கட்டுரைகள்

​ ​ வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் சர்வதேச புத்தக நாள்! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பார் மார்ட்டின் லூதர்கிங். புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின், புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும் என்பார் எங்கள் பாரதிதாசன்)
சர்வதேச புத்தக நாளை கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் (Catalonia) உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சர்வதேச புத்தக நாள் (World Book Day ) என்பது வாசிப்பு, பதிப்பு, எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதற்கான தினமாகும். துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம் என்பார் மார்ட்டின் லூதர்கிங்.
ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்துவைத்துள்ளன. இதனாலேயே
உலகப் புகழ்பெற்ற ‘ டான் குவிக்சாட் ‘ நாவலை எழுதிய எழுத்தாளர் ‘மிகுவேல் டி செர்வண்டேஸ் ‘ அவர்களின் நினைவு தினம் உலகப் புத்தக தினமாக, ஏப்ரல் 23 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
உலக மகாகவி ‘வில்லியம் ஷேக்ஸ்பியர்’ மற்றும் ‘இன்கா கார்சிலாசோ டி லா வேகா ‘ ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் இந்நாள் விளாதிமீர் நொபோகோவ்ம் மொரிஸ் டிரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் உலக புத்தக நாளில், வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின், புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்பார் எங்கள் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். இதற்கு சான்று பகரும் வண்ணம் பிரான்சின் பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது.
அத்தீர்மானம் வருமாறு, “அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன. அவற்றுள்
நூலகச் சங்கங்கள் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு,
அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம்,
உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள் இணைந்து
1995 ஏப்ரல் 23 முதல் சர்வதேச புத்தகம் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம் இன்னோர் வகையில்
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.
உலகில் பாரிய அளவில் நூல்களை வெளியிடும் ரஷ்ய நாட்டுப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கின்றனர்.
நூல்களை அறிவுத் திறனுக்கு ஆற்றுகைப் படுத்தும் களஞ்சியமே நூலகமாகும். உலகின் மிகப் பழமையான முதல் நூலகம் சிரியாவிலுள்ள எப்லா (Ebla) என்ற நகரில்தான் இருந்திருக்கிறது. அங்கு குயூநிபாரம் எழுத்துக்களால் எழுதப்பட்ட சுமார் 20,000 சுட்ட களிமண் பலகைகள் உள்ளன. அவற்றின் வயது சுமார் கி.மு. 2250 ஆண்டுகள். அவை சுமேரிய எழுத்து வடிவத்தில் எப்லைட் மொழியில் (Eblaite language)செமிடிக் மற்றும் அக்காடியன் மொழியில் எழுதப்பட்டவை. இப்போது அவை சிரியாவின் அலெப்போ, டாமாஸ்கஸ், இட்லிப் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.