இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும்!
நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகளுடன் நேற்று நுவரெலிய ஜனாதிபதி மாளிகையில், விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டார்.
நுவரெலியா, ஹங்குரங்கெத்த, மஸ்கெலியா, கொத்மலை மற்றும் வலப்பனை ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சிலர் விமர்சித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவு கிடைத்தால் அந்த திட்டங்களை நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையாக மாற்ற முடியும் எனவும் இங்கு சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பழமையான அரசியலில் ஈடுபட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், நாட்டுக்கு தேவையான முதலீடுகளை ஈர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும் இன்று சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வோடு, மக்களின் வருமான மூலங்களும் அதிகரித்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை இளம் அரசியல்வாதிகள் என்ற ரீதியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்த இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான தமது முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத், தாம் வேறொரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.
அடுத்த 02 வருடங்களில் நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை மேற்கொண்டு 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவை வழங்குவோம் எனவம் அசோக ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச மற்றும் நுவரெலியா மகாநகர சபையின் முன்னாள் மேயர் சந்தன லால் கருணாரத்ன மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச இளம் அரசியல்வாதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.