பாரிஸ் கட்டடம் ஒன்றில் திடீர் சுற்றிவளைப்பு: நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் வெளியேற்றம்
பிரான்ஸ்- பாரிஸுக்கு(Paris) தென் புறமாக கைவிடப்பட்ட அலுவலகக் கட்டடம் ஒன்றை ஆக்கிரமித்திருந்த புலம்பெயர்ந்தோரையே அந்நாட்டு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு சுமார் 3 மாதங்களே உள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில், ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு முன்னர் பாரிஸ் நகர் சிறப்பாக இருக்கின்றது எனக் காட்டுவதற்காக அதிகாரிகள் முயற்சிப்பதாக பிரான்ஸ் தொண்டு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
450 புலம்பெயர்ந்தோர்
பாரிஸின் தென் பகுதியில் உள்ள புறநகர் விட்ரி-சூர்- சியேன் என்ற இடத்தில் உள்ள கைவிடப்பட்ட கட்டடத்தில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த மக்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கைவிடப்பட்ட கட்டடத்தில் சுமார் 450 புலம்பெயர்ந்தோர் வசித்து வந்ததாக அங்கு அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் வீடுகள் கிடைக்கும்வரை காத்திருந்தனர் எனவும், அந்த கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு இந்த வார முற்பகுதியில் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.