கதைகள்

“பத்தியசோறு” ….. சிறுகதை – 63 …. அண்டனூர் சுரா.

“கடலம்மா, தாயி என்னை மன்னிச்சிடாத்தா..”

நீள்வரப்பில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துக் கிடந்தார் சுப்பையன். மனசாட்சி அவரை நையப் புடைத்தது.

“நான் என்ன செய்ய தாயீ. எனக்கு வேற வழித் தெரியல. எனக்கு கஞ்சி ஊத்துறது நீதான். நான் இல்லைனு சொல்லல. எனக்கு வேலைக் கொடுக்கிறது நீதான். அத நான் மறுக்கல. ஆனா, கேட்டதைக் கொடுத்த நீ கேட்காததையும் கொடுத்திருக்கீயே. இந்தச் சொறிசிரங்கு, பட்ட, பசி அடங்காத வசிறு, வறுமெ, இதெல்லாம் நா கேட்கல. நீனாகத்தான் கொடுத்தே. ஏன் கொடுத்தே? இதையெல்லாம் யாரு கேட்டா. நான் கேட்டேனா?”

‘பரட், பரட்….’என்று சொறிந்துக்கொள்கிறார் சுப்பையன். உடம்போடு சேர்ந்து மனசும் அரிக்கிறது. உடம்பைச் சொரிந்துக்கொள்ளலாம். மனசை?

“நான் என்ன தாயி செய்ய. உன்னத்தேடி நா வந்தப்ப எனக்கு வயசு பத்துக்கூட ஆகல. அதிலிருந்து உழக்கிறேன். அச்சில் கட்டிய மாட்டைப் போல உன்னையே சுத்திச் சுத்தி வாறேன். எனக்கு வீடு, வாச, சொந்தம், பந்தம், சொத்து, சுகம் எல்லாம் நீதான். எனக்கு நீ எல்லாம் கொடுத்தே. நா இல்லேனு சொல்லல. இந்த முடியாத வயசுல வைத்தியம் பாத்துக்கிற காப்பீடு கொடுத்தீயா? ஒழைச்சி, ஒழைச்சி ஓடாப்போயிருக்கேனே. உட்கார்ந்து சாப்பிட பென்சன் கொடுத்தீயா? அதான், இந்த முடிவுக்கு இறங்கிட்டேன். என்னை மன்னிச்சிடு தாயீ.”

‘சிப்…சிப்…’ என்று தெரித்தது தேகம். எறும்பு கடிப்பதைப் போல காலும் கையும் அரிப்பெடுத்தது.

“பரட், பரட், பரட்…”

பட்டைப் பட்டையாக உரிந்தது தோல். உப்புப் பூத்த உடம்பு வெள்ளையாக உரிந்து சிவப்புத் தோல் தெரிந்தது. அதில் இரத்தமும் ஊநீரும் கசிந்தது. “அரிவா வச்சிருக்கிற கையும் சொறிசிரங்கு கையும் சும்மா இருக்காதாம். சரிதான்!”

சொறிகிறப்ப இருக்கிற சுகம் கையை எடுக்கிறப்ப இல்லை. தீச்சட்டி தகிப்பதைப் போல தகித்தது உடம்பு. சொறிந்த இடத்தில் வேப்பம் பட்டையைப் போல தெரிந்தது வடு. உடம்பு எரிச்சல் கொடுத்தது. புண்ணில் ஈ உட்காருகிறது. சொறிஞ்சிக்கிறவும் வேணும். ஈயை விரட்டவும் வேணும். ‘அடச்சீ…’ என்று வந்தது.

“ யாரப்பா அங்கே, சுப்பனா?”

முதலாளியின் கர்ஜனை செவியை எட்டியது. மனதி்ற்குள் திக்,திக் என்றது. “ஆத்தா, கடலம்மா. நான் வேல முடிச்சி வீட்டுக்குக் கிளம்புறப்ப திருடப் போறேன். நீதான் எனக்குத் துணைக்கு வரணும்…” கடலைப் பார்த்து கும்பிடுகிறார் சுப்பையன்.

“ சுப்பா, என்ன பண்றே….?’’

“ கடலாத்தாவ கும்பிடுறேங்ய்யா..”

“ இவ்ளோ நேரமாவா கும்பிடுறே?”

“அம்புட்டேதான், இதோ வந்துட்டே..” சட்டை, வேட்டியை அவிழ்த்து ஒரு வரப்பு மேல் சுற்றிவைத்துவிட்டு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு ஓடுகிறார் சுப்பையன்.

காலை வெயில். மண்டையைக் குடையுது. “கடவுளே, நீ இருந்தாக் கேளு.” கோயில் வாசலில் மண்ணை வாறி இறைப்பதைப் போல வாறி இறைக்குது காற்று. எங்கும் ‘கொய்ங்’ சத்தம். கடலலை இரைச்சலை விடவும் காற்றின் உக்கிரமம் காதைக் குடைகிறது.

தலையில் பெரிய முண்டாசு. உடம்பில் சட்டை இல்லை. நாலு முழம் வேட்டி. அதை இரண்டாக மடித்து இடுப்பில் கட்டியிருக்கார். வயிறு குழி விழுந்துப்போய் இருக்கிறது. கண்ணிமை மயிரெல்லாம் படிக உப்பு.

நீர் இறைக்கும் இயந்திரத்தில் டீசலை ஊற்றுகிறார் சுப்பையா. சாவியைக் கொடுத்து இயக்குகிறார். ‘தட,தட,தட…’ என இயந்திர இரைச்சல். திகு, திகு, திகுவெனத் தலைக் குப்புறப் பாயுது தண்ணீர். கரையைத் தொட்டு ஓடிஒழிகிற கடலலை வாயைப் பொத்திக்கொண்டு வாத்துக் குஞ்சுகளைப் போல வாய்க்காலில் ஓடுகிறது.

“அம்மா ஊட்டாத சோத்த ஊறுகாய் ஊட்டும். மேட்டுக்குத் தண்ணீய மேக்காத்து பாய்ச்சுமெனச் சொல்வாங்க. சரித்தான்” அடிக்கிற மேக்காற்றில் தண்ணீர் தலைகீழாகப் பாய்கிறது. மனித வாழ்க்கையைப் போலதான் இந்தக் கடலும். கண்ணீரும் வியர்வையும் கலந்த ஆழம் தெரியாத புதிர்.

வங்கக்கடல். அதையொட்டி நூறு ஏக்கர் நிலம். வெள்ளைப் பூத்த உப்பளம். அதில் பெரிசும் சிறிசுமாக எண்ணூறு பாத்திகள். பாத்தியெங்கும் மனிதத் தலைகள். அவ்வளவு பேரும் ஒப்பந்தக் கூலிகள். முக்காடு அணிந்தப் பெண்கள், முண்டாசுக் கட்டிய ஆண்கள், தொப்பி வைத்த இளைஞர்கள், ஜீன்ஸ் உடுத்திய பாலர்கள்….என உயர்திணைகள் செறிந்து நிற்கிற பூமி அது.

“இது அயோடின் உப்பு, இது குளோரின். இது செறிவூட்டியது. அது தொழிற்சாலைக்கு. அது கப்பலுக்கு. அது வெளிநாடு போக வேண்டியது.” என்று தரம் பிரித்துக்கொண்டிருந்தார்கள் நளின உடையில் பட்டதாரிகள்.

“ அடேய், அடுத்தப் பாத்திக்கு தண்ணியைத் திருப்பி விடுடோய்”

“ஏய், ஏய். அங்கேப் பாரப்பா தண்ணீர் உடைப்பெடுக்குது”

“ யாரம்மா நீ. வேலைக்குப் புதுசா. பொண்ணு நடை போடுற. வெரசா வாம்மா”

“ உப்பு பாத்தியில கோட்டப் போடு”

“ மம்பட்டியால உப்ப ஒன்னுச் சேரு”

“கூடையைத் தலையில் தூக்கி விடு”

“ உப்பை அம்பாரத்திலே கொட்டு”

“ லாரியில் ஏற்று”

“காய வை…” இப்படியாக சத்திமிட்டு வேலை வாங்கும், வேலை செய்யும் படிக்காத கைநாட்டுப் பேர்வழிகள்.

“ ஏய், சுப்பா..”

“ இதோ, வந்துட்டேன்ங்கய்யா”

“ சும்மாச் சும்மா காலையும் கையையும் சொறிஞ்சிக்கிட்டிருக்காம ஓடியாடி வேலயப் பாரு”

“ சரிங்கய்யா…..”

சுப்பையனின் முதுகு உடைந்த பாதி வளையலாகக் கூன் விழுந்துப் போயிருக்கிறது. முதுகெலும்புனு ஒன்னு இருக்கா இல்லையா…என்று தெரியவில்லை. காலையும் கையையும் உதறிக்கொள்கிறார். தலையைச் சிலுப்பிக்கொள்கிறார். வெட்,வெட்..என்று நடக்கிறார். என்ன செய்ய? மனதில் இருக்கும் தெம்பு கைகால்களில் இல்லை. கால்கள் இரண்டும் கோழி கால்களைப் போல சூம்பிப் போயிருக்கிறது. ஐம்பது வருசம் உப்பளத்தில் ஓடியக் கால்கள் அல்லவா அது! பாத்திகளுக்கு தண்ணீர் பாய்ச்ச, கோடுக் கிழிக்க, உப்பை வாற, காய வைக்க, ஒன்னுச் சேர்க்க, அள்ளி விட, சுமக்க, அம்பாரத்தில் சேர்க்க, தரம் பிரிக்க, அளக்க, லாரியில் ஏற்ற,.. எத்தனையோ வேலைகளைப் பார்த்த உடம்பு அல்லவா அது.

ஓடியதுப் போதும் நிற்கிறேன் என்கிறது கால். ஊகூம்.., இன்னும் கொஞ்சம் ஓடுமய்யா என்கிறது காலம். காலா, காலமா? வென்றது என்னவோ காலம்தான்!

“சுப்பா, இனி நீ வேலைக்கு வர வேணாம்..” முதலாளி எப்பொழுதோ சீட்டைக் கிழித்துவிட்டார். என்ன செய்வார் சுப்பையன். பாவம்! வயிறென்று ஒன்று இருக்கிறதே!

“ஏனுங்க அய்யா?”

“ போதும். வேற வேல இருந்தாப் பாரு”

உயிர் அறுவதைப் போலிருந்தது சுப்பையனுக்கு. கூனிக் குறுகி குந்திப் போனார். என்ன வேலை பார்ப்பதாம்? இதை விட்டால் அவருக்கு என்ன வேலை தெரியுமாம்?

“அய்யா, இப்படிச் சொன்னா எப்படிங்க. இத்தனை காலம் இந்த கடலாத்தாவும் நீங்களும் தானே வேலை கொடுத்தீங்க. சோறுப் போட்டீங்க. இப்ப வேண்டானு சொல்லிட்டா நான் எங்கேங்கே போவேன்”

“ முன்னே மாதிரி நீ வேல பார்க்க மாட்டேங்கிறீயேய்யா”

“ பார்க்கிறேன் சாமி. பார்க்கிறேன்..”

முதலாளி மறுபடியும் வேலைக்கு வரவேண்டாம் எனச் சொல்லிவிடுவாரோ. சம்பளத்தில் கை வைத்துவிடுவாரோ. நாலு பேர் பார்க்கத் திட்டிவிடுவாரோ? சுப்பையனின் மனதிற்குள் தீப்பிடிக்கிறது.

பழைய சுறுசுறுப்பை நரம்பில் ஏற்றுகிறார். கால் கைகளை உதறிக்கிறார். வெட்,வெட் என்று நடக்கிறார். வாய்க்கால் தண்ணீரை ஒவ்வொரு பாத்தியாகத் திருப்பி விடுகிறார். தண்ணீர் உடைப்பு எடுக்கிறது. தேடிப்பிடித்து அடைக்கிறார். நிற்க நேரமில்லை. அவர் வாயில் நுரைத் தள்ளுகிறது. கீச், மூச் வாங்குகிறது. ஒரு நாழி நிற்கலாம். முதலாளி பார்க்கிறாரே. விரல் இடுக்கில் அரிப்பு எடுக்கிறது. கணுக்கால்களுக்கு மேல் சிப், சிப்…என்கிறது. உப்பு, உப்புப் பூத்தக் கால்களைத் தின்னுகிறது. குனிந்து நிமிர்ந்து சொறிகிறார். உடல் அரிப்பு நின்றாலும் மனஅரிப்பு நிற்பதாக இல்லை. காலையில் மனைவி நடத்திய வாழ்க்கைப் பாடம் கண்முன்னே நின்றது. இதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார்.

இம்னி இம்னியாக விடிந்தது வானம். இனிக்கினூன்டு இருட்டு மட்டும்தான் பகலைப் போர்த்தியிருந்தது. ஒரு சேவல் கும்மி அடித்துக்கொண்டு ‘கொக்கரைக்கோ……’ என்று கூவியதும் மிச்சச்சொச்சப் பொழுதும் தீட்டிய உளுந்தைப் போல பளிச்சென்று விடிந்தது.

“ஏ புள்ள, நீராகரம் கொண்டா?”

வாசலைக் கூட்டிப் பெருக்கிக்கொண்டிருந்தாள் பாப்பாத்தாள். தூர்வையை அதே இடத்தில் போட்டவள் ‘வெட்,வெட்’ என்று வீட்டுக்குள் ஓடினாள். ஒரு கை சொம்பு. சுப்பையன் தோளில் மண்வெட்டி இருந்தது. அதைக் கீழே வைத்துவிட்டு மனைவி நீட்டிய சொம்பை வாங்கி நீராகரத்தைக் கலக்கினார். சொம்பைத் தலைக்குமேல் தூக்கி அன்னாத்தினார். வாய்க்குள் நுழைந்த நீராகரம் தொண்டைக் குழியைத் தாண்டுவேனா என்றது.

“ என்ன புள்ள உப்பு போட மறந்திட்டீயா?”

கைகளைப் பிசைந்தாள் பாப்பாத்தாள். “உப்பு இல்லேங்க”

இச், கொட்டிக்கொண்டார் சுப்பையன். நீராகரம் அவருடைய நாசி வழியே புரை ஏறியது. கூடவே கோபமும்.

“உப்பு இல்லன்னா பக்கத்து வீட்ல ஒரு தம்ளர் வாங்கிக்க வேண்டியதுதானே?” “உப்பளத்தில வேலப் பார்த்துக்கிட்டு உப்ப யாராவது இரவல் வாங்குவாங்களா? கேட்டாலும் கொடுப்பாங்களா?”

நீராகரத்தில் போடாத உப்பை வார்த்தையில் போட்டாள் பாப்பாத்தாள்.

“நான்தான் நேத்தைக்கே உப்பு வாங்கிக்கிட்டு வரச்சொன்னேனே?”

“காசு இல்லயே. வாரச் சம்பளம் போட இன்னும் நாளிருக்கே”

“உப்பளத்திலதானே வேலை பார்க்குறீக. ஒரு பொட்டலம் உப்ப எடுத்துக்கிட்டு வரலாம்ல?”

சுப்பையன் முகத்தில் ‘சுருக்’ என்று தையல் விழுந்தது.

“என்னடி, திருடச் சொல்றீயா?”

“பெரிய அரிச்சந்திரனு நெனப்பாக்கும். டீவியில தினமும் பார்க்குறீங்கதானே. மதுரயில கிரானைட் கல்லாம். திருடி,வெட்டி வித்து கோடீஸ்வரனாகுறான்களாம். தெக்கே தாமிரபரணினு ஒரு ஆறாம். அந்தத் தண்ணிய உறிஞ்சி அடைச்சி நம்மக்கிட்டேயே விற்கிறான்களாம். அதுமட்டுமா. காத்தத் திருடி டீவி நடத்துறான்க. சொத்து மேல சொத்துச் சேர்த்து வெளிநாட்டுல பதுக்குறான்க. நாட்டுல எதை விட்டு வச்சிருக்காங்க. இம், இந்தக் கடலு ஒன்னுதான் பாக்கி. அதுவும் முழிச்சிக்கிட்டு இருக்கிறதனாலே இருக்கு. இல்லே, அதையும் பட்டாப்போட்டு சிட்டா எடுத்திருப்பான்க. அவனவன் ஏய்ச்சியே பிழைக்கிறான். நீ மட்டும் ஏன்ய்யா இந்தக் காலத்திலயேயும் பிழைக்கத் தெரியாத மனுசனா இருக்கே.?”

“ தப்புப் புள்ள”

“ எதுய்யா தப்பு. தேனெடுக்கிறவன் விரல் சூப்புறதா?”

“ கடலாத்தா மன்னிக்க மாட்டாடி”

“ ஆமா, மன்னிக்க மாட்டா. உங்கள நான் பாலுக்குச் சீனித்திருடச் சொல்லல. கூழுக்கு உப்புத் திருடச் சொல்றேன்”

“ மனசாட்சி இடங்கொடுக்காதடி”

“ பரட், பரட்…டென ராவெல்லாம் சொறிஞ்சிக்கிறீக. வைத்தியருக்கிட்டப்போயி ரெண்டு ஊசி போட்டுக்கிட்டு வரலாம். கையிலதான் காசு இல்லயே. பத்து பாக்கெட் உப்ப தெரியாம எடுத்துக்கிட்டு வாய்யானு சொன்னா மனசாட்சி குத்துது, குடையுதுனு சொல்லுறீங்க. சரி விடுங்க. ஒரு பிடி உப்ப அள்ளி துண்டுல முடிஞ்சிக்கிட்டு வரலாம்ல. நீராகரத்துக்கு ஆகும்ல…”

ஓர் அசைவுமில்லாமல் கிளை ஒடிந்த மரம் போல நின்றுக்கொண்டிருந்தார் சுப்பையன். அவருக்குள் சுனாமி எழுந்து அடங்கியது. கொஞ்சநேரம் நின்றுக்கொண்டிருந்தவர் மெல்ல ஆமை நழுவுவதைப் போல நழுவினார்.

“ ஒன்னத்தான்யா”

“ என்ன புள்ள?”’

“ இன்னைக்காவது ஒரு கை உப்ப அள்ளி இடுப்புத் துணில முடிஞ்சிக்கிட்டு வாய்யா”

சுப்பையன் ஒரு பதிலும் சொல்லாமல் மண்வெட்டியை எடுத்து தோளில் வைத்துக்கொண்டு உப்பளம் நோக்கி நடைக்கட்டினார்.

மேற்கு வானம் சிவந்து வந்தது. வீட்டுக்குக் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டிருந்தது. கொக்குகளும் காகங்களும் ‘கொய்யோ, மொய்யோ’ என்று கத்திக்கொண்டு அதனதன் கூடுகளுக்குப் பறந்துகொண்டிருந்தன.

சுப்பையன் மனதிற்குள் ‘திக்…திக்.’ என்றிருந்தார். உடம்பு ‘குப்’பென்று வியர்த்தது. வியர்வை உப்பும் கடல் உப்பும் சேர்ந்து உடம்பை நமைச்சது. துண்டை உதறி குறுக்குவாக்கில் கொடுத்து முதுகைத் துடைத்துக்கொண்டார். வரப்பில் சுருட்டி வைத்திருந்த வேட்டியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு சட்டையை உடுத்திக்கொண்டார். வழக்கம் போல கீழப்பக்கம் திரும்பி கடல் தாயைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

ஒரு பக்கம் மனசாட்சி. இன்னொரு பக்கம் மனைமாட்சி. இரண்டிற்குமிடையில் அவர் நி்ன்றுக்கொண்டிருந்தார். மனைவி பக்கமாக தராசு இறங்கியது.

“கடலாத்தா, எனக்குத் தைரியம் கொடு தாயீ..”

“வேண்டாம், வேண்டாம்….” என்கிறது மனம்.

“வேணும், வேணும்….” என்கிறாள் மனைவி.

நாலாபுறமும் திரும்பிப் பார்க்கிறார். கூலி ஆட்கள் வீட்டை நோக்கி நடைகட்டிக்கொண்ருந்தார்கள். ஆளரவமற்று இருந்தது உப்பளம். கண்களை மூடிக்கொண்டு தன்னை ஒரு கணம் மனதிற்குள் நிறுத்திப் பார்த்தார். அவரைச் சுற்றிலும் லட்சம் பேர் நிற்பதைப் போலிருந்தது.

பூனை நடையி்ல் கூடாரத்திற்குள் போக வேணும். எதோ ஒரு வகை உப்பை வாறி அள்ளவேணும். அதை வேட்டிக்குள் மறைத்துக்கொண்டு அலுங்காமல் குலுங்காமல் நடக்க வேணும்.

யாரும் பார்த்துவிட்டால்? வேணாம், வேணாம் என்கிறது மனது. வேணும், வேணும் என்கிறது வயிறு. கள்ள நடையில் நடக்கலானார்.

சுப்பையன் வீட்டிற்குள் நுழையும் பொழுது ஊர் ஒடுங்கியிருந்தது. பாப்பாத்தாள் புருசன் வரும் வழியைப் பார்த்தவளாய் குந்தியிருந்தாள்.

“இவ்ளோ நேரம் என்ன பண்ணுனீங்க? நான் என்னாச்சோ ஏதாச்சோனு பயந்திட்டேன். மத்தியானம் சாப்பிட்டீங்களோ இல்லயோ. கைகால அழம்பிட்டு வாங்க. சாப்பிடலாம்…”

சுப்பையனுக்குள் மனத் திருப்தி. வந்ததும் வராததும் உப்பு எங்கே என்று கேட்காமல் சாப்பிட அழைத்ததை நினைத்து மனதிற்குள் பூரித்தார்.

ரெட்டினக்கால் போட்டு உட்கார்ந்தார். அவர் முன்னே தட்டில் சோறு இருந்தது. குண்டானிலிருந்த குழம்பை ஒரு கலக்குக் கலக்கி சோற்றில் ஊற்றினாள். பசியில் வாய் ஆ..வென்று திறந்தது. வயிறு பிசைவதைப் போல சோற்றைப் பிசைந்தார்.

“நீ சாப்பிட்டியா புள்ள?”

“இம், சாப்பிடுறேன்க. நீங்க சாப்பிடுங்க…”

கையிலிருந்த சோற்றை வாய்க்குள் திணித்தார். சோறு உள்ளுக்குள் இறங்குவேனே என்றது. சோற்றை வாயிலிருந்து கைக்கு கக்கினார்.

“ என்ன புள்ள, உப்பு போடலையா?”

“ நீங்க உப்பு கொண்டு வரலைங்களே..”

பேந்தா முழி முழித்தார் சுப்பையன். விரக்தியும் கோபமும் அவருடைய நாசியை முட்டின.

“ ஆள்நடமாட்டம் இருந்துச்சோ?”

“ இல்ல புள்ள..”

“ பின்னே, ஒருபிடி உப்ப அள்ளி முடிஞ்சிக்கிட்டு வரவேண்டியதுதானே?”

“ மனசாட்சி இடங்கொடுக்கலடி.”

அவளுடைய கண்களில் கக்கண்டு போல கண்ணீர் பூத்தது. கணவனைப் பார்த்தவளாய் இருந்தாள்.

“இந்த ராத்திரியில உப்புக்கு நான் எங்கேங்க போவேன். கண்ண மூடிக்கிட்டு சோத்த மென்னு முழுங்கிடுய்யா”

“உமட்டுதே புள்ள”

“என்னய்யா இப்படிச் சொல்றே. சொறிக்கும் அரிப்புக்கும் உப்பு சேர்க்காம சாப்பிடுறது நல்லதுய்யா. கண்ண மூடிக்கிட்டு விழுங்கிடுய்யா.”

“முடியாது புள்ள”

“பசிய வசிறு பொறுத்தாலும் வயசு பொறுக்காதுய்யா. நானா ஊட்டி விடட்டா. இந்தாய்யா..” பாப்பாத்தாள் சாதத்தைப் பிசைந்து வாய் அருகே கொண்டுபோனாள். அவரது கண்கள் கலங்கி ஒரு துளி உப்பு சோற்றில் விழுந்தது. ‘ஆ….’ என்று வாயைப் பிளந்தார் சுப்பையன்.

“ சாப்பிடுய்யா, சாப்பிடு. இன்னும் கொஞ்சம் வாங்கிக்கோய்யா…”

Loading

3 Comments

  1. பத்தியச் சோறு
    சத்தியச் சோறு.

    உயிரே போனாலும் உணர்வே போனாலும் திருடக்கூடாது என்பதை வலியுறுத்திய கதை. மணல் திருடர்களும் காற்றுத் திருடர்களும் உப்புத் திருடர்களும் உழைப்புத் திருடர்களும் உப்புக் கெட்டவர்கள் துப்புக் கெட்டவர்கள். கஞ்சிக்கு உப்பு இல்லை என்றாலும் வஞ்சிக்கப்பட்ட உழைப்பாளிகள் உண்மை நிலை மாறாதவர்கள்.
    ” பசி குடலைப் பிசைவது போல தட்டில் உள்ள சோற்றை பிசைந்தார்”./ “நெற்றியில் இருந்து ஒரு துளி வியர்வையில் உப்பு விழுந்தது” என்ன நயம். –? அடடா… என்ன சொல்லாடல்? இது கதை அல்ல வாழ்க்கை . எந்தக் கடலிலும் நீந்தி விளையாடும் இந்தச் சுறா (சுரா). வாழ்த்துவம் .

    முனைவர் . காளிதாஸ்

    1. உப்புச் சப்பில்லாக் கதைகள் ஏராளம் வந்து கொண்டிருக்கின்றன.
      உப்பில்லாப் பத்தியமாக இருந்தாலும், சூடு சுரணையேறச்சொல்லுகிற பாங்கு சுரா விடம் மட்டுமே காணலாம். வாழ்த்துவம்
      கா.சிவகவி காளிதாசன்.
      புதுக்கோட்டை

  2. பத்தியசோறு சிறுகதை நன்றாக இருந்தது. வறுமையிலும் ஒரு நேர்மை.

    மருங்கூரணி செந்தாமரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.