தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் : சாணக்கியன் எம்.பி என்ன சொல்கிறார்?
ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமாகயிருந்தால் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடியதாக முடிவுகளை தமிழர்களை வழிநடத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நிறைவேந்தல் நிகழ்வின் இறுதி நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னாரின் சமாதியில் உணர்புவூர்வமாக நடைபெற்றது
நேற்று மாலை கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலிருந்து நினைவு பேரணியானது ஆரம்பமாகி நாவலடியில் உள்ள அன்னையின் சமாதி வரையில் சென்றது.
பேரணியானது நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியை அடைந்ததும் அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன .
சிவில் சமூக அமைப்புக்குள் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.கேகேஸ்வரன்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்க இணைப்பாளர் வேலன் சுவாமிகள் அருட்தந்தை ஜோசப்மேரி,முன்னாள் மாநகர முதல்வா தி.சரவணபவன்,முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அன்னை பூபதியின் மகள்மாரினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சமாதியில் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப்பேருரைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் தியாகத்தாய் அன்னைபூபதியின் நினைவுப்பிரகடனம் வெளியிடப்பட்டது.இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் வெளியிட்டுவைத்தார்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
இந்த மண்ணில் தமிழ் மக்கள் ஒரு கௌரவமான வாழ்க்கையினை வாழவேண்டும் என்பதற்காகவே அன்னை பூபதி அவர்கள் 36வருடங்களுக்கு முன்னர் தனது உயிரை தியாகம் செய்தார்.அன்னையின் இந்த தியாகத்திற்கு ஒரு அர்த்தம் இருப்பதாகயிருந்தால் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதே எமக்கு அனைவருக்கும் முன்பாகவுள்ள கடமையாகும்.
அந்த வகையில் தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும்.இந்த ஆண்டு ஜனாதிபதிதேர்தல் ஒன்று நடைபெறவிருக்கின்றது.
தென்னிலங்கையில் உள்ள அரசியல்கட்சிகளின் மட்டங்களில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து பேசுவது,தமிழர்கள் குறித்து சிந்திப்பது,தமிழர்கள் பேசுபொருளாக மாறுவது இந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில்தான்.இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கயிருக்கும் ஆண்டு.அவ்வாறு நடக்குமானால் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடியதான முடிவுகளை தமிழ் மக்களை வழிநடாத்தும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எடுப்பதுதான் இந்த தாயின் தியாகத்திற்கு நாங்கள் செய்யக்கூடிய விடயம்.இந்த வருடத்தில் சிறந்த ஒரு தீர்மானத்தை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.