கென்யா உலங்கு வானூர்தி விபத்தில் 9 உயர்மட்ட அதிகாரிகள் பலி
கென்யாவின்(Kenya) பாதுகாப்புத் தலைவர் மற்றும் ஒன்பது உயர்மட்ட அதிகாரிகள் நாட்டின் தொலைதூரப் பகுதியில் ஏற்பட்ட இராணுவ உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.
விபத்து குறித்து தேசிய பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை கூட்டிய வில்லியம் ரூட்டோ,
“உலங்கு வானூர்தியில் பயணித்த மேலும் ஒன்பது உயர் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய கென்ய விமானப்படை விசாரணைக் குழுவை அனுப்பியுள்ளது.
குறித்த உலங்கு வானூர்தி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு நாட்டில் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிகாரப்பூர்வ கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கடந்த 12 மாதங்களில் கென்யாவில் இடம்பெற்ற ஐந்தாவது இராணுவ உலங்கு வானூர்தி விபத்து இதுவாகும்” என கூறியுள்ளார்.இதேவேளை, குறித்த இராணுவ உயரதிகாரிகள் பயணித்த உலங்கு வானூர்தியான பெல் ருர்-1டீ, 1950 களில் உருவாக்கப்பட்டது எனவும், வியட்நாம் போரின் போது இது, அமெரிக்க இராணுவத்தால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.