“ஆறு அது ஆழமில்ல” … கவிதை … சங்கர சுப்பிரமணியன்.
காதலியிடம் கனிந்துருகி பேசினேன்
தென்றல் வீசுகிறதென்றேன்
ஆம் என்று அருகினில் வந்தாள்
பூங்காவில் யாருமில்லை என்றேன்
அதனாலென்ன என்று கண்ணால் பேசினாள்
நித்திரை வருகிறதென்றேன்
நெருங்கி வந்து தோளில் சாய்த்தாள்
உன் கண்கள் பளபளக்கிறது என்றேன்
என் நெற்றியிலாடிய சுருள் முடியை இழுத்தாள்
என்னை மறக்க மாட்டாயே என்றேன்
மறக்கத்தான் முடியுமா இனி என்றாள்
ஏன் அப்படிச் சொல்கிறாய் என்றேன்
என்னுள் பதிந்த நீங்கள் எழுந்து செல்ல முடியாதென்றாள்
வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறதென்றேன்
மப்பும் மந்தாரமுமாக இருந்தால் பிடிக்குமா என்றாள்
ஆம் என்று சொல்லி அங்கே செல்லும் இளம்
பெண்ணைப் பார் என்றேன்
என்னால் எழுந்து செல்ல முடியாதென்றவள்
சட்டென எழுந்து சென்று விட்டாள்
ஏன் எழுந்து சென்றாள்?
நான் ஏதாவது சொல்லக்கூடாததை சொல்லிவிட்டேனா?
அங்கே செல்லும் இளம் பெண்ணைப்பார் என்றுதானே சொன்னேன்
அதற்கு முன் என்ன சொன்னேன்?
வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்குதென்றுதானே சொன்னேன்
ஆறு அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசு தான்யா
இந்த பாடல் ஏன் மனதில் எதிரொலிக்கிறது?
-சங்கர சுப்பிரமணியன்.