இலக்கியச்சோலை

“ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்”: உலக அரசியலை புரிய வைக்கும் நூல்! …. தீபச்செல்வன்.

ஈழத் தமிழர்கள் தம்மை பாலஸ்தீன மக்களுக்கு ஒப்பானவர்களாக கருதிக்கொள்ளுகின்ற ஒரு நிலை இருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவானதொரு போக்கு ஈழத்தில் நெடுங்காலம் நிலவுகிறது. அதேவேளை தமக்கென்று ஒரு நாடற்ற நிலையில் இஸ்ரேலை உருவாக்கிய இஸ்ரேலியர்களிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டென்ற பார்வையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.
இந்த சிக்கலான அரசியலை புரிந்துகொள்ள ஜீவநதி பதிப்பகத்தின் 351 ஆவது வெளியீடாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகி உள்ளது.
உலக அரசியல் சார்ந்த விடயங்களை நாம் அதிகமும் கற்றுக்கொள்வது இன்றைய உலக அரசியலின் போக்கை புரிந்து கொள்ளவும் ‘ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்’ எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் உதவும் என இந்நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விடுதலை போராட்டங்கள் குறித்த ஆழமான புரிதலை எழுத்தாளர் ஐங்கரன் கொண்டிருப்பதற்கு உலக வரலாறு குறித்த அவரது அரசியல் அறிவும், உலக அரசியல் குறித்த அவரது ஆழமான புரிதலும் தான் அடிப்படையானவை. உலக அரசியலின் முகங்களை, ஆயுத அரசியலின் அர்த்தங்களை, ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை, சமகால உலக அரசியலில் பொதிந்துள்ள தந்திரங்களின் முகங்களை என இவர் தன் எழுத்துக்களின் வழியாக தரும் செய்திகள் மிகவும் அதிர்வு தரக்கூடியவை என்றும் இந்நூலின் முன்னுரையில் எழுத்தாளர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பங்காளனாக, செயற்பாட்டாளனாக தன் பயணத்தை தொடங்கிய விக்கினேஸ்வரா ஐங்கரன் அவர்கள், எழுத்து வழியாக மிக நெடுங்காலமாக ஈழ விடுதலைக்கும் இலக்கியத்திற்கும் பெரும் பங்களிப்பை செய்து வருபவர். இன்றுவரை எழுத்தாகட்டும், மனிதாபிமானச் செயல்களாட்டும் துடிதுடிப்பான ஒரு இளைஞனாகவே எனக்கு எழுத்துக்களின் வழியும் செயற்பாடுகளின் வழியும் தென்படுகின்றார்.
கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் என்று இடையறாத பயணத்தை தொடர்கின்ற ஐங்கரன், ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் வெளிவந்த முக்கிய இலக்கிய நூல்கள் சிலவற்றிலும் பின்களப் பணியாளனாக இருந்து செயற்பட்டும் வந்திருக்கிறார். இலங்கைப் பதிரிகைகளிலும் சர்வதேசப் பத்திரிகைகளிலும் அவர் எழுதி வரும் பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகள் இன்றளவும் முக்கியமானவை. அவை பல நூல்களாகவும் வெளிவந்துள்ளன.
அரசியலை, மக்கள் உணர்வு நிலையை, போராட்டத்தை, பல்வேறு விழிப்புணர்வூட்டும் செய்திகளை மிகவும் சுவாரசியமான முறையில் இவர் எழுதுகின்றார். வணக்கம் இலண்டன் இணையத்தில் இலக்கியம் மற்றும் அபுனைவுகள் பகுதியில் இவரது கட்டுரைகள் பல அதில் பதிவேற்றப்பட்டுள்ளன.!அவற்றுக்கு வணக்கம் இலண்டன் இணையதளத்தின் வாசகர்கள் மத்தியில் பெருத்த வருவேற்பு காணப்படுகின்றமை இங்கு குறிப்பிட வேண்டிய செய்தி.
புலம்பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் வாழ்கின்ற போதும், அவரது நினைவுகள் யாவும் ஈழத்தை சுற்றியும் ஈழ விடுதலையைச் சுற்றியுமாகவே இருக்கிறது. அதனால்தான தினம்தோறும் ஈழம் குறித்து பல கட்டுரைகளை எழுதிக் கொண்டே இருக்கின்றார். எனக்கு மாத்திரமல்ல, பலருக்கும் அது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. ஈழத்தின் சமகால நிகழ்வுகளை மாத்திரமின்றி, வரலாற்று நிகழ்வுகளையும் நினைவுபடுத்தும் பல முக்கிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.
ஈழத்தின் இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், ஈழத்தின் பத்திரிகைத்துறை சார்ந்த தகவல்களையும் பத்திரிகைத்துறை ஆளுமைகள் சார்ந்த தகவல்களையும்கூட தன் எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார். காலத்திற்கு முந்தைய தலைமுறையில் இருந்து இன்றைய தலைமுறை வரையான இந்த அவதானம் வியப்பையும் ஆச்சரியத்தையும் தருகிறது.
சில மாதங்களின் முன்னர் வெளியான “பாலஸ்தீனம் எரியும் தேசம்” என்ற கட்டுரை நூல் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈழத்தில் அபுனைவு சார்ந்த நூல் ஒன்று அதிகம் விற்றிருப்பது என்பது மகிழ்ச்சி அளிக்கின்ற செய்தியாகும். தற்போது “ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்”என்ற புதிய நூல், உலக அரசியலை புரிந்துகொள்ள உதவும் இவரின் எழுத்துக்களில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒரு தொகுதியாக இருக்கும் என்றும் எழுத்தாளர் தீபச்செல்வன் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
– தீபச்செல்வன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.