இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக புதிய தடைகள்: அமெரிக்கா முடிவு
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு கடந்த சனிக்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இந்த சூழலில், இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து கொள்ள வேண்டும் என்று ஈரான் எச்சரித்து உள்ளது. இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் எங்களுடைய தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியே நாங்கள் தொடுத்த தாக்குதல் ஆகும் என ஈரான் தெரிவித்தது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அடுத்து, ஜி-7 உறுப்பு நாடுகள், கூட்டணியினர் மற்றும் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து அதிபர் பைடன், விரிவான ஆலோசனையை மேற்கொண்டார்.
இதன்படி, வருகிற நாட்களில் ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும். ஈரானின் ராக்கெட் மற்றும் ஏவுகணை திட்டங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சி காவல் படை மற்றும் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு ஆதரவு தரும் அமைப்புகளுக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்படும் என அவர் கூறினார்.
இதேபோன்று, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் கூட்டணி நாடுகளும், நட்பு நாடுகளும் கூட வரவுள்ள நாட்களில் தடை விதிக்க கூடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என ஜேக் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளில், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் தொடர்புடைய தடைகளுடன், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 600-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டது என்று நினைவுகூர்ந்து பேசினார்.
இதனால், பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பது மற்றும் பிற வடிவிலான சட்டவிரோத வர்த்தகம், பயங்கர மனித உரிமைகள் துன்புறுத்தல்கள், பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இதில், ஹமாஸ், ஹிஜ்புல்லா, ஹவுதி மற்றும் கடைப் ஹிஜ்புல்லா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த அழுத்தம் தொடரும்.
ஒரு நிலைத்தன்மையற்ற சூழலுக்கு தள்ளும், தீங்கு ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட ஈரான் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டணி அரசுகள், நட்பு நாடுகள் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் உதவியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்காது என்றும் அவர் கூறினார்.