மூவின மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சிங்கள அரசியல்வாதி : மரணத்தை முன்கூட்டியே அறிந்த பாலித்த
தென்னிலங்கையில் மனிதநேயம் கொண்டவரான முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் இழப்பு செய்தி நாட்டிலுள்ள மூவின மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரதியமைச்சராக செயற்படும் அரசியல்வாதி என்ற நிலையை கடந்து தானும் சாதாரண மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரின் வாழ்க்கை நடைமுறைகள் காணப்பட்டிருந்தன.
இந்நிலையில், தனது மரணத்திற்கு ஏற்கனவே தயாராக இருந்ததாக பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே அறிந்த மரணம்
மரணிக்க சில வாரங்களுக்கு முன்னர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது மரணம் நிகழ்ந்தால் அதற்கான பெரிய செலவுகள் எதனையும் செய்யக் கூடாது என தனது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்னை அடக்கம் செய்ய பயன்படுத்தும் பிரேத பெட்டிக்கு கூட சிறிய தொகையை செலுத்திவிட்டு அந்த பணத்தில் வீட்டிற்கு வரும் சிறுவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பொருட்களை பெற்றுக் கொடுக்குமாறு கூறியுள்ளேன்.
மக்கள் கூட்டம்
மேலும் எனது மரணத்திற்கு மக்கள் கூட்டமாக வருவார்களா என தெரியவில்லை. அதிகாரத்தில் இருந்தால் மாத்திரமே மக்கள் ஒருவரை தேடி வருவார்கள்.
அதனால் யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம். நால்வர் இணைந்து என்னை தூக்கி சென்று புதைத்தால் போதும் என சிறிய மகனிடம் கூறிவிட்டேன்.
எனது பெரிய மகன் எனக்கு முன்னரே உயிரிழந்துவிட்டார். நான் அவருக்கும் தொல்லை கொடுத்தததில்லை. சொத்துக்கள், வாகனங்கள் மீது எனக்கு எவ்வித ஆசையும் இல்லை.
மக்கள் சொத்துக்கள்
பதவியில் இருந்த காலத்திலும் கிராமங்கள் முழுவதும் நடந்தே செல்வதனை பழக்கமாக கொண்டுள்ளேன். மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து வீடுகள், சொத்துக்களை சேர்த்துக் கொள்ளவில்லை. மக்களின் அன்பை மட்டுமே சம்பாதித்துள்ளேன்.
நான் எனக்கான தேவைகளை தனியாக தேடிக் கொண்ட ஒருவன் . நான் யாருக்கும் சுமையாக இருந்ததில்லை. செல்லும் இடம் எல்லாம் மக்கள் என்னை சூழ்ந்துக் கொள்வார்கள்.
நான் சுயமாக வாழ்ந்த மனிதன் என்று நான் இல்லாத போது வரலாற்றில் இருப்பேன் என நினைக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.