தெல்லிப்பழை அம்பனைக் கலைப்பெருமன்றமும் கவிநாயகர்,மதுரகவி திரு.வி.கந்தவனம் அவர்களும்! … ஏலையா க.முருகதாசன்.
கவிஞர் திரு.வி.கந்தவனம் அவர்கள் இப்பொழுது எம்மோடு இல்லையென்பது இல்லை என்ற நினைவழியா நினைவுகளை மனதில் இருத்தி இக்கட்டுரையை எழுதுகிறேன்.
இது மகாஜனக் கல்லூரிக்கருகில் இயங்கிய அம்பனைக் கலைப்பெருமன்றத்தோடு மதுரகவி எனத் தக்கார் நிலைகொண்டு அழைக்கப்பட்ட கவிஞர் வி.கந்தவனம் அவர்கள் எமது மன்றத்தோடு 1968களிலும்,தொடர்ந்து பயணித்த இலக்கிய இணைவுகாண் பதிவிது.
கவிஞர் திரு.வி.கந்தவனம் அவர்கள் எமது மன்றம் வருடாவருடம் நடத்திய உழவர் விழாவில் கவியரங்க நிகழ்ச்சியில் கவிநாயகராகவம்,பட்டிமன்ற நிகழ்வுகளில் நடுவராக இருந்து விழாவுக்கு மெருகூட்டிச் சிறப்புச் செய்தவர்.
எமது மன்ற உழவர் விழா அம்பனை ஞானவைரவர் ஆலய முன்றலிலும்,மகாஜனக் கல்லூரி திறந்தவெளி அரங்கிலும் நடைபெற்றன.
புலம்பெயர் நாடுகளில் நடனம் என்றால் அதற்கென்று அதை இரசிக்க ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும்.ஆனால் அன்று கவியரங்கங்களையும்,பட்டிமன்றங்களையும் இரசிக்கவென விழாக்களில் பெரும்கூட்டமே கூடும்.
மிகச் சிறந்த கவிஞர்கள் பங்குபற்றுகையில் இலக்கியச் சுவைக்கும் சிலேடைச் சொற்களுக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமே இருக்காது.கவிநாயகர் தலைமையில் அம்பனைக் கலைப்பெருமன்றத்தின் உழவர் விழாவில் திரு.கதிரேசர்பிள்ளை,திரு.நாகராஜா,திரு.ஐயாத்துரை,திரு.காரை சுந்தரம்பிள்ளை ஆகியோர் பங்கு பற்றுகிறார்கள் என்றால் அம்பனை ஞானரைவர் முன்றல் மக்களால் நிரம்பி வழியும்.உழவர் விழா மகாஜனாவின் திறந்தவெளி அரங்கில் நடக்குமானால் மைதானம் கவிஇரசிகர்களால் நிரம்பி நிற்கும்.
யார் தலைமை வகிக்கிறார் எனக் கேட்டு மதுரகவி என்பதை அறிந்து அம்பனை வயலில் வேலை செய்யும் உழவர்கள் நேரத்தோடு பட்டை கடகம் மண்வெட்டி என அனைத்தையும்கூட தம்மோடு கொண்டு வந்து கவியரங்கை இரசிப்பார்கள்.சாவகச்சேரி நுணாவிலில் பிறந்து வளர்ந்து குரும்பசிட்டீ என்னும் கல்வியும் இலக்கியமும் ஒருங்கிணைந்த ஊரில் திருமணம் செய்தவர் இலைக்கியச்சுவை கவிநாயகர் திரு.வி.கந்தவனம் அவர்கள்.யாழ் மாவட்டத்தில் இவரை அறியாத இலக்கியகர்த்தாக்கள் யாருமே இருக்க முடியாது.
அம்பனைக் கலைப்பெருமன்றம் குரும்பசிட்டியில் பொன் பரமானந்தா வித்தியாலயத்தில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் சிதைந்த வாழ்வு என்ற நாடகத்தை மேடையேற்றியது.நாடகப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது ஒவ்வொரு நாடகம் பற்றிய குறை நிறைகளைக் கூறிய தலைமை நடுவர்
கவிஞர் திரு.வி.கந்தவனம் அவர்கள் நெருப்பு நாடகத்தில் பெண் வேடமிட்டவர் மட்டுமே நடித்திருந்தார்ஆனால் சிதைந்த வாழ்வில் அனைவருமே நடித்திருந்தனர்.ஒரு நாடகம் தோப்பாக இருக்க வேண்டும்,தனிமரம் தோப்பாகாது என்று கூறி எமது நாடகத்துக்கு முதற்பரிசை அறிவித்தார்.
ஒருமுறை உழவர் விழா சம்பந்தமாகக் கதைப்பதற்காக அப்பொழுது மன்றத்தின் தலைவராகவிருந்த திரு.ஆ.சிவநேசச்செல்வன் அவர்களுடன் மதுரகவி அவர்களின் வீட்டுக்குப் போயிருந்தோம்.சுவையான தேநீருடன் அதைவிடச் சுவையான நகைச்சுவை கலந்து உரையாடல் அங்கு இடம்பெற்றது.ஒப்பீடுகள் சொல்லி உதாரணம் சொல்லி ஊரையாடுவதில் அவர் ஒரு விற்பன்னர்.அவரின் நினைவுகள் என்றும் எம்முடனிருக்கும்.