரை வெறுக்கத் தொடங்கினர். தென் இந்தியாவில் தமிழரை வெறுக்கவோ இழிவுபடுத்தவோ செய்தது எப்படி என்பதை பார்ப்போம்.
-சங்கர சுப்பிரமணியன்.