“கனகர் கிராமம்” …. தொடர் நாவல் …. அங்கம் – 26 …. செங்கதிரோன்.
மறுநாள் காலையில் கோகுலன் விநாயகமூர்த்தியை அவர் அதிபராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த கல்முனை ‘விவேகானந்த வித்தியாலயம்’ பாடசாலைக்குச் சென்று சந்தித்தான்.
விநாயகமூர்த்தி காரைதீவு கிராமசபையின் முன்னாள் தலைவர் கோகுலனுக்கு நெருங்கிய உறவுமுறையில் மாமா. அந்த உரிமையோடும்தான் அவரைச் சென்று சந்தித்தான்.
முதல்நாள் அமிர்தலிங்கத்தைக் கல்முனையில் நொத்தாரிஸ் கந்தையா வீட்டில் சந்தித்த விடயத்தைக் கூறி,
“கனகரட்ணத்தைப் பொத்துவில் தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளராக நிறுத்துவதற்கு உங்கட சம்மதத்தைக் கேட்டுவரச் சொன்னார் மாமா” என்று கோகுலன் தனது கணையைக் கச்சிதமாகத் தொடுத்தான்.
“அதுக்கென்ன தம்பி! அவர் அதுக்குப் பொருத்தமான ஆளெண்டுதான் நானும் நினைக்கிறன்” என்றார் விநாயகமூர்த்தி.
கோகுலனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருந்தது விநாயகமூர்த்தி அவர்களின் பதில்.
“இது சம்பந்தமா பரசுராமன் அவர்களிட்டயும் ஒரு சொல் கேக்கவா? அதப்பத்தி உங்கட அபிப்பிராயம் என்ன மாமா?” என்ற கோகுலனின் இரண்டாவது கணை விநாயகமூர்த்தி அவர்களை நோக்கிக் கவனமாகத் தொடுக்கப்பட்டது.
“எனக்கு ஆட்சேபன இல்லத்தம்பி!… அவரிட்டயும் கேட்டுச் செய்யிற நல்லம்தானே” என்ற சாதகமான பதில் விநாயகமூர்த்தியிடமிருந்து கிடைத்தது.
அடுத்த நடவடிக்கையாகக் கோகுலன் தாமதியாமல் காரைதீவுக்குச் சென்று டாக்டர் பரசுராமனை அவரது வீட்டில் சந்தித்தான்.
டாக்டர் பரசுராமன் அவர்களும் காரைதீவு பிரதேச சபையின் தலைவராக இருந்தார். தொழில் ரீதியாக ஆயுர்வேத வைத்தியர். அவரும் கோகுலனுக்கு உறவுக்காரர் தான்.
முதல் நாள் அமிர்தலிங்கத்தைச் சந்தித்த விடயத்தை அவரிடமும் கூறி,
“கனகரட்ணத்தைப் பொத்துவில் தொகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளராக நிறுததுவதற்கு உங்கட சம்மதத்தைக் கேட்டு வரச்சொன்னார்” என்று கோகுலன் சற்றுமுன் விநாயகமூர்த்தி அவர்களை நோக்கி விடுத்த அதே முதல் கணையைப் பரசுராமன் அவர்களை நோக்கியும் பவ்வியமாகத் தொடுத்தான்.
“அதில எனக்கொண்டும் ஆட்சேபனை இல்லத்தம்பி! எனக்குச் சம்மதந்தான். கனகரட்ணம் ‘ஓம்’ எண்டு சொல்லித்தாராமா?” என்றார் பரசுராமன்.
“ஓம்” என்று ஒற்றைவார்த்தையிலேயே பதில் சொன்ன கோகுலன்,
“இது விசயமா விநாயமூர்த்தி அவர்களிட்டயும் ஒரு சொல் கேட்கவா? அதப்பத்தி உங்கட அபிப்பிராயம் என்ன?” விநாயகமூர்த்தி அவர்களிடம் பிரயோகித்த அதே இரண்டாவது கணையைப் பரசுராமன் அவர்கள் மீதும் பரீட்சித்துப் பார்த்தான் கோகுலன்.
“அதுல எனக்கொண்டும் ஆட்சேபன இல்லத்தம்பி. அவரிட்டயும் ஒரு வார்த்த கேக்கிறது நல்லம்தானே” என்றார் பரசுராமன்.
பழம்நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த கதையாகத் தான் வந்த காரியம் சித்தியடைந்ததில் களிப்படைந்தான் கோகுலன்.
அன்றுமாலை தனித்தனியே இரு கார்களை வாடகைக்கு அமர்த்தி காரைதீவிலிருந்து விநாயகமூர்த்தியையும் டாக்டர் பரசுராமனையும் தனித்தனிக் கார்களில் கதிரவேற்பிள்ளை எம்.பி ஐச் சந்திப்பதற்காகக் கல்முனை வாடிவீட்டுக்குக் கூட்டிவரும்படி இரு நம்பிக்கையான நண்பர்களை ஏற்பாடு செய்து விட்டுப் பாண்டிருப்புத் திரௌபதை அம்மன கோயிலடிக்கு விரைந்தான் கோகுலன்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் கோயில் முன்றலில் வேல்முருகு மாஸ்ரர் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. ஒலிபெருக்கிச் சத்தம் அதனை உணர்த்திற்று.
கூட்ட மேடையில் கூட்டத்திற்குத் தலைமைவகித்த வேல்முருகு மாஸ்டர் – கதிரவேற்பிள்ளை எம்.பி – கல்முனைத்தொகுதியில் முஸ்லீம் ஐக்கிய முன்னணியின் சார்பில் தமிழர்விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக நியமிக்கப்படவுள்ள சட்டத்தரணி சம்சுதீன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
‘உதயசூரியன்’ கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டிருந்த கம்பங்களின் உச்சியில் காற்றில் அசைந்து கூட்டத்திற்கு ஆட்களை அழைத்துக் கொண்டிருந்தன.
சட்டத்தரணி அஸ்ரப் ‘மைக்’ முன்நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் நடவடிக்கைக்குழுவில் முஸ்லீம் ஐக்கிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் சார்பில் இடம்பெற்றிருந்தவர்தான் கல்முனைக்குடியைச் சேர்நத சட்டத்தரணி அஸ்ரப்.
“எதிர்காலத்தில் அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டால்கூட நான் அதற்குத் தலைமைதாங்கி முன்னெடுத்துச் செல்வேன்” அஸ்ரப்பின் முழக்கம் கோகுலனின் காதிலும் விழுந்தது. பார்வையாளர்களின் கரவொலி அடங்கக் கணிசமான நேரம் எடுத்தது.
கோகுலன் நேரே விறுவிறு என்று மேடையின் பின்பக்கத்தால் ஏறிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்த வேல்முருகு மாஸ்ரரின் அனுமதி பெற்று கதிரவேற்பிள்ளை அவர்களிடம் சென்று வந்த விடயத்தைக் கூறினான்.
உடன் கதிரவேற்பிள்ளை வேல்முருகு மாஸ்ரரை சைகையால் தன் அருகில் அழைத்துக் காதுக்குள் குசுகுசுத்தார்.
பின் கோகுலன் பக்கம் திரும்பி “அஸ்ரப் பேசி முடிந்ததும் என்னைப் பேச விடச் சொல்லியிருக்கிறேன். நான் பேசி முடியுமட்டும் சற்றுத் தாமதியுங்கள் தம்பி. பின் இருவருமாக எனது வாகனத்தில் கல்முனை வாடிவீட்டுக்குச் செல்வோம்” என்றார்;.
கோகுலன் கதிரவேற்பிள்ளையுடன் கல்முனை வாடிவீட்டை அடையும் போது வாடிவீட்டு முற்றத்தில் ஜெகநாதனும் சிவானந்தனும் வேறு சில இளைஞர்களும் நின்றிருந்தனர். எல்லோரும் இணைந்து உள்ளே சென்றனர். மண்டபத்தில் கனகரட்ணமும் விநாயகமூர்த்தியும் பரசுராமனும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
கதிரவேற்பிள்ளை நேரே அவர்களிடம் சென்று வணக்கம் கூறி அமர்ந்தார். கோகுலன் கதிரவேற்பிள்ளையைப் பின்தொடர்ந்தான்.
கதிரவேற்பிள்ளை சற்றும் தாமதியாது அமிர்தலிங்கம் தன்னிடம் ஒப்படைத்துச் சென்றுள்ள பொறுப்பை மேலோட்டமாகக் கூறிவிட்டு அவர்கள் மூவரையும் நோக்கியபடி.
“மிஸ்ரர் விநாயகமூர்த்தி – மிஸ்ரர் பரசுராமன் உங்களிருவருக்கும் கனகரட்ணத்தைப் பொத்துவில் தொகுதி வேட்பாளராக நியமிப்பது சம்மதம் தானே” என்று மிகப்பக்குவமாகக் கேட்டார்.
விநாயகமூர்த்தியும் பரசுராமனும் “ஆம்” என்று ஒருமித்த குரலில் பதிலளித்தனர். காரைதீவு ஊர் ஒன்றுபட்டுவிட்டதாக உவகையடைந்தான் கோகுலன்.
கதிரவேற்பிள்ளை பின் கனகரட்ணத்தைப் பார்த்து “தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர் நியமனம் கோரும் உங்கள் விண்ணப்பக் கடிதமொன்று தேவை. முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கில்லை. அடுத்தவாரம் கொழும்பில் தமிழர்விடுதலைக்கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைக் குழு கூடுகிறது. அக்கூட்டத்தில் இக்கடிதத்தை அமிர்தலிங்கத்திடம் கையளிப்பேன் அங்குதான் முடிவெடுக்கப்படும்” என்றார்.
கனகரட்ணம் கோகுலனிடம் உடல்மொழியால் சமிக்ஞை செய்தார். உடனே கோகுலன் புரிந்து கொண்டு வாடிவீட்டுக் காப்பாளரிடம் ஒரு தாள்வாங்கி உரிய விண்ணப்பத்தை எழுதிக் கனகரட்ணத்திடம் நீட்டிக் கையெழுத்து வாங்கிக் கதிரவேற்பிள்ளையிடம் கையளித்தான். கையளித்துவிட்டுக் கோகுலன் கைகளைத் தட்டினான். அங்கிருந்த ஏனையோரும் கைகளைச் சேர்த்துத் தட்டினர். கனகரட்ணத்தின் முகத்தில் முறுவல் பூத்தது. விநாயகமூர்த்திக்கும் பரசுராமனுக்கும் நன்றி கூறி வந்தது போலவே தனித்தனிக் ‘கார்’களில் அவர்கள் இருவரையும் காரைதீவுக்கு மரியாதையோடு வழியனுப்பி வைத்தான் கோகுலன்.
கனகரட்ணமும் விடைபெற்றுக்கொண்டு பொத்துவில் நோக்கி அவருடைய வாகனத்தில் புறப்பட்டார்.
ஜெகநாதன் – சிவானந்தன் – கோகுலன் ஆகிய மூவரும் கல்முனையில் அவரவர் இருப்பிடம் ஏகினர். அங்கு நின்றிருந்த ஏனைய இளைஞர்களும் இடத்தை விட்டு அகன்றனர்.
கோகுலன் 1975 ஆம் ஆண்டிலிருந்தே கல்முனை உடையார் வீதியில் ‘சிங்கத்தார்’ என அழைக்கப்பட்டவரின் வீடும் ‘அரியத்தார்’ என அழைக்கப்பட்டவரின் வீடும் அயல்வீடுகளாக இருக்க இடையில் வேலாயுதம் என்பவருக்குச் சொந்தமான வீட்டில், தனது தாயார் மற்றும் தம்பியுடனும் கல்முனை நகரப் பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பொத்துவிலில் வதியும் தனது அக்காமார் மூவரினதும் பிள்ளைகளுடனும் வாடகைக்கு வசித்து வந்தான்.
கல்முனையில்தான் கோகுலன் பணிபுரியும் ஆள்புல சிவில் பொறியியல் அமைப்பின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகம் அமைந்திருந்ததும் அதற்கான காரணங்களிலொன்று. கல்முனையிலிருந்துதான் பொத்துவிலுக்குத் தனது அக்காமார் வீடுகளுக்குப் போய்வருவதையும் தான் பொறுப்பாயிருந்த கோமாரி மற்றும் சாகாமம் பிரதேசங்களுக்குத் தனது தொழிநுட்பக் கடமை சம்பந்தமான கள வேலைகளுக்குப் போய் வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான். அதனால்தான் கல்முனையைச் சேர்ந்த ஜெகநாதனுடனும் சிவானந்தனுடனும் நெருக்கமாக ஊடாடும் சந்தர்ப்பங்கள் நிறைய அவனுக்கு ஏற்பட்டன. ஜெகநாதன் இலங்கை வங்கியின் பொத்துவில் கிளையின் முகாமையாளராகக் கடமையாற்றியமை ஜெகநாதன் – கோகுலன் இருவருக்குமிடையில் மேலதிக நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால்தான் கனகரட்ணத்தைப் பொத்துவில் தொகுதியிலே தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தும் தனது பிரயத்தனத்தில் ஜெகநாதனையும் சிவானந்தனையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு இயங்கினான்.
கல்முனை வீட்டையடைந்த கோகுலன்,
அன்று காலையிலிருந்து இரவு வரை ஓயாமல் ஒடித்திரிந்த களைப்பு நீங்க கிணற்றடிக்குப் போய் நன்கு அள்ளி முழுகிவிட்டு இராச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு உடனேயே உறங்கிப் போனான்.
மறுநாள் காலையில் கட்டிலை விட்டு எழுந்திருக்கும் போதே கனகரட்ணத்தை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் வேறொரு ‘ஜடியா’ கோகுலனின் சிந்தனையில் தட்டியது.
அவசரம் அவசரமாக எழுந்து காலைக்கடன்களையெல்லாம் முடித்து ஒரு காக்காய்க்குளிப்பும் போட்டுவிட்டு நின்றநிலையில் காலைச்சாப்பாட்டையும் முடித்துவிட்டுக் கல்முனை அலுவலகம் சென்று கடமைக்கு அடுத்த வாரம் முழுவதும் ‘லீவு’ போட்டுவிட்டு நேரே அக்கரைப்பற்றுக்குத் தனது ‘மோட்டார் சைக்கிளில்’ பயணமானான்.
அக்கரைப்பற்றில்தான் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொத்துவில் தொகுதிக் கிளைத் தலைவர் சிவஞானச் செல்வக் குருக்கள் வசித்து வந்தார். ஆலையடி வேம்பில் அவரது இல்லம் அமைந்திருந்தது. அவரது வீட்டை
அடைந்து வாசலில் நின்று “குருக்கள் ஐயா!” என்று குரல் கொடுத்தபோது எட்டிப் பார்த்த சிவஞானச் செல்வக் குருக்கள் தனது மீசையையும் நீண்ட தாடியையும் தடவி விரல்களால் நீவி விட்டுக்கொண்டே அவரது வழமையான நமட்டுச் சிரிப்புடன் “வாங்க தம்பி கோகுலன். விசயமில்லாமல் தேடிவர மாட்டீங்களே வாங்க! இருங்க!” என்று நாற்காலியைக் காட்டினார்.
கோகுலன் நாற்காலியில் அமர்ந்ததும் மீண்டும் அதே நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்தது விட்டு “வந்த காரணத்தைச் சொல்லுங்கள்” என்றார். அவர் அப்படித்தான். நறுக்கென்ற வார்த்தைகள்தான் அவர் நாவில் வரும்.
கோகுலனும் தன் வார்த்தை வலையைக் கவனமாகச் சுழற்றி வீசினான்.
அக்கரைப்பற்று – ஆலையடிவேம்புப் பிரதேசத்திலும் பொதுவாகத் தமிழரசுக்கட்சி வட்டாரங்களிலும் கூடத் ‘தாடிக்குருக்கள்’ என அறியப்பட்ட சிவஞான செல்வக்குருக்கள் தமிழரசுக்கட்சியில் தோய்ந்தவர். தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தராக இருந்த அமரர் அறப்போர் அரியநாயகம் அவர்களின் சமகாலத்தவர். கறாரான பேர்வழி. கட்சியென்று வந்துவிட்டால் சற்றும் விட்டுக்கொடுக்காதவர். இப்படியான அபிப்பிராயங்கள்தான் கோகுலனின் மனதில் அவரைப்பற்றிப் பதிவாகியிருந்தன.
கனகரட்ணம் அவர்களோ தேர்தல் அரசியலிலோ அல்லது தமிழரசுக்கட்சி அரசியலிலோ நாட்டம் இல்லாதவர். ஒரு வர்த்தகராகவும் தொழிலதிபராகவும் சமூக மற்றும் ஆன்மீகச் சேவையாளராகவுமே தன்னை அடையாளம் காட்டியவர். சுருக்கமாகக் கூறப்போனால் சிவஞான செல்வக்குருக்கள் போன்றவர்களின் பார்வையில் கனகரட்ணம் தமிழரசுக்கட்சிப் பாசறையில் வளர்ந்தவர் அல்ல. குறைந்தபட்சம் அவர் தமிழரசுக்கட்சிக்காரருமல்ல. தமிழர் விடுதலைக்கூட்டணி அரசியலில் ஈடுபாடு காட்டியவருமல்ல. இந்தப் பின்னணியில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொத்துவில் தொகுதி வேட்பாளராகக் கனகரட்ணத்தின் பெயரை விநாயகமூர்த்தி மற்றும் பரசுராமன் போன்றோரிடம் பிரஸ்தாபித்ததுபோல் சிவஞானச் செல்வக்குருக்களிடம் எடுத்தவுடனேயே சொல்லிவிடக்கூடாது. அப்படிச் சொன்னால் எடுத்த எடுப்பிலேயே அதனை அவர் நிராகரித்து விடுவார். அது மட்டுமல்ல, பொத்துவில் தொகுதியின் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளரைத் தம்மைக் கேட்காமல் தீர்மானிப்பதற்கு அமிர்தலிங்கம் யார் என்று கூடக் கேட்டும் விடுவார். கல்முனையில் அமிர்தலிங்கத்தைச் சந்தித்த விடயத்தயோ தொடர்ந்து கல்முனை வாடி வீட்டில் கதிரவேற்பிள்ளை எம்.பி.யை விநாயகமூர்த்தி – பரசுராமன் – கனகரட்ணம் சகிதம் சந்தித்த கதையையோ சிவஞானச் செல்வக்குருக்களிடம் சொல்வதைக் கோகுலன் தந்திரோபாயமாகத் தவிர்த்துக் கொண்டான்.
“குருக்கள் ஐயா! பொத்துவில் தொகுதிக்குத் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளராக ஒருவரது பெயர நாம தலமப்பீடத்துக்குச் சிபர்சு பண்ண வேணுமெலுவா?” என்று வந்த விடயத்தை மெதுவாகத் தொடக்கி வைத்தான்.
“ஆம்! நீங்கள் யாரையாவது மனதில் வைத்திருக்கிறீர்களா?” குருக்களின் வெட்டு ஒன்று துண்டு இரண்டான வினாவுக்குக் கோகுலன் உடனடியாக “இல்லை” என்று பதில் கூறி விட்டுக் கோகுலனின் மனதில் உள்ளதைத் தன் கண்களின் மொழியால் துழாவியறிய முனையும் குருக்களின் முகக்குறிப்பையும் அவதானித்தபடி,
“அதுக்குத்தானே ஐயா! உங்களத் தேடி வந்திருக்கன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொத்துவில் தொகுதிக் கூட்டத்தக்கூட்டிக் கலந்துரையாடி ஒரு பெயரைத் தெரிவு செய்து தலமப் பீடத்துக்கு அனுப்பி வைப்பமே. தலைவராகிய நீங்கதானே கூட்டத்தக்கூட்டுற விசயத்தத் தீர்மானிக்கோணும்” என்றான் கோகுலன்.
தன்னைச் சற்றுத் தூக்கி வைத்துப் பேசிய கோகுலனைப் பார்த்து வெற்றிப் புன்னகையொன்றை உதிர்ந்த குருக்கள் நீண்ட தன் தாடியை நீவி விட்டுக்கொண்டே “எங்கே? எப்போது கூட்டுவோம்?” என்று திருப்பிக்கேட்டுக் கோகுலன் அவரைத் தேடி வந்த நோக்கத்தை எளிதாக்கினார்.
“வாற ஞாயிற்றுக்கிழமை காலம பத்து மணிக்குத் தம்பிலுவில் அமரர். அரியநாயகம் வீட்டில் கூட்டலாமே” என்று ஆலோசனை வழங்கினான் கோகுலன்.
“நல்லது அது பொருத்தமான இடம்தான். செயலாளர் திருக்கோயில் சிவஞானத்துடன் பேசி அதுக்குரிய ஏற்பாடுகள இண்டைக்கே ஆரம்பிக்கிறன். சந்தோஷமாகச் சென்று வாருங்கள் தம்பி கோகுலன்” என்று முகம்மலர்ந்து சிரித்தார் குருக்கள்.
வந்தகாரியம் சிக்கல்கள் ஒன்றுமில்லாமல் வெற்றியாய் முடிந்துவிட்ட திருப்தியில் திளைத்த கோகுலன் வெளியே வீதிக்கு வந்து ‘கேற்” றடியில் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்து கோமாரி செல்வதற்காகச் ‘ஸ்ராட்’ செய்தான். கோமாரியில்தான் அவனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு உரித்தான ‘குவார்ட்டஸ்’ இருந்தது.
(தொடரும் …… அங்கம் – 27)