இந்தியாவைப் போல இலங்கையும் செயற்படவேண்டும்..! வலுக்கும் எதிர்ப்பு
இந்தியாவைப் போன்று இலங்கையிலும் கடற்தொழிலுக்கு தடைக்காலத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் பின்பற்றப்படும் இந்த முறைமை இலங்கையில் பின்பற்றப்படாமை குறித்து கடற்றொழிலாளர் சங்கத்திடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அகில இலங்கை கடற்தொழில் மக்கள் தொழிற்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா மேற்கண்ட விடயத்தை கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடற்தொழிலுக்கான தடைக்காலம்
“நேற்று (15) முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை, கடற்தொழிலுக்கான தடைக்காலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் இன்னும் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படவில்லை, இந்தியாவைப் போன்று இலங்கையிலும் கடற்தொழிலுக்கு தடைக்காலத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை
கடந்த 3 வருடங்களாக எங்களால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும், எந்தவொரு அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.” என்றார்.
இதேவேளை, யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கடற்பரப்பில் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திணைக்களத்தினால் எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை, எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.