பூமராங் மின்னிதழ் அறிமுகம் அனைத்துலக பெண்கள் தின சிறப்பிதழாக இம்மாதம் வெளியாகியுள்ளது! … முருகபூபதி.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் காலாண்டு மின்னிதழான பூமராங், இம்மாதம் தனது இரண்டாவது இதழை வரவாக்கியிருக்கிறது.
அனைத்துலக பெண்கள் தின சிறப்பிதழாக இம்முறை வெளிவந்துள்ள பூமராங், சிறுகதை, கட்டுரை, நூல் விமர்சனம், வாசகர் முற்றம், மற்றும் சங்கத்தின் சமகால நிகழ்வுகள் பற்றிய தகவல் குறிப்புகளுடனும் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதன் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“ அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மின்னிதழின் வருகை, இந்த ஆண்டு ( 2024 ) தமிழர் திருநாள், தைத்திருநாளின்போது ஆரம்பமானது.
இரண்டாவதாக வெளிவரும் இவ்விதழ், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு அனுட்டிக்கப்பட்ட ரம்ஸான் பண்டிகைக் காலத்திலும், இந்து தமிழ் மக்களினால் கொண்டாடப்படும் சித்திரை புதுவருட காலத்திலும் வெளிவருகின்றது.
இந்தப் பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் என்ற தாரக மந்திரத்துடன், அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயற்சித்தல் என்னும் நோக்கத்துடனும் கடந்த இரண்டு தசாப்த காலமாக இயங்கிவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வளர்ச்சியில் மற்றும் ஒரு மைல்கல்லாக திகழ்ந்திருக்கும் பூமராங் மின்னிதழுக்கு தமிழ் கூறும் நல்லுலகில் சிறந்த வரவேற்பு கிட்டியிருந்தது.
சில வாசகர்கள் பூமராங் குறித்த தாங்களது வாசிப்பு அனுபவத்தையும் ஊடங்களில் பகிர்ந்துகொண்டார்கள்.
மெல்பனில் நீண்டகாலமாக இயங்கு தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பினர், முதலாவது பூமராங் மின்னிதழை அச்சிட்டு, பல பிரதிகளை தங்கள் அமைப்பின் மாதாந்த ஒன்றுகூடலிலும் அறிமுகப்படுத்தி, தங்கள் உறுப்பினர்களுக்கு விநியோகித்தனர்.
அதன் மூலமும் பூமராங் மின்னிதழுக்கு சிறந்த வரவேற்பு கிட்டியது. சில மூத்த பிரஜைகளுக்கு, தாங்களும் எழுத்துப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்தையும் பூமராங் மின்னிதழ் தூண்டியிருக்கிறது.
சங்கம், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அடுத்தடுத்து சில நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது.
பூமராங் மின்னிதழின் முதலாவது இதழ் வெளியீட்டினையடுத்து, மார்ச் மாதம் 10 ஆம் திகதி தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுடனான சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்வினையும், மார்ச் மாதம் 23 ஆம் திகதி அனைத்துலக பெண்கள் தின விழாவை மெய்நிகரிலும், ஏப்ரில் மாதம் 07 ஆம் திகதி, இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கிய நூல்களை தெரிவுசெய்யும் போட்டியில் பரிசுபெற்ற நூல்களுக்கான வாசிப்பு அனுபவப் பகிர்வினை மெய்நிகரிலும் நடத்தியிருக்கிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக இயங்கிவரும் சங்கத்தின் காலாண்டு இதழையும் மூத்த – இளம் தலைமுறையினரின் ஆக்கங்களுக்கு களம் வழங்கும் வகையில் வெளியிடுவதற்கு விரும்புகின்றோம்.
கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஆற்றல் மிக்கவர்கள், தங்கள் படைப்புகளை பூமராங் மின்னிதழுக்கு அனுப்பிவைக்கலாம். “
இவ்விதழில், ஜெர்மனியிலிருந்து சந்திரகௌரி சிவபாலன் ( கௌசி ) இலங்கையிலிருந்து ஞா. டிலோசினி, அவுஸ்திரேலியாவில் வதியும் சிவயோகராணி யோகானந்தன், அபிதாரிணி சந்திரன், லெ. முருகபூபதி, பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா, ஆரீஃப் இஸ்மயில் , தாமரைச்செல்வி, கனகா. கணேஷ், கிறிஸ்டி நல்லரெத்தினம் ஆகியோரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
மறைந்த மூத்த எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் அறிமுகப்படுத்தும் வரிசையில் பெட்டகம் என்ற பகுதியும் இவ்விதழில் ஆரம்பமாகியிருக்கிறது.
இம்முறை பெட்டகத்தில், ஈழத்தின் மூத்ததலைமுறை முற்போக்கு எழுத்தாளரும் கனடாவில் மறைந்தவருமான என். கே. ரகுநாதன் 1951 ஆம் ஆண்டு எழுதிய நிலவிலே பேசுவோம் என்ற சிறுகதை இடம்பெற்றுள்ளது.
கடந்த தை மாதம் வெளியான முதலாவது பூமாரங் இதழைப்போன்று நேர்த்தியாகவும் பொருத்தமான ஓவியங்களுடனும் வெளிவந்துள்ள பூமராங் இரண்டாவது இதழை வடிவமைப்பதில் தனது தீவிர அக்கறையை காண்பித்திருக்கிறார், அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவரும் ஓவியரும் எழுத்தாளருமான கிறிஸ்டி நல்லரெத்தினம்.
பிரதிகளை மின்னஞ்சல் வாயிலாக பெறவிரும்பும் அன்பர்களின் தொடர்புகளுக்கு: atlas25012016@gmail.com
—–0—–