ஒடிசாவில் பௌத்தம்! …. நோயல் நடேசன்.
ஒரு பயணம் என்பது நூறு புத்தகங்களைப் படிப்பதற்குச் சமமானது என்று யாரோ சொல்லியிருந்தாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. அதில் உள்ள உண்மைத்தன்மையை எனது பயணங்களில் பல தடவைகள் உணரும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
இந்தியாவின் கிழக்கு மாநிலமாகிய ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வர் . ஒடிசா முன்னைய கலிங்கத்தில் பெரும்பகுதியாகும். இலங்கைக்குப் பௌத்தம் கலிங்கத்திலிருந்து வந்ததும், பின்பு அதே கலிங்கத்திலிருந்து கலிங்கமேகன் படையெடுத்து வந்து பொலநறுவையில் உள்ள பௌத்த மடாலயங்களை அழித்ததும் நாம் அறியக்கிடைக்கும் விடயங்கள்.
புத்த பெருமான் கலிங்கத்திற்கு வருகை தராத போதிலும், மவுரியப் பேரரசனான அசோகனால் கலிங்கம் கி.மு. 261ல் கைப்பற்றப்படுவதற்கு முன்னரே, கலிங்கத்தில் புத்தம் முக்கிய மதமாக இருந்திருக்கிறது. அதற்கான பல சான்றுகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு மதிய நேரத்தில், புவனேஸ்வரிலிருந்து சில மைல்கள் தூரம் சென்றுகொண்டிருந்தபோது, “இதுதான் தவுலி” என்று எனது சாரதி கூறியதும், அங்கு காரை நிறுத்தச் சொல்லி, எனது மனைவி சியாமளாவுடன் இறங்கினேன். இந்த வரலாற்று இடங்களின் தரிசனங்கள் எல்லாம் எனக்காக என்னைத் தொடரும் விடயங்கள். இராமனைத் தொடர்ந்த சீதையைப்போல, சியாமளாவுக்கு வேறு வழியில்லை – என்னைத் தொடர்வதைத் தவிர!
கலிங்கத்துப் போர் நடந்த இடமெனக் கூரப்படும் தவுலி (Dhauli) நதிக்கரையில் நின்று பார்த்தபோது சாருக்கான் நடித்த அசோகா படம் என் மனத்தில் வந்தது. அக்காலத்தில் இலக்கியம், மதம், தத்துவம், கட்டிடக்கலை, நாகரீகம், பண்பாடு எனப் பல விடயங்களை அயல் நாடுகளுக்கு மட்டுமல்ல, தூரதேசங்களுக்கும் அள்ளி வழங்கிய பாரததேசம் தற்போது நமக்குத் தருவது, பொலிவூட் சினிமாவே! எனவே நானும் அதனூடாகவே இறந்தகாலத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
கற்பனையான பல விடயங்கள் அசோகா திரைப்படத்தில் கலந்து மசாலாவாகியபோதும் படத்தின் பெரும் பகுதியில் கலிங்கம் தெரிகிறது. அக்கால கலிங்கம் பெரியது. இக்கால ஓடிசாவுடன், பாதி ஆந்திராவும் சேர்ந்தது. மேற்கே மலைத் தொடரும் (Eastern Ghat) கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும் எல்லையாக இருந்தது. இந்தியாவில் அதிக இரும்புத் தாது உள்ள பிரதேசம். போருக்கு இரும்பு முக்கியம் என்பதால் இரும்புக்காகவே அசோகன் கலிங்கத்தின்மீது படை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
புத்தமதம், இந்துமதம், ஒடிசாவின் கலாச்சாரம் என்பன இங்கிருந்தே தென் கிழக்காசியாவுக்கு சென்றிருக்கின்றன. தென்கிழக்காசியாவிலுள்ள நடனங்கள் ஓடிசாவிலிருந்து போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்பொழுதும் வருடாந்த பாலி யாத்திரை என்பது ஒடிசாவில் பேசப்படுகிறது.
புத்தரின் தலைமயிர், கலிங்கத்திற்குப் புத்தரின் பக்தர்களாகிய இரண்டு கலிங்க (Utkal) வணிகர்கள்(Tapassu and Bhallika) மூலமாகவே வந்திருக்கிறது . புத்த பெருமான் கி.மு. 543 இல் குஷி நகரில் ( உத்தரப் பிரதேசம்) இறந்து, அங்கு அவரது உடல் சந்தனக் கட்டைகளில் வைத்து எரிக்கப்பட்டபோது,
அவரது பற்களில் இரண்டு அக்காலக் கலிங்கத்தின் தலைநகராகவிருந்த, தந்தபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த பற்களுக்காகவே பல யுத்தங்கள், கலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் நடந்தன. இதைத் தெரிந்தோ என்னவோ தனது பல் பிற்காலத்தில் இலங்கையில் பத்திரமாக இருக்குமெனப் புத்தரே முன்னர் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அவர் உயிர் வாழும்போது நேரடியாவோ அல்லது பிற்காலத்தில் எவரினதும் கனவுகளில் வந்தோ சொல்லிருக்கலாம். அது யாரும் உறுதியாக அறியாத விடயம். இலங்கையை அங்கும் புத்தரின் பற்களுக்கும் அரசுக்கும் இறுக்கமான தொடர்பு இருக்கிறது.
கிட்டத்தட்ட 700 வருடங்களுக்குப் பின்பாக (கி.பி. 371 இல்) கலிங்க இளவரசன் தந்த குமாரனும் மனைவியும், உஜ்ஜயினி இளவரசியுமான, ஹேமவல்லியும் அவற்றில் ஒரு பல்லை இலங்கைக்குக் கொண்டு வந்தனர். அவர்கள் வரும்போது ஒரு பிராமணத் தம்பதிகளைப்போல மாறுவேடத்துடன் வந்தார்கள். அப்போது இளவரசின் தலைக்குள் மறைக்கப்பட்டு அந்தப் பல் கொண்டுவரப்பட்டது. இந்த கடத்தல் ஹேமவல்லியின் தந்தையின் கட்டளைப்படியே நடந்தது எனப்படுகிறது.
அவர்கள் இலங்கைக்கு வந்தபோது, அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கீர்த்தி சிறி மேகவண்ணன் ஆட்சிபுரிந்துகொண்டிருந்தான். கொண்டுவரப்பட்ட பல் அனுராதபுரத்தில் அபயகிரி விகாரையில் வைக்கப்பட்டுப் பின்னர் இலங்கையில் பல இடங்களிற்கும் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதியாக, இப்போது கண்டியில் தலதா மாளிகையில் ஒரு தங்கப் பேழையில் வைக்கப்பட்டிருக்கிறது. எசல பெரகரா காலத்தில் அது வீதிகளில் பவனியாக எடுத்துவரப்படும்.
கலிங்கத்தில் புத்த மதம், இருநூறு வருடங்கள் முக்கிய மதமாக இருந்த போதிலும் புத்த விகாரைகளும், மடாலயங்களும், பிற்காலத்தில் பல காரணங்களால் புறக்கணிக்கப்பட்டு அழிந்ததைப் பார்க்கும்போது இலங்கையில் புத்தரின் பல் பல இடங்களில் மாறிமாறிக் கொண்டுசெல்லப்பட்டாலும், போர்த்துக்கேயர், ஓல்லாந்தர், ஆங்கிலேயர் என்போரின் வெவ்வேறு ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும், பின்னர் விடுதலைப்புலிகளின் குண்டு வெடிப்புகள் நடந்தாலும், எல்லாவற்றையும் கடந்து இப்போதும் பத்திரமாக இருக்கிறது. இங்கும் புத்தரின் அந்தப் பல் பற்றிய விடயம் அரசோடு கதையாக இணைக்கப்பட்டுள்ளது.
பௌத்தத்திற்கும் கலிங்கத்திற்கும் உள்ள தொடர்பு இது மட்டுமல்ல, இன்னும் இருக்கிறது.
தாவுலி நதிக்கரையில் உள்ள சிறிய குன்றில் தற்போது யானை வடிவமான முகம் கொண்ட கல்லில் அசோகனின் கட்டளைகள் பாளி மொழியில் பிராமி எழுத்தில் எழுதப்பட்டிருந்தது . அதன் மொழி பெயர்ப்பும் அருகில் இருந்தது. ஏற்கனவே அசோகனின் கல்வெட்டுகளை நான் குஜராத்திலும் லும்பினியில் அசோகனது தூணிலும் பார்த்திருந்தேன்.
மிருகங்களைக் கொல்லாதிருத்தல், மிருகங்களினதும், மனிதர்களதும் மருத்துவத்திற்காக மருத்துவ மூலிகைகள் கொண்ட பூங்காக்களை உருவாக்குதல் என்பவை மட்டுமன்றி, அதிகாரிகளை அறமாக நடந்து
கொள்ளும்படியும் எழுதப்பட்டிருந்தது. மக்களைத் தனது சொந்தப் பிள்ளைகள் எனவும் எவரையும்
விசாரணையின்றித் தண்டிக்கக்கூடாது என்றும் பொறிக்கப்பட்டிருந்த கட்டளை வசனங்கள் என்னை ஈர்த்தன. அடிமைகள், வேலையாளர்கள், முதியவர்கள் என்போரை மரியாதையாக நடத்தும்படியும், சிராமனஸ் ( பிராமணர்கள், ஜைனர்கள்) அஜீவகர்கள் என்போரைச் சுதந்திரமாக விடும்படியும் எழுதப்பட்டிருந்தது.
2000 வருடங்கள் முன்பாக ஓர் அரசன் இப்படியெல்லாம் அறம் சார்ந்து சிந்திப்பதற்கு மதம் உதவியிருக்கிறது. அசோகன் மதத்தின் ஈர்ப்பால் வாளைப் புறக்கணித்தவன். ஆனால் தற்காலத்தில் பல அரசுகள் மதத்தை வாளாக உபயோகிக்கிறார்கள் என்பது கவலையானதே .
இந்த கற்சாசனங்களை விட அங்கு அழகான, அமைதிக்கான ஒரு புத்த கோயிலும் (Dhauli Santi Stupa) யப்பானியரால் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் அருகில் உள்ள ஒரு பூங்காவில், புத்தரின் பல தியான முத்திரை நிலைகள் சிலைகளாக உள்ளன. அதைவிட அசோக தூணின் நகலாக இங்கு ஒன்று உள்ளது . 2000 வருடத்துக்கு முன்பான தலையின் மூலத்தை சரநாத்தில் பார்த்த எனக்குச் சின்னப் பிள்ளைகளின் மண் விளையாட்டாக இந்த தூண் தெரிந்தது. அதைவிடச் சுற்று வட்டாரத்தில் குப்பைகள் பிளாஸ்ரிக் என்பன கிடந்தன. அந்த அசோகப் பேரரசனுக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பு இவ்வளவுதானா என என் மனதில் கேள்வி எழுந்தது.
போரின் பின் அசோகனால் பௌத்த பிக்குகளுக்கான மடம் கலிங்கத்தில் கட்டப்பட்டதாகத் தெரியவருகிறது. பிற்காலத்தில் பௌத்த மதத்தில் பல பிரிவுகள் உருவாகின. அசோகனின் தம்பி( Vitashoka) பிக்குவாக வந்து கலிங்கத்தில் உள்ள மடத்தில் தங்கியதாகவும் ஒரு கதை உள்ளது.
பௌத்த மதத்தின் பல பிரிவுகளில் மகாயானமும், வஜ்ஜிரஜானமும் ஒடிசாவில் பல காலமாக இருந்தன. இதில் தாந்திரிக பௌத்தத்தின் தாய் வீடு ஒடிசா என்கிறார்கள். பெளத்த விகாரைகள் மற்ரும் பிக்குகளின் மடங்கள் இருந்த இடங்கள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவைகள் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு மேடு பள்ளங்களில் ஏறி இறங்க வேண்டும். நீண்ட தூரம் நடக்கவேண்டும். ஜஜ்பூர்(Jajpur) மாவட்டத்தில் அவை ஒரு முக்கோணமான இடத்தில் இருக்கின்றன . அவற்றை புத்த வைர முக்கோணம் என்பார்கள். அவை ரத்தன கிரி, உதயகிரி, லலித்கிரி என்று அழைக்கப்படுகின்றன.
இந்த மூன்றில் உதயகிரி மிகவும் பெரியதாகும். இது மகாஜான புத்தத்தின் அடையாளமாக புத்தரது சிலைகளோடு தாரா, அவலோகிதீஸ்வர் (Avalokiteśvara ) போன்றவற்றையும் காணமுடிந்தது. மேலும், இங்கு புத்த பிக்குகளது தங்குமிடம், படிக்கிணறு என்பனவும் இருக்கின்றன. இவை எட்டாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றன. பிக்குகளின் தங்குமடம் விசாலமானதாகவும் பல தொழிற்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது. மடத்தின் வாசல் மிகவும் நுட்பமான சிற்ப வடிவமாக இருக்கிறது. அத்துடன் மடத்தின் கழிவிடங்கள் வெளிச்செல்லும் வசதியோடு உள்ளன. மற்றும், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் அறை தனியாக இருக்கிறது.
இங்கிருந்து எடுக்கப்பட்ட பல சிலைகள் இங்குள்ள மியூசியங்களுக்கு எடுத்துச் செல்லப்படாமல், இங்கேயே வைக்கப்பட்டுள்ளதால் எல்லாவற்ரையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதாக இருந்தது.
லலிதகிரி என்னும் இடமே மவுரிய காலத்ததின் பழைய பௌத்த இடமாக கருதப்படுகிறது. காரணம் இரண்டாம் நூற்றாண்டிற்கான செப்பு மற்றும் வெள்ளி நாணயங்கள் இங்குதான் கண்டெடுக்கப்பட்டன. இங்கு கிடைத்த அவலோகிதீஸ்வர் தாரா போன்ற சிலைகளை வைத்து மகாயான பௌத்த இடமாக கருதப்படுகிறது. ஆனாலும் தேரவாத மற்றும் தாந்திரிக பௌத்தர்களும் இருந்தமைக்கான அடையாளங்களும் காணப்படுகின்றன.
ரத்தினகிரி 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது . இது பௌத்த தாந்திரிக மதத்திற்கு உரியதாகக் கணிக்கப்படுகிறது. இங்கும் விகாரையுடன் புத்த மடங்கள் இருந்தன. இங்குள்ள நுழைவாசலை மிகவும் அழகானதொன்றாக குறிப்பிடுகிறார்கள். தாந்திரிக பௌத்தம் இருந்த நாடான திபெத்திய குறிப்புகளில் ரத்தினகிரி பற்றி உள்ளது. அத்துடன் அங்கிருந்து யாத்திரீகர்கள் 16ம் நூற்றாண்டுவரை இங்கு வந்ததுள்ளார்கள் என்பதான குறிப்புகள் உள்ளன. இங்கு ஓர் அருங்காட்சியகம் உள்ளது அதில் மகாயான புத்தத்திற்கான போதிசத்துவர்கள் மற்றும் தாரா போன்ற பெண் தெய்வங்களுடன் இந்து விக்கிரகங்களையும் பார்க்க முடிந்தது.
இந்த மூன்று இடங்களையும் ஒரே நாளில் சுற்றிப் பார்க்க முடிவு செய்தது எனது தவறு என்பதைப் பின்னால் புரிந்துகொண்டேன். ஏறத்தாழப் பத்து கிலோ மீட்டார்கள், ஏறி இறங்கி நடந்தது முதுகை முற்றாக முறித்துவிட்டது. அதைவிட, பௌத்தத்திலுள்ள பிரிவுகளையும் விக்கிரகவியல்களையும் (Iconography ) மூளையில் கிரகிப்பது என் போன்ற சாமானியனுக்கு இலகுவானதல்ல. என்னோடு இவற்றில் பெரிதளவு ஈடுபாடில்லாதபோதும் தொடர்ந்து என்னைப் பார்க்கத் தூண்டிய சியாமளாவிற்குத்தான் நன்றி கூறவேண்டும்.
தென்கிழக்காசியாவில் இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற இடங்களில் நான் பார்த்த புத்தர் சிலைகள் எல்லாவற்றிற்கும் தொடர்புள்ளதாக ஒடிசா இருந்திருக்கிறது. பிற்காலத்தில் வஜ்ஜிரஜானம் என்ற பௌத்தப் பிரிவின் தொடக்கப் புள்ளியாக ஒடிசா மட்டுமே உள்ளது.
பௌத்தத்தின் நலிவு மூன்றாவது நூற்றாண்டில் (கி.பி. 3 ) குப்த வம்ச காலத்தில் தொடங்கியது. ஆனாலும் 7ம் நூற்றாண்டில் சீன யாத்திரிகர் (Hiuen-T-sang) என்பவரின் குறிப்புப்படி, பௌத்தம் கலிங்கத்தில் முக்கிய மதமாகவும் 100 மேற்பட்ட புத்த மடங்களும், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மகாயான பௌத்த பிக்குகளும் கலிங்கத்தில் இருந்ததாகவும் அறியக்கிடக்கிறது.
தாந்திரிக பௌத்தம் ஒரு காலத்தில் அரச ஆதரவை பெற்றிருந்தது. தற்போது ஒடிசாவின் வட பகுதியில் இருக்கும் சாம்பல்புரியில் அரச மதமாக உள்ளது.
அங்கிருந்த தாந்திரிய பௌத்தத்தில் ( பல பிரிவுகள் உள்ளன) ஒரு பிரிவு பத்மசம்பவர் என்பவரால் திபெத்துக்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறது.
ஒடிசா பௌத்தத்தை வளர்த்ததுபோல் பௌத்தம் ஒடிசிய மொழி, கட்டிடக்கலை என்பன விருத்தியடைய உதவியுள்ளது.
பல இதிகாசங்களின் பாடல்கள் ஒடிசிய மொழியில் பனை ஓலையில் எழுதப்பட்டிருந்ததை புவனேஸ்வர் அருங்காட்சியகத்தில் கண்டேன். மொழி
புரியாத போதும் பார்த்து வியக்க முடிந்து.பல இடங்களில் இன்னமும் பனை ஓலையில் உல்லாசப் பிரயாணிகளுக்காக எழுதுகிறார்கள்.
மொழியைப் பற்றி எனது கார்ச் சாரதியின் கருத்து முக்கியமானது.
எனது சாரதி தங்கள் மொழியை இளைஞர்கள் பேசுவது குறைந்துவிட்டது என்றும் இந்தியே முக்கிய மொழியாகி வருகிறது என்றும் விசனப்பட்டார்.
“மொழிகளும் மதங்களைப் போல், ஒன்றை ஒன்று விழுங்குவன என்பது உண்மை” என அவருக்குச் சொன்னேன்.
“அப்படியா?” என அவர் வியந்து நின்றபோது,
“எனது மொழியான தமிழைப் பேசும் தமிழ் நாட்டில், இந்தியில்லை ஆனால் ஆங்கிலமே படித்த இளைஞர்களின் பேசும் மொழி” என்றேன்.