தொடர் சர்ச்சைகளில் மைத்திரி: இந்திய அதிகாரிகளை சந்திக்க மீண்டும் முயற்சி
அண்மையில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena), தாய்லாந்தில் உள்ள தமது நண்பரான இரத்தினக்கல் வர்த்தகர் முகமது அக்ரமின் அழைப்பிலேயே தாய்லாந்திற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்போது, மைத்ரிபால இலங்கையில் இல்லாத நேரத்தில், அவரின் உதவியாளர்கள் என தங்களை வர்ணித்துக் கொள்ளும் குறைந்தது இரண்டு பேர் முன்னாள் அதிபர் சார்பாக இந்திய இராஜதந்திரிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குறுஞ்செய்திகள் சந்திப்புக்களை நடத்துவதற்கும், அவற்றை நடத்துவது சாத்தியமா என்பதை உறுதி செய்வதற்குமானவை என்றும் அறியப்படுகிறது.
இந்திய தரப்பினரின் பதில்
எனினும் இந்த சந்திப்புகளுக்கு மைத்திரி ஒப்புதல் அளித்தாரா என்பது தொடர்பில் உடனடியாகத் தெரியவில்லை என ஆங்கில செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, அந்த குறுஞ்செய்திகளுக்கு இந்திய தரப்பின் பதில் என்னவென்பதையும் ஆங்கில செய்தித்தாள் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், முன்னதாக, உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களுக்கு பின்னணியின் இந்தியா செயற்பட்டதாக மைத்திரிபால இலங்கையின் குற்றப்புலனாய்வுத் துறையிடம் முறையிட்டுள்ளார் என்ற தகவல்களின் மத்தியிலேயே இந்த குறுஞ்செய்தி தகவலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.