அமெரிக்காவில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: இந்திய வம்சாவளி எம்.பி., கவலை
‛ அமெரிக்காவில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து விட்டது ” என, இந்திய வம்சாவளி எம்.பி., ஒருவர் கவலை தெரிவித்து உள்ளார்.
அமைதியான மதம்
இது தொடர்பாக ஸ்ரீ தனேதர் என்ற எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: ஹிந்துக்கள் மீது அமெரிக்காவில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஆன்லைன் மற்றும் மற்ற வழிகளில் தவறன செய்திகள் பரப்பப்படுகின்றன.
தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. சமீப நாட்களில் இது போன்ற தாக்குதல் அதிகரித்து உள்ளது. இது ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு போல் நான் உணர்கிறேன். இந்த நேரத்தில் ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது.
உங்களுடன் நான் இருக்கிறேன். ஹிந்து மதத்தை பின்பற்றுகிறேன். ஹிந்து குடும்பத்தில் ஹிந்துவாக வளர்ந்த எனக்கு ஹிந்து என்றால் என்ன என தெரியும். அது மிகவும் அமைதியான மதம். மற்றவர்களை தாக்கும் மதம் அல்ல. இருப்பினும் இச்சமூகம் தொடர்ந்து தவறாக சித்தரிக்கப்படுகிறது. தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடிதம்
சமீபத்தில், இந்திய வம்சாளி எம்.பி.,க்களான ஸ்ரீதனேதர் , ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமிபெரா மற்றும் பிரமிளா ஜெயக்குமார் ஆகியோர், ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.