“வசப்படுதலும் வசப்படுத்தலும்” …. (முகநூல் மெசஞ்சர் வழியாக) …. ஏலையா க.முருகதாசன்.
வசப்படுதலும் வசப்படுத்தலும் என்ற சொற்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று உற்று நோக்கும் போது இச்சொற்கள் நற்செய்கைகள் சார்ந்த எதையம் விளித்துச் சொல்லும் வழக்கம் சமூகத்தில் இல்லை.
தாயகத்தில் அவன் வசப்பட்டுவிட்டான் என்றோ,அவள் வசப்பட்டுவிட்டாள் என்றோ,அவனை என்ன போட்டு வசப்படுத்தினார்களோ என்றோ அவளை எதைச் சொல்லி வசப்படுத்தினார்களோ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.
பெண்பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் ஒரு இளைஞன் அங்கிருக்கும் பெண்பிள்ளைகளில் ஒருத்தியைக் காதலித்தால் போயும் போயும் இத்தனை பொம்மபிளைப் பிள்ளையள் இருக்கும் வீட்டில் போய் விழுந்துவிட்டானே என்று பெற்றோர்களில் சிலரும் அவதூறு பரப்புவதை பலர் அறிந்திருக்கலாம்.
அதே வேளை,திருமணமான பெண்களையே அவர்களின் பலவீனங்களையோ குறைகளையோ கண்டறிந்து அவர்களை தமது ஆசைக்கு இணங்க வைக்கும் முயற்சிகளை எடுக்கின்ற காமுகர்களையும் தமிழ்ச் சமூகம் அறிந்திருக்கின்றது .
இது கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கொப்பு சில தவறான ஆண்களால் பெண்கள் மூளைச்சலவை செய்யப்படுவதும் உண்டு.
நவீன கணிணி யுகத்தை கண்டுள்ள இன்றைய சமகால வாழ்வில் பல்வேறுபட்ட சமூக வலைத்தளங்களைப் பாவிப்போரில் கணிசமான தொகையினரான தவறான மனிதர்கள்: இச்சமூக வலைத்தளத்தை தமது வக்கிரபுத்திக்கு பயன்படுத்துவதையும் காண முடிகின்றது.
பெண்களில் சிலர் யதார்த்தமாக ஆண்களுடன் சிரித்துப் பேசுவதையும் எளிமையாகப் பழகுவதையும் ஆண்களில் சிலர் அத்தகு பெண்களைப் பற்றித் தவறாக எடை போடுவதும் அவர்களுடன் முகநூல் மெசஞ்சர் வழியாக தொடர்பு கொண்டு மிக மோசமான தமது எண்ணங்களை வெளிப்படுத்துவதும் உண்டு.
சில பெண்களும் அவர்களை நம்பி தமது குடும்பத்தில் உள்ள குறைகுற்றங்களை அவர்களுக்குச் சொல்ல அதை மோசமான எண்ணங்களுடன் அவர்கள் சொன்னதை அவர்களின் அந்தப் பலவீனத்தை தூண்டிலாக்கி மெல்ல மெல்ல பெண்களின் மனதை வசப்படுத்த முயற்சிப்பதுண்டு.சில பெண்கள் தமது கணவர்களின் குறைகுற்றங்களை தமது முகநூல் ஆண் நண்பர்களுடன் அவர்களை நம்பி மெசஞ்சர் வழியாகப் பகிர்ந்து கொள்வதும் உண்டு.
ஒரு குடும்பப் பெண் மன ஆறுதலுக்காகவேணும் தனது மனக்குறைகளை முகநூல் வட்ட நண்பிகளுடன்கூட பகிர்ந்து கொள்வதுகூட மிகத் தவறானது என்பதே எனது ஆணித்தரமான கருத்தாகும்.
தனது மன அமைதிக்காக தனது மனக்குறைகளை பெற்றோர்,தனது கூடப்பிறந்த சகோதரங்கள் தவிர்ந்து வேறு எவருடனுமே பகிர்ந்து கொள்வது தவறானதே.
முகநூல் வழியாகப் பழகும் நண்பியிடம் அவர் நல்லவர் என நம்பி பகிரும் தனிப்பட்ட விடயங்கள்கூட அவர்களின் ஆண் நண்பர்களுக்கு நாளடைவில் போய்ச் சேருவதுண்டு.
தவறான எண்ணமுள்ள ஆண்கள் முதலில் அவர்களின் உடையில் ஆரம்பிப்பார்கள்.உங்களை அந்தக் கல்யாண வீட்டில் பார்த்தன் அந்தச் சாறியில் நீங்கள் நடிகை மாதிரி இருந்தீர்கள் என்று தொடங்கி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மெல்ல மெல்ல நுழையத் தொடங்குவார்கள்,அதன் மூலம் அவர்களின் விருப்பு வெறுப்பு அறிந்து கொள்வார்கள்.வாழ்க்கை என்பது, மனம் தொடங்கி உடல் வரை எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்பார்கள்.ஒருமுறைதானே வாழ்க்கை அதை வாழ வேண்டும் என்பார்கள்.இறந்த பிறகு எதைக் காணப் போகிறோம் என்பார்கள்.இளமை போனால் திரும்ப வராது என்பார்கள். இவ்வாறாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தமது வக்கிர எண்ணங்களுக்கு அக்கறை என்ற முலாம் பூசி தாம் தொடர்பு கொண்ட பெண்களை வசப்படுத்த முயற்சிப்பார்கள்.
தமது குடும்பத்தில் காணப்படும் பிரச்சினைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள் தவறான மனிதர்களின் நயவஞ்சக வார்த்தைகளை ஆறுதல் வார்த்தைகள் என நம்பி தம்மை இன்னும் சிக்கலுக்கு உள்ளாக்கி விடுவதும் உண்டு.
அவர்களை வசப்படுத்தி தமது வலையில் சிக்க வைக்க இத்தகு வக்கிரபுத்தியும் கேடுகெட்ட எண்ணமும் உள்ள ஆண்கள் முயற்சிப்பதுண்டு.
இது பெரும்பாலும் முகநூல் மெசஞ்சர் வழியாகவே நடைபெறுகின்றது.மெல்ல ஆரம்பிக்கும் வசப்படுத்தலால் வசப்படும் பெண்கள் நாளடைவில் பாரதூரமான துயரங்களைச் சந்திக்க வேண்டிவரும்,சந்தித்தும் இருக்கிறார்கள்.
புத்திசாலிப் பெண்கள் தமது முகநூல் மெசஞ்சருக்குள்ளால் முகநூல் ஆண்கள் எழுதும் விதத்தை வைத்தே,அவருடைய மோசமான மனநிலையைப் புரிந்து கொண்டு முகநூல் நட்பு வட்டத்திலிருந்து அவர்களை நீக்கிவிடுவார்கள்
ஐரோப்பிய நாடுகளில் மிக அறிமுகமான ஆண்களில் சிலரும் பெண்களில் சிலரும் சந்திக்கும் பொழுதுகளில் அணைத்துக் கொள்வது என்பது சர்வசாதரணமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
ஒரு முறை நான் எனக்கு நன்கு அறிமுகமான பெண்களிடம் கேட்டேன் ஒரு ஆண் உங்களை அணைக்கும் போது ஆண்களின் அணைப்பு நேர்மையானது நேர்மையற்றது என்பதை எவ்வாறு உணர்ந்து கண்டுபிடிப்பீர்கள் என்றேன்.அதற்கு அவர்கள் ஒரு ஆண் அணைக்கும் விதத்தையும் அவரின் முகம் காட்டும் பாவனையிலிருந்தும் கண்டு கொண்டு அவருடன் கதைப்பதையே நிறுத்திவிடுவோம் என்றனர்.
முகநூல் மெசஞ்சர் வழியாகவே ஆண்களை துரிதமாக நம்பும் பெண்கள் வசப்பட்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவதிப்படுகிறார்கள்.