“தித்திக்கும் முத்தொள்ளாயிரம்”…. பாகம் 1….. செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.
பண்டைத்தமிழ் இலக்கியங்கள் என்றாலே படிப்பதிலும், படித்ததை எண்ணிக் களிப்பதிலும் ஏற்படும் சுவையே தனியானதுதான். அதிலும் இந்த முத்தொள்ளாயிரம் பாடல்கள் எல்லாமே முத்துக்கள்தான். அவை தரும் இன்பமும், சுவையும் வித்தியாசமானவை. எனவே “நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதுபோல, முத்தொள்ளாயிரத்தில் உள்ள பாடல்களில் சிலவற்றைத் தெரிவுசெய்து அவை தருகின்ற இலக்கிய நயத்தை, இன்பரசத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விருப்பத்தின் விளைவே இந்தக் கட்டுரைத் தொடர்!
முதலில் முத்தொள்ளாயிரம் என்ற நூலைப்பற்றிய தகவல்களைப் பார்க்கலாம். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கப்பட்டவை என்பது அறிஞர்களது கருத்தாகும். வடமொழிச் சொற்களின் கலப்பின்றி, தூய தமிழில் இந்தப் பாடல்கள் அமைந்திருப்பது அக்கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது. முத்தொள்ளாயிரம் என்றால் மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் என்பது பொருள். அதாவது தொள்ளாயிரம் தொள்ளாயிரமாக மூன்று தொள்ளாயிரம் சேர்ந்து மொத்தமாக இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்டதாக இந்நூல் ஆக்கப்பட்டிருக்கிறது.
சேரன், சோழன், பாண்டியன் என்னும் முடியுடை மூவேந்தர்களைப்பற்றி, ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரம் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்று இருந்திருக்கின்றன.
ஆனால், காலவெள்ளத்தில் அழிந்தவை போக இப்போது சேரனைப்பற்றிய 21 பாடல்களும், சோழனைப்பற்றிய 30 பாடல்களும், பாண்டியனைப்பற்றிய 59 பாடல்களுமாக மொத்தம் 110 பாடல்களே கிடைக்கப்பெறுகின்றன. இந்த 110 பாடல்களுமே இலக்கிய ஆர்வலர்களுக்கு வியத்தகு இன்பத்தைக் கொடுக்கின்றனவென்றால் 2700 பாடல்களும் எத்தகையனவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அவற்றின் இழப்பை எண்ணி நெஞ்சம் தவிக்கின்றது. இந்த நூலிலே இன்னும் ஒரு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இதில் அடங்கும் பாடல்களைப் பாடிய புலவர் யார் என்பது தெரியாமைதான். இந்நூலில் அடங்கியிருந்த பாடல்கள் முழுவதையும் ஒருவரே பாடினாரா அல்லது பல புலவர்கள் பாடினார்களா என்ற விபரங்களும் தெரியவில்லை.
காதலையும், வீரத்தையும் தம்வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் நமது பண்டைத்தமிழ் மக்கள். அவர்களின் வாழ்க்கையினைப் படம்பிடித்துக் காட்டுகிறது முத்தொள்ளாயிரம். சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் வீரத்தை, போர்த் திறனை, படைச்சிறப்பை, பொதுமக்கள் அவர்களின்மேல் வைத்திருந்த பாசத்தை எல்லாம் உன்னதமான உவமைகளோடு முத்தொள்ளாயிரத்தின் பாடல்கள் நம் கண்களின் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன.
காதல் வயப்பட்ட கன்னியரின் உள்ளத்து உணர்வுகளை, உணர்வுகளின் விளைவுகளை, அந்த விளைவுகளால் ஏற்படுகின்ற இன்பங்களை, இடையில் வரும் துன்பங்களை எல்லாம் தெள்ளத்தெளிவாக நம் சிந்தையிலே பதித்துவிடுகின்ற பாடல்கள் இலக்கியச்சுவையின் இமயத்தையே தொட்டு நிற்கின்றன.
அத்தகைய பாடல்களில் சிலவற்றின் சுவையினை இனி அனுபவிப்போம்.
காதல் என்பது ஓர் அன்புதமான உணர்ச்சி. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. காதல் இல்லாமல் உலகம் இல்லை. உலகில் உயிரினம் தோன்றியபோதே காதலும் தோன்றியது என்று சொல்வார்கள். காதல் உண்டானதால்தான் உயிரினமே தோன்றியது என்றுகூடச் சொல்லப்படுகிறது. அந்தக்காதலைப் பற்றிக் கோடானுகோடி இலக்கியங்கள் உள்ளன. தமிழ்மொழியில் காதலைக்கூறும் அகத்திணை இலக்கியங்களை அளவிடவே இயலாது. அவற்றின் சிறப்பை முழுமையாக எடுத்துரைக்க முடியாது. காதலைப் பாடாத கவிஞர்களே இல்லை. அண்மைக்காலங்களில் கவிதைகளாகவும், இசைப்பாடல்களாகவும், திரையிசைப் பாடல்களாகவும் பல்லாயிரம், பல்லாயிரம் பாடல்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. நம் செவிகளிலே விழுந்துகொண்டிருக்கின்றன. இசை இன்பத்தைச் சொரிந்து கொண்டிருக்கின்றன.
நமது ஊனோடும், உயிரோடும் கலந்தது காதல். உணர்வோடு மலர்வது காதல். அந்தக்காதலில் வீழ்ந்து வாழ்வை அனுபவித்தவர்களில் பலர் தம் காதல் வாழ்வின் பெறுபெறாகக் கிடைத்த தமது குழந்தைகள் காதலிப்பதை விரும்புவதில்லை. தமது பிள்ளைகள் பெரியவர்களாகி இளமைப் பருவத்தை அடையும்போது அவர்கள் காதலில் வீழ்ந்துவிடக்கூடாதே என்று நினைப்பது பொதுவாக எல்லாச் சமூகங்களிலும் இருக்கின்றது. எல்லாக் காலங்களிலம் நிகழ்கின்றது. பண்டைக்காலத்திலும் இந்த நிலை காணப்பட்டமைக்குப் பல்வேறு இலக்கியச் சான்றுகள் உள்ளன. முத்தொள்ளாயிரத்திலும் சில பாடல்கள் இந்த நிலைமையை எடுத்துக்காட்டுகின்றன.
பண்டைத் தமிழகத்தில் காதலுக்குத் தடை இருக்கவில்லை. ஆனால் ஒரு கட்டுப்பாடு இருந்திருக்கின்றது.
காதல் நோயும், கண்டிக்கும் தாயும்
சேர நாட்டை ஆளும் மன்னன் கோதை மிக நல்லவன். வீரத்தில் வல்லவன். பேரழகன். அவன் வீதியிலே பவனிவரும்போது அவனைக் காணவும், அவனது அழகை இரசிக்கவும், இளம் பெண்கள் தத்தம் வீடுகளிலேயிருந்து வெளியே வருவார்கள். அப்படி வருகின்ற சமயத்திலே, மன்னன்மீது தன் பிள்ளை காதல் கொண்டுவிட்டால், நிறைவேறாமல் போய்விடக்கூடிய அந்தக் காதலால் தன் மகளின் வாழ்வு பாழாகிப் போய்விடுமே என்ற அச்சத்தால் மன்னனைப் பார்க்கவிடாது தாய் தடுப்பாள். இது இளம்பெண்கள் இருக்கும் இல்லங்களில் சாதாரணமாக நடைபெறுவது வழக்கம். இதுபற்றி முத்தொள்ளாயிரத்தில் பல பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒரு பாடல் வருமாறு
” தாயர் அடைப்ப மகளிர் திறந்திட
தேயத் திரிந்த குடுமியவே – ஆய் மலர்
வண்டுலாஅம் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு” (பாடல்இல: 10)
இதன் கருத்து என்னவென்று பார்ப்போம். வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலைகளை அணிந்துகொண்டு சேரமன்னன் தேர்மீது அமர்ந்து தெருவிலே பவனி வருகின்றான். அவனைக் காணும் ஆர்வத்தில் இளம்பெண்கள் தங்கள் வீடுகளின் உள்ளேயிருந்து வெளிப்பட்டு வாசலுக்கு வர முயல்கிறார்கள். தம்பிள்ளைகள் மன்னனைக் கண்டால் மன்னன்மேல் காதல் கொண்டுவிடுவார்களே என்று கவலைப்பட்ட அவர்களின் தாய்மார், வெளிக்கதவைப் பூட்டிவிடுகின்றார்கள்.
தாய் கதவிற்குத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு அப்பால் சென்றதும், மகள் மீண்டும் கதவைத் திறக்க முற்படுகின்றாள். அதைக் கண்ட தாய் ஓடிவந்து மறுபடியும் கதவை நன்றாகப் பூட்டிவிடுகின்றாள். மகள் திரும்பவும் திறக்கின்றாள். தாய் பூட்டுகின்றாள். மகள் திறக்கின்றாள். இப்படியாக இளம் பெண்களும், அவர்களின் தாய்மாரும், கதவுகளைத் திறப்பதும், பூட்டுவதுமாக இருந்ததால் கதவின் பூட்டில் உள்ள குமிழ்கள் தேய்ந்து போகின்றன. இதுதான் பாடலின் பொருள்.
காலத்தால் பழையதாகி, பயன்பாட்டால் பழுதாகி கதவின் பூட்டுக் குமிழ்கள் தேய்வது வழமை. இங்கோ காதலால் குமிழ்கள் தேய்வதாகச் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு அருமை!
காதல் வயப்பட்ட கன்னி ஒருத்திக்கும் அவளது தாய்க்கும் நடக்கும் போராட்டத்தை இன்னும் ஒரு பாடல் மிகவும் சுவையாகச் சித்தரிக்கின்றது. அவள் ஓர் அழகிய மங்கை. இளமையும் அழகும் நிறந்தவனும் சிறந்த வீரனுமான சேரமன்னனிடம் அவள் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டாள். இந்த விடயத்தை அறிந்துகொண்ட அவளின் தாயோ மகளின் காதலை எதிர்க்கிறாள். மன்னனைத் தன் மகள் ஒருபோதும் பார்க்கக்கூடாது என்று, எப்போதும் அவளை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிடுகிறாள். ஆனால், இந்தக் காதல் விடயம் ஊர்முழுவதும் தெரியவருகிறது. அதை நன்கு அறிந்துகொண்ட மகள், எப்படியும் தன் காதலைப்பற்றி ஊர்மக்களில் யாராவது மன்னனிடம் எடுத்துரைப்பார்கள் என்று தனது தோழியிடம் சொல்லி நம்பிக்கையோடு இருக்கிறாள்.
” கடல்தானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை அடைக்குமேல்
ஆயிழையாய் என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான்” (பாடல்இல: 14)
“கடல் போன்ற மிகப்பெரிய படையினைக்கொண்ட மன்னனைப் பார்க்கவிடாமல் என்னைத் தடுத்து ஒரேயொரு வெளிக்கதவையும் மூடிவிடுகிறாள் எனது தாய். ஆனால், அழகிய நகைகளை அணிந்துள்ள என் தோழியே! அந்த மன்னன்மேல் நான் காதல் கொண்ட விடயம் ஊர்மக்கள் எல்லோருக்குமே தெரியும். அவர்கள் மன்னனிடம் சென்று என் காதலைப்பற்றிச் சொல்வார்கள். அதைத் தடுக்க அவளால் முடியுமா?” என்று தோழியிடம் கேட்பதுபோல இந்தப் பாடல் அமைந்துள்ளது. வீட்டுக்குள் என்னைப் பூட்டி வைத்து, வெளிக்கதவை அடைத்துவிடத்தான் முடியும். ஊர்வாயை அடைக்க உன்னால் முடியுமா? என்காதல் மன்னனிடம் சென்று சேர்வதைத் தடுக்க உன்னால் முடியுமா? என்று தாய்க்கு விடுக்கப்படுகின்ற கேள்விக் கணைதான் இது. இந்தக்கேள்வி அரசன்மேல் அவள் வைத்துள்ள காதலின் ஆழத்தை நன்கு உணர்த்துகின்றது.
(தொடரும்)